ஹோட்டல் மேனேஜ்மென்ட் டூ பாலிவுட் நாயகன்... பங்கஜ் திரிபாதியின் உத்வேகப் பயணம்!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் டூ பாலிவுட் நாயகன்... பங்கஜ் திரிபாதியின் உத்வேகப் பயணம்!
ஹோட்டல் மேனேஜ்மென்ட் டூ பாலிவுட் நாயகன்... பங்கஜ் திரிபாதியின் உத்வேகப் பயணம்!
Published on

கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து வெற்றி, அதனால் புகழின் உச்சத்தை அடைந்த ஒரு நடிகர் என்றால், கண்ணை மூடிக்கொண்டு பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியைக் குறிப்பிடலாம். குறிப்பாக, சமீப காலமாக அவரின் திரைப்பயணம் முன்பு இருந்ததை விட போல் இல்லை. சீரியஸான கதாபாத்திரங்கள் முதல் காமெடி கதாபாத்திரங்கள் வரை அவர் செய்த கேரக்டர்கள் அனைத்துக்கும் நல்ல வரவேற்பு. திரைப்படங்களைத் தாண்டி டிஜிட்டல் மீடியம் பங்கஜ் திரிபாதியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்துள்ளது. இதனால், சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவால் 'டைவர்சிட்டி இன் சினிமா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் பங்கஜ்.

உண்மையில் ஒரு நடிகராக பங்கஜ் மேற்கொண்ட பயணத்தையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம். அந்த அளவுக்கு தனது வாழ்க்கையில் கனவுகள், நிராகரிப்பு மற்றும் நம்பிக்கை என பல சூழ்நிலைகளை கடந்தே இந்த நிலைக்கு வந்துள்ளார். பங்கஜ் பீகாரின் பின்தங்கிய பெல்சாண்ட் என்ற கிராமத்தில் விவசாயப் பின்னணியை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தச் சிறிய கிராமத்தில் வளரும் குழந்தையாக இருந்தபோதே மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதே மேடை நாடகங்களில் பெண் வேடமிட்டு நடிப்பாராம்.

என்றாலும், பள்ளிப் பருவத்தின் இறுதியில் பாட்னாவில் தங்கி படித்துக்கொண்டிருந்த பங்கஜ், ஒருநாள் 'அந்த குவான்' என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. அதில் நடித்த நடிகரின் நடிப்பு அவரை கண்ணீரில் ஆழ்த்த, அதன்பின் பள்ளிக் காலம் முடியும் வரை (1994-95 வரை) பாட்னாவில் எங்கு நாடகங்கள் நடந்தாலும், சைக்கிளில் சென்று பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். அடுத்த ஆண்டே அவர் பாட்னா நாடகக் குழுக்களுடன் இணைந்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதற்கு காரணம், சிறுவயதில் அவர் நாடகங்களில் நடிக்கும்போது கிராமத்து மக்களால் கொடுக்கப்பட்ட பாராட்டும் அங்கீகாரமும் நாடகத்தை விரும்ப வைத்திருக்கிறது. அதுவே நடிப்பைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்க அவருக்கு காரணமாய் அமைந்திருக்கிறது.

நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், வாழ்க்கை பற்றிய பயமும், தந்தையின் கல்லூரிக் கனவும் சேர்ந்துகொள்ள, ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிப்பில் இணைந்து ஹோட்டல் தொழிலை கற்றுக்கொண்டுள்ளார். இந்த சமயத்தில் இரவில் ஹோட்டல் சமையலறையில் பயிற்சி எடுத்துவிட்டு காலையில் நாடகம் பார்ப்பது, தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது என்று இருந்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடம் இப்படி சென்றுகொண்டிருக்க இடையில் கல்லூரியில், அவர் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறிய சிறை அறை திரிபாதிக்கு முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொடுத்திருக்கிறது.

சிறைவாசத்தை ஒருமுறை பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட பங்கஜ் திரிபாதி, ``நீங்கள் சிறையில் செய்ய எதுவும் இல்லை. யாரையும் சந்திக்க முடியாது. எதுவும் செய்யாமல், முற்றிலும் தனியாக இருந்தபோது இந்தி இலக்கியங்களைப் படித்தேன். அப்போதுதான், நான் இந்த உலகத்திற்கு எவ்வளவு அந்நியமாக இருந்தேன் என்பதை உணர்ந்தேன். அது என்னை முற்றிலும் மாற்றியது" என நினைவுகூர்ந்துள்ளார்.

பள்ளி, கல்லூரி என பாட்னாவில் 7 ஆண்டுகள் இருந்த பிறகு ஒரு நடிகராகப் பயிற்சி பெற இலவச பயிற்சி பள்ளிகளை தேடிக்கொண்டிருந்த பங்கஜ் திரிபாதிக்கு டெல்லியை தளமாகக் கொண்ட தேசிய நாடகப் பள்ளி தெரியவருகிறது. உடனடியாக டெல்லி சென்று, தேசிய நாடகப் பள்ளியில் இணைந்தவர், 2004-ம் ஆண்டில் படிப்பை முடித்திருக்கிறார். அப்போது பங்கஜுடன் படிப்பை முடித்த மற்றொரு நடிகர், அவரைவிட எட்டு வயது மூத்தவரான நடிகர் நவாசுதீன் சித்திகி. அதே ஆண்டு அக்டோபர் 16 அன்று தனது பாக்கெட்டில் 46,000 ரூபாயுடன் கண்களில் நிறைய கனவுகளுடன் மும்பைக்கு பயணப்பட்டார். ஆனால், டிசம்பர் 25-க்குள், அவரிடம் 10 ரூபாய் மட்டுமே இருந்ததாக ஒருமுறை நினைவுகூர்ந்துள்ளார்.

இதே ஆண்டில் 'ரன்' (2004) திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய வேடமே கிடைத்துள்ளது. இதன்பின் அடுத்த 10 ஆண்டுகள் 'அஃபரன்' மற்றும் 'ஓம்காரா' போன்ற பல பிரபலமான படங்களின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர் நினைத்தது போல் எதுவும் அமையவில்லை. அந்த பத்து ஆண்டுகள், சினிமா தொழில் அவருக்கு பிழைப்பதற்காக கிடைத்த தொழிலாகவே இருந்துள்ளது. இந்த இக்கட்டான தருணத்தை, ``வாடகை கொடுக்க போதுமான பணம் கிடைத்தால் போதும் என்பதே அந்த காலகட்டத்தில் எனது எண்ணமாக இருந்தது. நான் ஒரு நட்சத்திரமாக இங்கு வரவில்லை.

அதேநேரம் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இந்தி சினிமாவில் நடிப்பதன் மூலம் நான் பிழைக்க முடியும் என்று எனக்கு தெரியும். அதனால் எனது வாய்ப்புக்காக காத்திருந்தேன். உயிர் வாழ்வது முக்கியம். கலை இரண்டாம் நிலைதான்" என்று தனது கடினமான தருணங்களை நினைவுகூரும் பங்கஜ் திரிபாதிக்கு 2012-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் வெளிவந்த 'கேங்ஸ் ஆஃப் வாஸப்பூர்' அவரின் வாழ்க்கையை மாற்றியது, புதிய நம்பிக்கையும் கொடுத்தது. ஆனால், இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பல சோதனைகளுக்கு பிறகே அவருக்கு கிடைத்துள்ளது. சுல்தான் குரேசி என்ற கறிக்கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடிக்க இவரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் கிட்டத்தட்ட 8 மணி நேரத்தை கடந்து நடந்திருக்கிறது. இறுதியாக 'கேங்ஸ் ஆஃப் வாஸப்பூர்சா' படத்தில் நடித்த பிறகே பரவலாக அங்கீகரிக்கப்பட்டு புகழ் வெளிச்சத்தைப் பெற்றார்.

இதன்பின் பாலிவுட்டின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் பெரும்பாலும் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலே அவரை தேடிவந்தன. ஆனால், தாதா வேடங்களைத் தாண்டி, பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை ஒரு மேம்பட்ட நடிகராக உயர்த்திக் காட்டினார். சினிமாவில் நடிக்க வந்து 13 ஆண்டுகள் கழித்தே ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது 2017-இல் வெளிவந்த 'குர்கான்' ஆகும். இதே ஆண்டில் அவர் நடித்த 'நியூட்டன்' படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.

இந்திய அளவில் கவனம் ஈர்க்க மனோஜ் பாஜ்பாய்க்கு 'தி ஃபேமிலி மேன் தொடர்' எப்படி உறுதுணை புரிந்ததோ, அதேபோல் பங்கஜ் திரிபாதிக்கு மிர்சாபூர் வெப் சீரிஸ் வெகுவாக கைகொடுத்தது. இந்தத் தொடர்தான் மொழிகளைக் கடந்தது பங்கஜ் திரிபாதிக்கு பெருமளவில் கவனிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை. இதேபோல், நவாசுதீன் சித்திகியின் 'சேக்ரட் கேம்' தொடரிலும் ஒரு கதாபாத்திரத்தில் வலம் வந்திருப்பார். 'லூடோ' திரைப்படத்திலும் தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை கொண்டாட வைத்திருப்பார் பங்கஜ் திரிபாதி.

சமீபத்தில் வெளியான 'மிமி' திரைப்படம், இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. பானு பிரதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்ததிருந்தது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஓடிடி தளங்களில் அதிக படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் அல்லது இந்திய நடிகர் என்று எடுத்துக்கொண்டால், அதில் பங்கஜ் திரிபாதி நிச்சயம் முதலிடம் பிடிப்பார். ஓடிடி தளங்களில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

``மொபைல் சிக்னலே கிடைக்காத எனது வீட்டில் எந்த மூலையில் சிக்னல் கிடைக்கும் என்று தேடிப் பிடித்து எனது போனை கொண்டு போய் வைத்து காஸ்டிங் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என்னை அழைப்பார்கள் என காத்துக்கிடந்திருக்கிறேன். ஆனால், எந்த அழைப்புகளும் வராமலே நாட்கள் கடந்துச் சென்றன. ஆனால், இன்று எனக்கு வரும் பல அழைப்புகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மும்பையில் ஒரு சிறிய வீட்டில், எனக்கு எதாவது இயக்குநர்கள் போன் செய்வார்களா எனக் காத்துக்கிடந்த அதே நடிகர்தான் இன்றும். நான் இன்னும் நடிப்பில் காதல் கொண்ட ஒரு கிராமவாசிதான்.

இன்றுவரை எனக்கு கிடைத்த கேரக்டர்களில் நான் திருப்தி அடைகிறேன். இப்போது நல்ல ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதனால்தான் நிறைய அழைப்புகளை எடுக்க முடியவில்லை. என்றாலும் என்னை வியக்க வைக்கும் அளவு நல்ல கதைகளை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கும். இதற்கு நேரம் எடுக்கும். காலங்கள் ஆனாலும், நான் விரும்பியதை நான் பெறுவேன். நான் ஒரு நடிகன். ஆனால் என் அணுகுமுறை இன்னும் ஒரு விவசாயி போல தான் இருக்கிறது. எப்படி என்றால், நான் விதைகளை விதைத்து விட்டேன். இப்போது நான் செடி வளரும் வரை காத்திருக்கிறேன். இதில் எந்த அவசரமுமில்லை" என்று தனது ஆரம்ப கால போராட்டத்தையும் வெற்றியையும் ஒருமுறை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் பங்கஜ் திரிபாதி.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com