நான் மட்டுமா? என் வீட்டார் கூட நினைத்ததில்லை. ஏன், என் அன்னைகூட நினைத்திருக்க மாட்டார். என் நெடுநாளைய அருமை நண்பர் சோ அவர்கள், எனக்கு எழுதி இருந்த கடிதத்தில், ‘எங்களுடன் சின்னஞ் சிறுமியாக அம்மாவின் பின்னால் நின்று கொண்டு மேடைகளில் வளைய வளைய வந்த நீ, இன்று புகழ் மிக்க நடிகையாகி, இம்மாளிகையைக் கட்டுமளவுக்கு உயர்ந்து நிற்பதைக் கண்டு பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்’ என்று எழுதி இருந்தார். அந்தளவுக்கு இந்தச் சிறுமி எப்படி வளர்ந்தாள்? அந்த அளவுக்கு என்னை ஆளாக்கிய விட்டவர்கள் யார்? யார்? நான் யோசித்துப் பார்க்கிறேன். என் அன்னையின் உருவம் நடுநாயகமாக விளங்கினாலும் அவருடன் இன்னும் பலரும் சேர்ந்து அல்லவா என்ன ஆளாக்கி இருக்கிறார்கள்” எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா.
மேலும் அவர், “வேதா நிலையம். இதைக் கட்டி முடிக்கும் வரை என் தாய் தூங்கவில்லை. கட்டி முடிக்கப்பட்ட பின் புதுமனை புகு விழாவுக்கு அவர் இல்லை. ஆனால் அவரது வண்ண ஓவியம் தெய்வமாக வீட்டின் முகப்பிலிருந்து என்னைக் காத்து வருகிறது” என்றும் அவர் எழுதியிருந்தார்.