”ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் ஏன் இந்தி இருக்கிறது? கனிமொழி அதனை கேட்பாரா?”- கே.டி ராகவன் !

”ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் ஏன் இந்தி இருக்கிறது? கனிமொழி அதனை கேட்பாரா?”- கே.டி ராகவன் !
”ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் ஏன் இந்தி இருக்கிறது? கனிமொழி அதனை கேட்பாரா?”- கே.டி ராகவன் !
Published on

‘யோகா அண்ட் நேச்சிரோபதி’ மருத்துவர்களுக்கான மத்திய ஆயூஷ் அமைச்சகம் நடத்திய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்” என்று ஆயூஷ் அமைச்சகச் செயலர் வைத்யா ராஜேஷ் கூறியது கண்டனங்களைக் குவித்து வருகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று வைத்யா ராஜேஷ் சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம்” என்று கண்டனங்களுடன் கேள்வியெழுப்பியுள்ளார், கனிமொழி எம்.பி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இதனை கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில், இந்தி திணிப்பு சர்ச்சைக் குறித்து தமிழக பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி ராகவனிடம் பேசினோம், 

    “ஆயூஷ் அமைச்சகம் நடத்திய பயிற்சியில் 350 அதிகாரிகள்  கலந்துகொண்டார்கள். அதில், 10 நிமிடம்தான் ஆயூஷ் செயலர் வைத்யா ராஜேஷ் இந்தியில் பேசினார். அப்போது, அந்த ஆன்லைன் பயிற்சியில் விரும்பத்தகாத சில சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றனர். அதற்கு, அவர் ‘நான் இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழியிலுமே பேசுவேன். என்னை தொந்தரவு செய்யாதீர்கள்’ என்றார். அதனைத்தான், சில சமூக விரோதிகள்  ’இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்’ என்று கூறியதுபோல தவறாகச் சித்தரித்துவிட்டனர். உண்மையில் அவர், அப்படி சொல்லவே இல்லை. தற்போதுதான், எங்களுக்கு ஆயூஷ் அமைச்சகத்திடமிருந்து தகவல் வந்தது. எனவே, கனிமொழி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ‘இந்தி தெரியவில்லை என்றால் வெளியில் செல்லுங்கள்’ என்று ஒரு அதிகாரி உண்மையிலேயே கூறினால், அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கத்தக்கது; நியாமற்றதும்கூட. மிகப்பெரிய தவறு. ஆனால், இப்போது கனிமொழி கூறிய  குற்றச்சாட்டு பொய் என்று தெரிய வந்துள்ளது.  கனிமொழி இந்தி மொழி குறித்த பிரச்சனைகளில் எப்போதும் இரட்டை வேடம் போடுறார். ஏனென்றால், ஒரு அதிகாரி சொல்லாததை   சொன்ன மாதிரி ’இந்தித் திணிப்பு’ என்று மத்திய அரசு மீது குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர், இதுகுறித்து பேசுவது இரட்டை வேடம்தான்.

       மு.க ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் இந்தி மொழியை சொல்லிக் கொடுத்துக்கொண்டே மத்திய அரசு இந்தி திணிப்பு செய்கிறது என்பது முழுக்க முழுக்க இரட்டை வேடமே. ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் ஏன் இந்தி இருக்கிறது என்றுக்கேட்டால் சி.பி.எஸ்.சி பள்ளி என்கிறார்கள். இந்தியை எதிர்ப்பவர்கள் தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் பள்ளியை நடத்திவிட்டுப் போகலாமே? ஏன் செய்யவில்லை? அவர்கள் பள்ளியில் மட்டும் இந்தி சொல்லிக்கொடுத்துக் கொண்டு ஏன் எதிர்ப்பதுபோல் இரட்டை வேடம் போடவேண்டும்?

 தமிழகத்தில் திராவிடக் கட்சியினர் நடத்தும் 45 க்கும் மேற்பட்ட  பள்ளிகளில் இந்தி இருக்கிறது. கனிமொழி உண்மையிலேயே இந்தியை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், அவர் முதலில் போராட வேண்டியது மு.க ஸ்டாலினின் சன் ஷைன் பள்ளியைத்தான்.  ஆனால், பா.ஜ.கதான் இந்தி திணிப்பு செய்கிறது என்று மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். மத்திய அரசின் கொள்கை அதுவல்ல.

வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா

இந்தி மொழி பிரச்சனையில் மத்திய அரசை இழுக்க கனிமொழிக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. கனிமொழி இதனை மொழி அரசியலாக்கப் பார்க்கிறார். அது தமிழகத்தில் எடுபடாது. மக்களும் நம்பமாட்டார்கள். ஏற்கனவே, இவர்கள் இந்தி பாடத்திட்டத்தில் பள்ளி நடத்துவது மக்களுக்குத் தெரியும். விமான நிலைய சர்ச்சைக்கூட இல்லாத ஒன்றுதான். அதிலும், மத்திய அரசைத்தான் குற்றம்சாட்டப்பார்த்து தோல்வியுற்றார் கனிமொழி. எது நடந்தாலும் மத்திய அரசுதான் காரணம் என்று அரசியல் செய்கிறார். கனிமொழியின் இந்த முயற்சி பலிக்காது. இந்தி தெரியவில்லை என்றால் வெளியில் செல்லுங்கள் என்று ஒரு அமைச்சர் சொல்லியிருந்தால்கூட பா.ஜ.கவை குற்றம் சாட்டலாம். அப்படி ஆட்சியாளர்களும் சொல்லவில்லை. அதிகாரியும் சொல்லவில்லை. பிறகு எதற்கு  மத்திய அரசை குற்றம் சொல்லவேண்டும்?.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com