ஜீவ சமாதி என்ற வார்த்தை இப்போது அதிகமாக விவாதிக்கப்பட தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பசாமி ஜீவ சமாதியடையப்போவதாக அண்மையில் அறிவித்து அது பெரும் பரபரப்பானது. இந்தச் செய்தியை கேட்டு அதனை காண ஆயிரக் கணக்கான மக்கள், அப்பகுதியில் குவிந்தது. இந்த ஜீவ சமாதி நிகழ்வையொட்டி ஆயிரக் கணக்கில் பணமும் வசூல் ஆனது. இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் ஜோதி சொரூபமாக சிவ லிங்கத்துடன் ஐக்கியமாகிவிடுவேன் என இருளப்ப சாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார் இதனால் மக்கள் பேரார்வம் கொண்டு காத்திருந்தனர். இதனையடுத்து விடிவிடிய காத்திருந்த மக்களுக்கு இருளப்பசாமி ஒன்றை அறிவித்தார் அது, தான் ஜீவ சமாதி முடிவை ஒத்திவைத்துள்ளேன் என தெரிவித்தார். இதனையடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இப்போது இருளப்பசாமி உள்பட அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வினால் தமிழகம் முழுவதும் மீண்டும் ஜீவ சமாதி என்ற விஷயம் பேசு பொருளாகியுள்ளது. ஜீவ சமாதி என்று பேசப்படுகிறதே அப்படி என்றால் என்ன? அது இறந்த நிலையா அல்லது உயிரோடு இருக்கும் நிலையா? சமாதியில் அமைந்த பிறகு உடலில் உயிர் இருக்காதே! பிறகு அதை ஜீவ சமாதி என்று எப்படிக் கூறுகிறார்கள்? என்றெல்லாம் சந்தேகம் இருக்கலாம். முதலில் ஜீவசமாதி என்ற பெயருக்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளலாம் , ஜீவ சமாதி = ஜீவன் + சமாதி ஜீவன் என்றால் நினைவு/எண்ணம் என்று பொருள். சமாதி என்றால் இறந்து போன ஒருவரின் உடலை புதைக்கும் இடம் அல்லது அடக்கமாக்கும் இடம் என்று பொருள். அதாவது ஒருவரின் நினைவு உறங்கும் இடத்தை தான் ஜீவ சமாதி என அழைக்கிறோம். ஜீவ சமாதி என்பது அடிப்படையில் நினைவிடம் மட்டுமே.
ஏனெனில் ஒரு மனிதன் தனது மரணத்தை தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் போது மட்டும் தான் அவருக்கு ஜீவ சமாதி எழுப்பப்படுகிறது. அதாவது அவருடைய நினைவு அந்த சமவெளியில் அவரால் விட்டு விடப்படுகிறது. இது குறித்து வாழ்க வளமுடன் அமைப்பை தோற்றுவித்த மறைந்த வேதாந்திரி மஹரிஷி கூறும்போது "உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள். முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின் படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மன இயக்கமும் உடல் இயக்கமும் நின்று விட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதெவே ஜீவசமாதி என்றழைக்கப்படுகிறது. அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும். அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்ற போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும். சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை" என்கிறார்.
புகைப்படம்: மகான் ராகவேந்திர் ஜீவசமாதி, மந்த்ராலயம்
தமிழக்ததை பொருத்தவரை 18 சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கிறது. இவற்றை தவிர பல மகான்களும் ஜீவசமாதி அடைந்துள்ளனர் அவற்றில் மந்த்ராலயத்தில் இருக்கும் மகான் ராகவேந்திரர், வடலூரில் வள்ளலார் ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
18 சித்தர்களும் ஜீவசமாதி அடைந்த இடங்களும்:
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
சுந்தரனார் - மதுரை
கருவூரார் - கரூர்
திருமூலர் - சிதம்பரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மயிலாடுதுறை
இடைக்காடர் - திருவண்ணாமலை
புகைப்படம்: போகர் ஜீவசமாதி, பழனி
இராமதேவர் - அழகர்மலை
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்