ஸ்டார்ட் அப் இளவரசிகள்-17 : பேஷன் துறையில் புரட்சி ஏற்படுத்திய ஜெனிபர் ஹைமன்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-17 : பேஷன் துறையில் புரட்சி ஏற்படுத்திய ஜெனிபர் ஹைமன்
ஸ்டார்ட் அப் இளவரசிகள்-17 : பேஷன் துறையில் புரட்சி ஏற்படுத்திய ஜெனிபர் ஹைமன்
Published on

ஆடைகள் மற்றும் பேஷன் என்றதும் பல விஷயங்கள் நினைவுக்கு வரலாம் என்றாலும் வாடகைக்கு எடுக்கும் வசதி நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் பேஷனான புதிய ஆடைகளையும், வாடகை வசதியையும் இணைக்கும் புள்ளியாக உருவான ரெண்ட் தி ரன்வே (Rent the Runway ) நிறுவனம் மூலம் பேஷன் உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டதோடு, பெண்கள் புதிய ஆடைகளை வாங்கும் அனுபவத்தையும் மாற்றிகாட்டியிருக்கிறார் ஜெனிபர் ஹைமன். (Jennifer Hyman)புதுமையான கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்த இணைய நிறுவனம் மூலம் ஜெனிபரும் அவரது தோழி ஜெனிபரும் ( பிளைஸ்- Jennifer Fleiss ) லட்சக்கணக்கான இளம்பெண்களின் வாழ்க்கையிலும் விலை உயர்ந்த ஆடைகள் தொடர்பான ஏக்கப்பெருமூச்சுகளுக்கு விடை கொடுத்து புன்னகைக்க வைத்துள்ளனர். அதோடு பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கிய சாதனை பெண்களாகவும் இரு ஜெனிபர்களும் உருவாகியிருக்கின்றனர்.

ஆடைகளுக்கான நெட்பிளிக்ஸ், பேஷன் உலகின் உபெர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இவர்களின் நிறுவனம் பகிர்வு பொருளாதாரத்தின் வெற்றிகரமான உதாரணமாக கருதப்படுவதோடு, ஆடைகளை சொந்தம் கொண்டாடுவதற்கு பதிலாக அணிந்து மகிழும் அனுபவத்தில் திளைப்பது எனும் புதிய கருத்தாக்கத்திற்கும் வித்திட்டுள்ளது. ஸ்டார்ட் அப் உலகின் தேவதை கதை என வர்ணிக்கப்பட்டும் இவர்களின் வெற்றிக்கதையை பார்க்கலாம். பேஷன் மோகம் அதற்கு முன்னர் இவர்கள் உருவாக்கிய இணைய நிறுவனம் அப்படி என்ன புதுமை செய்திருக்கிறது என்பதையும் பார்த்து விடலாம்.

ஆடைகள் உலகில் எப்போதுமே பேஷனுக்கு தனி மதிப்பு இருக்கிறது, புதிய பேஷனாக அறிமுகமாகும் ஆடைகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் நிலையில், அவற்றில் பிரத்யேகமானவையாக அமையும் டிசைனர் ஆடைகள் கூடுதல் மதிப்பு பெற்று விளங்குகின்றன. டிசைனர் ஆடைகள் பிரத்யேகான வடிவமைப்பில் உருவாவதால் அவற்றை அணிவது தனி அனுபவமாக அமைகிறது. இதற்காகவே பெண்கள் இவற்றை விரும்புகின்றனர்.
டிசைனர் ஆடைகள் மதிப்பு மிக்கவை மட்டும் அல்ல, விலையும் அதிகமானவை. எனவே அவற்றை எல்லோராலும் வாங்கிவிட முடியாது. எனினும் திருமண அல்லது விருந்து நிகழ்ச்சி போன்றவற்றுக்கு இந்த வகை ஆடைகளை அணிந்துச்செல்வதை தான் பெண்கள் விரும்புகின்றனர். இதற்காக, அதிக விலை கொடுத்து இவற்றை விலைக்கு வாங்கவும் தயங்குவதில்லை.

சாமானிய பெண்களை பொருத்தவரை, டிசைனர் ஆடைகள் அணிந்திருக்கும் போது மகிழ்ச்சியில் மிதக்க வைக்க கூடியவை என்றாலும் அதன் பிறகு குற்ற உணர்விலும் ஆழ்த்தக்கூடியவை. அவற்றின் விலை தான் காரணம். பெண்களின் இந்த முரணான நிலையை எளிதாக புரிந்து கொள்ளலாம். பெண்களின் தடுமாற்றம் முக்கிய விழாக்களில் பங்கேற்க செல்லும் போது பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் ஜொலிக்க விரும்புவதால், அவற்றின் விலை தங்கள் சக்திக்கு மீறியதாக இருந்தாலும் கவலைப்படாமல் வாங்கிவிடுகின்றனர். ஆனால் அதன் பிறகு அந்த விலையுயர்ந்த ஆடை பெரும்பாலும் பீரோவில் தான் தூங்கி கொண்டிருக்கும். வழக்கமான நிகழ்வுகளுக்கு இந்த ஆடைகளை அணிய முடியாது.

மீண்டும் ஏதேனும் முக்கிய நிகழ்ச்சி வந்தால் தான் இந்த ஆடைகளை அணிய முடியும். இப்படி ஒரு முறை அல்லது ஒரு சில முறை மட்டுமே அணியும் ஆடைக்கு ஆயிரக்கணக்கில் டாலர்களை ( நம்மூர் கணக்கில் பல ஆயிரங்கள்) செலவிடுவதுவது சரியா? எனும் கேள்வியை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளவே செய்கின்றனர். ஆனால் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளை கூட மலிவாக எடுத்துக்கொள்ளலாம், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அணியும் ஆடைகளில் எப்படி சிக்கனம் பார்ப்பது எனும் கேள்வியும் அவர்கள் எதிர்கொள்வதாகவே அமைகிறது. பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் இந்த தடுமாற்றத்தை தனது தங்கையின் அனுபவத்தின் மூலம் ஜெனிபர் தெரிந்து கொண்ட போதே, இந்த நிலையை மாற்றுவதற்கான ரெண்ட் தி ரன்வே நிறுவனத்தை துவக்குவதற்கான எண்ணம் உண்டானது.

புதிய எண்ணம் ஆனால் ஜெனிபரே கூறியிருப்பது போல, பேஷன் உலகையே புரட்டிவிடக்கூடிய பெரிய எண்ணம் என்றெல்லாம் நினைத்து அவர் இந்நிறுவனத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. ஒரு நல்ல எண்ணம் கைவசம் இருக்கிறது. அது எங்கே அழைத்துச்செல்கிறது என பார்க்கலாம் எனும் யதார்த்தமான மனதுடன் தான் ஜெனிபர் இந்த முயற்சியில் இறங்கினார். ஜெனிபர் ஹைமனுக்கு அப்போது 27 வயது ஆகியிருந்தது. அமெரிக்காவில் நிர்வாக கல்விக்காக அறியப்படும் ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியில் அவர் பட்டம் பெற்றிருந்தார். பட்டப்படிப்பின் போது ஜெனிபர் வைஸ் எனும் சக மாணவி அறிமுகமாகி இருவரும் நெருக்கமான தோழியாகி இருந்தனர். இரண்டு ஜெனிபர்களும் கண்களில் கனவுகளோடு, புதிய தொழில் துவங்குவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர்.

இப்படி இருவரும், தொழில்முனைவு யோசனைகளை விவாதித்துக்கொண்டிருந்த ஒரு சந்திப்பின் போது தான், ஜெனிபர் ஹைமனுக்கு அந்த யோசனை பளிச்சிட்டது. அப்போது ஜெனிபரின் தங்கை முக்கிய நிகழ்ச்சிகாக இரண்டாயிரம் டாலர்கள் கொடுத்து அருமையான டிசைனர் ஆடை வாங்கி அணிந்திருந்தார். பேஷனான புதிய ஆடை அணிந்தது தங்கைக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தந்திருந்தாலும், இதற்காக செலவிட்ட தொகை கிரெடிட் கார்டு கடனாக மாறிவிடும் எனும் எண்ணமும் அவரை வாட்டிக்கொண்டிருந்தது.

தங்கையின் நிலையை நினைத்து வருந்திய ஜெனிபர் மனதில், மனதுக்கு விரும்பிய ஆடையில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு ஏன் இப்படி சோதனையாக அமைய வேண்டும் எனும் கேள்வி எழுந்தது. இதற்கு மாறாக விலை உயர்ந்த ஆடைகளை வாடகைக்கு எடுத்து அணிய முடிந்தால் என்ன எனும் கேள்வியும் அவருக்குள் எழுந்தது. தோழியிடன் இந்த யோசனையை பகிர்ந்து கொண்ட போது அட அருமையாக இருக்கும்
என அவரும் ஆமோதித்தார். அடுத்த சில நாட்களில் இருவரும் இந்த எண்ணத்தை சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியை துவக்கிவிட்டனர். வாடகை ஆடைகள் ஆடைகளை வாடகைக்கு எடுத்து அணிவது என்பது அடிப்படையில் நல்ல யோசனை தான்.

விரும்பிய ஆடையின் விலை என்னவாக இருந்தாலும் கவலைப்படாமல் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திவிட்டு திரும்பி அளித்து விடலாம். வாடகை கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். ஒரு முறை மட்டும் அணியக்கூடிய ஆடையை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்ற தடுமாற்றமும் இருக்காது. அதே நேரத்தில் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது ஆடம்பரமான உடை அணிந்து செல்வதிலும் எந்த சிக்கலும் இருக்காது. இப்படி டிசைனர் ஆடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வசதியை இணைய மூலம் இளம் பெண்களுக்கு அளிக்கும் உத்தேசத்துடன் ரெண்ட் தி ரன்வே நிறுவனத்திற்கான திட்டத்துடன் ஜெனிபர் முதலீட்டாளர்களை சந்திக்கத்துவங்கினார்.


இந்த எண்ணம் வெற்றி பெறுமா? இதற்கு முதலீட்டாளர்கள் ஆதரவு அளிப்பார்களா? பேஷன் உலகினர் இதை விரும்புவார்களா? என்றெல்லாம் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கவில்லை. மாறாக, எல்லாம் சரியாக வரும் என்பது போன்ற நம்பிக்கையுடன் செயலில் இறங்கிவிட்டனர். அதற்கேற்ப பேஷன் துறையைச்சேர்ந்த டயானே ( Diane von Furstenberg) எனும் வல்லுனரை அழையா விருந்தாளியாக சென்று சந்தித்தனர். நிறுவனமே இன்னமும் துவக்கப்படாத நிலையில், ஜெனிபர் தன்னையும், தோழியையும் ரெண்ட் த ரன்வே நிறுவனர்கள் என அறிமுகம் செய்து கொண்டு, தங்கள் வர்த்தக எண்ணத்தை விவரித்தனர். ஆடைகளை வாடகை விடுவது என்பது அதுவரை யாரும் பெரிய அளவில் முயற்சித்து பார்க்காத யோசனை என்பதால், டயானாவுக்கு இந்த யோசனை வெற்றி பெறுமா என்பதை கணிக்க முடியவில்லை. ஆனால், இந்த எண்ணத்தை
ஜெனிபர் விவரித்த உற்சாகமும், நம்பிக்கையும் அவரை கவர்ந்தது. எனவே ஆல் தி பெஸ்ட் என வாழ்த்துச்சொல்லி அனுப்பி வைத்தார்.

முதல் சந்திப்பு இந்த சந்திப்பு கொடுத்த ஊக்கத்தை கொண்டு, இருவரும் சிறிய முறையில் இந்த யோசனையை செயல்படுத்திப் பார்த்தனர். அதன் முதல் கட்டமாக ஹார்வர்டு கல்லூரிக்குச்சென்று, தங்கள் யோசனையை விவரித்து, ஆடைகளை வாடகைக்கு எடுத்து அணிவிர்களா? என இளம் பெண்களிடம் கருத்து கேட்டனர். இதற்கு பெரும்பாலான பெண்கள் சாதகமாக பதில் அளித்த நிலையில், துணிந்து விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி, வாடகைக்கு அளிக்கும் சிறிய கடையை துவக்கினர்.


ஜெனிபர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக தங்கள் இருவருக்கும் பொருந்தக்கூடிய ஆடைகளாக வாங்கி காட்சிக்கு வைத்தார். கல்லூரி பெண்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தினால் நல்லது, இல்லை என்றால், விற்காத ஆடைகளை தாங்கள் பயன்படுத்திக்கொண்டு வேறு வேலை பார்க்கலாம் என அவர் நினைத்தார். ஆனால், கல்லூரி பெண்கள் அருமையான ஆடைகளை வாடகைக்கு வாங்கி அணியலாம் எனும் வாய்ப்பை விரும்பி பயன்படுத்திக்கொண்டனர். முழுத்தொகையையும் செலவிடாமல், வாடகை கட்டணம் மட்டும் செலுத்தி அசத்தலான ஆடைகளை அணியும் சாத்தியும் இளம் பெண்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது. பெண்களுக்கு இவ்விதமான அனுபவத்தை அளிக்கும் இந்த எண்ணம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் ஜெனிபர் அடுத்த கட்ட பணிகளில் இறங்கினார். இணைய அறிமுகம் அடுத்த சில மாதங்களில் தேசிய அளவில் இந்த வசதியை ரெண்ட் தி ரன்வே இணையதளம் மூலம் அறிமுகம் செய்தனர். 2009 ம் ஆண்டு இணையதளம் அறிமுகமானது.

ஆடைகளை வாடகைக்கு எடுத்து அணியும் அடிப்படையான எண்ணத்தில் மிகுந்த நம்பிக்கை இருந்த நிலையில், இதை செயல்படுத்துவதற்கான தெளிவான வர்த்தக முறையையும் உருவாக்கியிருந்தனர். ஒரு பக்கம், டிசைனர் ஆடைகளை வடிவமைப்பும் கலைஞர்களுடன் பேசி பிரத்யேக ஆடைகளை தங்கள் நிறுவனத்திற்கு வழங்க சம்மதிக்க வைத்தனர். இன்னொரு பக்கம் ஆடைகளை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான
எளிமையான திட்டத்தையும் அளித்தனர். இந்த கால்கட்டத்தில் இணையத்தில் பகிர்தல் அடிப்படையிலான சேவைகள் பிரபலமாகி இருந்தது. ஒரு பொருளை சொந்தமாக வைத்திருப்பதற்கு பதில் அதை பலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி நடைமுறையில் சாத்தியமாவதில் இணையம் எனும் வலைப்பின்னலும் உதவி செய்தது. இதனிடையே, டிவிடி உலகில் நெட்பிளிக்ஸ் மாதிரி பெரும் வெற்றிக்கதையாக அமைந்தது. டிவிடிக்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதை இணைய வசதியுடன் இணைந்த அஞ்சல் சேவை மூலம் நெட்பிளிக்ஸ் பிரபலமாக்கியிருந்தது.

புதிய வசதிகள் இதே போல, ஆடைகளை வாடகைக்கு எடுக்கவும் ரெண்ட் த ரன்வே உறுப்பினர் முறையை அறிமுகம் செய்தது. பெண்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தளத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டால், மாதம் நான்கு முறை ஆடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக்கொள்ள வழி செய்யப்பட்டது. கூடுதல் ஆடைகள் பெறவும் ஏற்ற திட்டங்கள் இருந்தன. ஆடைகள் சேதமடைவது தொடர்பாக, காப்பீடு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. மாற்று அளவு ஆடையும் சேர்த்தே அனுப்பி வைக்கப்பட்டன. ஆடைகளை பெறவும், திரும்பி அனுப்பவும் வசதி அளிக்கப்பட்டது. அழகிய பைகளில் ஆடைகள் வந்து சேர்ந்தன. பயன்படுத்திய பிறகு ஆடைகளை அதே பையில் வைத்து அனுப்பிவிடலாம். பயன்படுத்திய ஆடைகள் சலவை செய்யப்பட்டு, சுகாதாரமான நிலையில் புதிய ஆடை போல அனுப்பி வைக்கப்பட்டன. நேர்த்தியான இந்த வசதியை பெண்கள் விரும்பி வரவேற்றனர்.

வெற்றிப்பாதை ஆடைகளுக்கு பெரிய அளவில் செலவு செய்யாமல், விரும்பிய டிசையில் ஆடைகளை அணியும் வாய்ப்பை பெண்கள் வரப்பிரசாதமாக பார்த்தனர். கல்லூரி பெண்கள், பணிக்குச்செல்லும் பெண்கள், இல்லத்தலைவிகள் எனா எல்லோருக்கும் இந்த வசதி ஏற்றதாக இருந்தது. ஆக அறிமுகமான வேகத்தில் நிறுவனம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் ஜெனிபர் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்தார். முக்கிட நிகழ்ச்சிகளுக்கு அணியும் ஆடைகள் மட்டும் அல்லாது, அலுவலக பயன்பாடு, தினசரி பயன்பாடு ஆகிய பிரிவுகளிலும் ஆடைகள் அறிமுகம் ஆயின. மேலும் ஆடைகளுடன் அணியக்கூடிய துணை அணிகலன்களை வாங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசைனர்களும் ஆரம்ப தயக்கங்களை மீறி இதில் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக்கொண்டதால், நிறுவனம் மூலம் வாடகைக்கு எடுக்ககூடிய ஆடைகளின் ரகங்களும் அதிகரித்தன. ஆடைகளை சொந்தம் கொண்டாடுவதை விட அணிந்து மகிழும் அனுபவத்தை பெண்கள் பெரிதும் விரும்பினர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் மூலம் கிடைத்த தரவுகளை கொண்டு, பேஷன் போக்கு மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு குறித்து நிறுவனம் அளித்த தகவல்கள் ஆடை பிராண்ட்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கும் உதவியாக அமைந்தன. இதன் காரணமாக பேஷன் உலகில் ரெண்ட் த ரன்வே நிறுவனத்தின் செல்வாக்கும் அதிகரித்தது. இடையே விற்பனை நிலையங்கள் துவக்கி மூடப்பட்டது போன்ற சில சோதனைகளை எதிர்கொண்டாலும் நிறுவனம் சீரான வளர்ச்சி பெற்று யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது. பேஷன் உலகில் வேறு எந்த நிறுவனமும் ஏற்படுத்தியிராத தாக்கத்தையும், மாற்றத்தையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதைவிட முக்கியமாக பேஷன் ஆடைகளை எல்லா பெண்களும் அணுக கூடியதாக மாற்றியுள்ளது.

-சைபர் சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com