தமிழ் சினிமா நிறைய நல்ல நடிகர்களை கொடுத்திருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களில் புகழின் உச்சத்திற்கு செல்கிறவர்களைப் பற்றி மட்டுமே நாம் அதிகம் பேசுகிறோம். நிறைய குணச்சித்திர நடிகர்களின் தனித்துவம் குறித்து நாம் பெரிதாக பதிவு செய்வதில்லை., அவர்களை கவனிப்பதில்லை. அதுபோலொரு கவனிக்கப்படாத திறமையான நடிகர் காளிவெங்கட். அவர் நடித்த படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை கவனித்தால் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு தனித்த அடையாளத்தை பதிவு செய்ய அவர் முயற்சித்திருப்பது தெரியும். மேலோட்டமாக பார்த்தால் பெரும்பாலும் ஹீரோக்களின் நண்பராக வருவார் காளி வெங்கட்., ஆனால் தனக்கு கிடைக்கும் சின்னச் சின்ன ப்ரேம்களில் தன்னை அழகாக திரையில் வழங்கி நிற்பார்.
கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட காளி வெங்கட் தமிழ் சினிமா மீதான பிரியத்தின் காரணமாக சென்னை நோக்கி உந்தப்பட்டார். 2010ஆம் ஆண்டு வா (குவாட்டர் கட்டிங்) துவங்கி தொடர்ந்து பல படங்கள் அவர் நடித்து வந்த போதும் அவருக்கு முண்டாசு பட்டி ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். தென் தமிழகப் பகுதியான கோவில் பட்டியைச் சேர்ந்தவர் என்ற போதும் கோவையின் வட்டார வழக்கை முண்டாசு பட்டியில் அருமையாக பேசி அசத்தி இருப்பார். நகைச்சுவை நடிகரா காளிவெங்கட்.? என்ற கோணத்தில் பார்த்தாலும் கூட மற்ற நகைச்சுவை நடிகர்களில் இருந்து அவர் சற்றே மாறுபட்டவர். சந்தானம் போல, யோகி பாபு போல உடல் மொழி, உடல் பரிகாசம் ஆகியவற்றை தவிர்த்து மிக செட்டில்டாக வசனங்களை தெளிவுற பேசி அசத்துவார். 37 வயதேயான காளி வெங்கட்டுக்கு கொடுக்கப்பட்ட சவாலான கதாபாத்திரம் குடிகார தந்தை. சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச் சுற்று திரைப்படத்தில் நடித்திருப்பார். ரித்திகா சிங்கின் தந்தையாக வரும் அவர் படம் முழுக்க குடித்துக் கொண்டே இருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு மிகப் பொறுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு அல்லாமல் சென்னையின் வட்டார வழக்கையும் தெளிவுற பேசி அசத்தி இருப்பார்.
மிருதன், தெகிடி, வாயை மூடி பேசவும், மாரி என அவர் நடித்த படங்களைக் கவனித்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாணியிலான திரைப்படங்களாக உள்ளன. கொடி படத்தில் தனுஷின் நண்பராக தன்னுடைய நடிப்பில் அசத்தி இருப்பார். ஹீரோவின் நண்பர் என்ற டெம்ப்ளேட்டுக்குள் முடிந்த மட்டும் சிக்காமல் தனக்கான அடையாளத்தைக் கொடுக்கும் கதைகளை காளி வெங்கட் தேர்வு செய்து நடிக்கிறார். சூரரைப் போற்று திரைப்படத்தில் “மாப்ள ப்ளைட் வாங்க நான் காசு தறேன்” என்று சொல்லும் இடமாகட்டும், கடைசி காட்சியில் விமான பயணத்திற்குப் பிறகு நெகிழ்ந்து கண்கலங்கும் காட்சியாகட்டும் எல்லாமே தரம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் பெரிய நடிகர் பட்டாளமே நடித்தது என்றாலும் அனைவருக்கும் மத்தியிலும் கூட அப்படத்தில் காளி வெங்கட் கதாபாத்திரம் குறித்து பலரும் பேசினர். பெரிய அலட்டல் இல்லாமல் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நிரூபிக்கிறார் அவர். இவரது நடிப்பிற்காகத்தான் ராஜா மந்திரி படத்தில் கலையரசன் உடன் இரண்டு முன்னணி ஹீரோவில் ஒருவராக நடித்திருந்தார்.
நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என்ற எந்த வகைமைக்குள்ளும் சிக்காமல் தான் ஒரு நடிகர் என்ற திசையில் தொடர்ந்து பயணிக்கிறார் காளி வெங்கட். இப்போதும் கூட தனக்கு பெரிய டார்கெட்கள் எதுவும் இல்லை. கிடைக்கும் கதாபாத்திரங்களில் பிடித்தவற்றை தேர்வு செய்து நடிக்கிறேன் எனச் சொல்லும் காளிவெங்கட் நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உருவெடுக்கும் காலம் வெகுவிரைவில் வரும்.
காளி வெங்கட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.