அமிதாப்பை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் 'சாய்ரட்' இயக்குநர்? 'ஜூண்ட்' திரைப்பார்வை...!

அமிதாப்பை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் 'சாய்ரட்' இயக்குநர்? 'ஜூண்ட்' திரைப்பார்வை...!
அமிதாப்பை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் 'சாய்ரட்' இயக்குநர்? 'ஜூண்ட்' திரைப்பார்வை...!
Published on

ஃபன்றி மற்றும் சைரட் திரைப்படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மராத்திய இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே. தற்போது அமிதாப் பச்சன் நடிப்பில் அவரது இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சினிமா ஜூண்ட்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் கவனிக்கப்படாத முகங்களை ஜூண்ட் மூலம் அடையாளப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின மக்களின் அரசியலை பேச முயற்சித்திருக்கிறார் அவர்.

மஹாராஷ்டிராவின் சேரிப் பகுதியொன்றில் வசிக்கும் இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கும் இன்ன பிற தீய பழக்கங்களுக்கும் அடிமையாக இருப்பதை கவனிக்கிறார் ப்ரபசராக வரும் அமிதாப் பச்சன். அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாதையை அவர் காட்டுகிறார். இதை நோக்கிச் சொல்கிறது திரைக்கதை. ஆனால் நாகராஜ் மஞ்சுளே இத்திரைப்படத்தை அணுகியிருக்கும் விதம் நுட்பமானது. அதாவது Slum Soccer உலகக் கோப்பை நடைபெற இருப்பதாக ஒரு தகவல் அமிதாப் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கிறது. அதற்காக அவர்கள் வெளிநாடு புறப்பட வேண்டியிருக்கிறது. இச்சூழலில் போட்டியில் பங்கேற்க இருக்கும் மாணவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட விசயங்களை தயார் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண பாஸ்போர்ட் எடுக்கவே பட்டியலினத்தவர்களுக்கு இடையூராக இருக்கும் சமூக சிக்கல் குறித்து விரிவாக விவாதிக்கிறார் இயக்குநர்.

குறிப்பிட்டுச் சொல்ல நிறைய காட்சிகள் உள்ளன. பட்டியல் சமூக இளைஞர்கள் பலரும் அமிதாப் பச்சனின் வீட்டில் அமர்ந்து அவரவர் குறித்து அறிமுகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். அந்த காட்சியில் பேசும் ஒவ்வொரு முகத்திற்கும் க்ளோஸ் அப் ஷாட் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த முகங்கள் இந்த முகங்களின் வாழ்க்கை, வலி யாவையும் கொஞ்சம் நெருக்கமாக பொதுசமூகம் அணுக வேண்டும் எனச் சொல்வதே அந்த காட்சியமைப்பின் நோக்கமாக உள்ளது. அதற்காக பாராட்டுகள்.

நாகராஜ் மஞ்சுளேவின் சைரட் திரைப்படத்தில் நடித்த ஆகாஷ் தோசர் மற்றும் ரிங்கு ராஜ்குரு ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரிங்குவின் கதாபாத்திரம் பாஸ்போர்ட் எடுக்க முயலும் நிகழ்வுகள் கவனிக்கத்தக்கது. ஒதுக்கப்பட்ட மக்களை இந்தியப் பிரஜைகளாகவே அங்கீகரிக்காத இடங்களை இயக்குநர் படம் நெடுக்க பதிவு செய்கிறார். முதல் பாதியில் கல்லூரி மாணவர்களுடன் சேரி இளைஞர்கள் கால்பந்து விளையாடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரே ஒரு கோல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க இருக்கும் நிலையில் கல்லூரி மாணவர்களின் கோச் அந்த அணியின் கோல் கீப்பரிடம் “கோல் நயி ஓனேகா” என்கிறார். இந்த கோல் நயி ஓனேகாவிற்கு பின்னே இருப்பது வெற்றி தோல்வி குறித்த ஆர்வம் மட்டுமல்ல. எதிரே ஆடும் பட்டியலின இளைஞர்களின் அணி வெல்லக் கூடாது என்ற கசப்பு மட்டுமே. ஆனால் அதையும் அவ்விளைஞர்கள் வெற்றிகரமாக தாண்டுகிறார்கள்.

ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயலும் நபர் அச்சூழலில் இருந்து விடுபட்டு கால்பந்தாட்டக் குழுவில் இணையும் காட்சிகள் இதம். காவல்துறை, பொதுமக்கள், அரசு எந்திரம் என பல இடங்களில் நிராகரிக்கப்படும் அமிதாப்பச்சனின் கால்பந்தாட்டக் குழு இறுதியாக வானில் பறந்தது எப்படி என படம் முடிகிறது. ஏர்போர்ட் காட்சியில் சோதனைப் புள்ளியில் நாயகனுக்கு காவலர் தரும் உளவியல் நெருக்கடி நம்மை சிந்திக்கவைக்கிறது. “நான் நல்ல மார்க் எடுத்தேன் ஆனா பட்டியல் சமூக மாணவருக்கு கிடைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கல” என பலர் அவ்வப் போது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை நாம் கவனிக்கிறோம். அதற்கு பதில் சொல்லியிருக்கிறது ஜூண்ட். பொதுப் பட்டியல் மக்களுக்கு இல்லாத பல லேசர் தடைகள் பட்டியல் சமூக மக்களுக்கு இருக்கிறது அதற்காகவே அந்த கூடுதல் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை ஜூண்ட் நினைவூட்டுகிறது.

ஜூண்ட் பேசியிருக்கும் அரசியல் மற்றும் சமூக கருத்துகள் சரி. கருத்தளவில் நல்ல விசயங்களை முன்வைக்கும் நாகராஜ் மஞ்சுளே திரைமொழியில் இன்னுமே தன்னை நிறைய தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரைக்கதையின் ஏற்ற இறக்கங்கள் சுவாரஸ்யங்கள் என ஈர்க்க பெரிதாக எதுவும் இல்லை. 3 மணி நேர சினிமாவை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். ஷகட் கனேட்கர், அஜய் அடுலின் இசை அதிரடி. அம்பேத்கர் ஜெயந்தி விழா பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. அமிதாப் பச்சன் தன் வயதுக்கும் உடல் மொழிக்கும் ஏற்ற ஒரு நல்ல கதையினை தேர்வு செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல கருத்தினை பேசும் சினிமாவிற்கு அமிதாப் பச்சன் போன்ற முகம் நல்ல பலம்.

ஃபன்றி, சைரட்டை படங்களைத் தொடர்ந்து ஜூண்ட் திரைப்படம் அது பேசியிருக்கும் கருத்தளவில் நாகராஜ் மஞ்சுளேவிற்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது.

.

சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com