ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள சினிமா 'ஜெயில்'. இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இப்படம் திரைக்கு வந்துள்ளது. சென்னையின் பூர்வகுடிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பேச முயற்சி செய்திருக்கிறார் வசந்தபாலன். 'வெயில்', 'அங்காடி தெரு' என மிக அழுத்தமான திரைப்படங்களைக் கொடுத்தவர் வசந்தபாலன் என்பதால் 'ஜெயில்' மீது மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருந்தது. அதனை அவர் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்க்கலாம்.
கர்ணாவாக வரும் ஜி.வி.பிரகாஷ், அவரது தாயார் ராதிகா, நாயகி அபர்ணதி என எல்லோரும் சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். திருடுவதை தொழிலாக செய்யும் நாயகன், இரு வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் கஞ்சா விற்பனை, அது சார்ந்த மோதல்கள் என ஒரு ஆக்ஷன் படமாக இது உருமாறியிருக்கிறது. உண்மையில் வசந்தபாலன் இந்த சினிமாவை எடுக்க நினைத்ததன் நோக்கம் கொஞ்சம் திசைமாறிப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா, நண்பர்களாக வரும் ராக்கி, கலையாக வரும் 'பசங்க' பாண்டி, அவருடன் வேலை செய்யும் சரண்யா ரவிச்சந்திரன் என எல்லோரும் சிறப்பாக நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உச்சரிக்கும் சென்னையின் வட்டார மொழி கொஞ்சம் செயற்கையாக உள்ளது.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். 'காத்தோடு காத்தானேன்' பாடல் இதம். கதையோட்டத்தில் சில பாடல்களை தவிர்த்திருக்கலாம். சென்னைப் பூர்வகுடிகளின் பிரச்னையினை ஆழமாக அணுக முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், காட்சிகள் ஆழமாக அமையாததால் அது ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. ராக்கியின் அக்கா கதாபாத்திரம் ஒரு சென்டிமென்ட்டுக்காக உருவாக்கி இருக்கலாம். ஆனால், அக்கதாபாத்திரத்தின் வலி சரியாக திரையில் கடத்தப்படவில்லை.
குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு என்றாலே கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்டவைதான் இருப்பதுபோல இதுவரை தமிழ் சினிமா காட்டி வந்திருக்கிறது. அதையே வசந்தபாலனும் செய்திருப்பது வருத்தம். உழைக்கும் மக்கள் குறித்த பதிவுகள் எதுவும் இல்லை. குடியிருப்பில் நிறைய ஆட்டோக்கள் நிற்பதை காட்டியிருக்கும் இயக்குநர், அவர்கள் குறித்த சில காட்சிகளை வைத்திருந்தால் கூட குடியிருப்புகள் குறித்த நெகட்டிவ் இமேஜ் கொஞ்சம் குறைந்திருக்கும்.
குடிசைமாற்று வாரிய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிக்கலை கலை கதாபாத்திரம் கொண்டு பேசியிருப்பது மட்டுமே ஆறுதல். தப்பான போலீஸ் அதிகாரியாக வரும் ரவிமரியா சிறப்பாக நடித்திருக்கிறார்.
மொத்தத்தில் 'ஜெயில்' எளிய மக்களின் பிரச்னையை பேச முயன்று, வழி தவறி கோஷ்டி மோதல் சினிமாவாக அமைந்துபோயிருக்கிறது. என்றாலும் வசந்தபாலன் பேச நினைத்திருக்கும் நோக்கத்திற்காக அவசியம் ஒரு முறை 'ஜெயிலு'க்கு போகலாம்!