பணம் பண்ண ப்ளான் B - 16: பணத்தை சேமித்தால் மட்டும் போதுமா? எங்கு சேமிக்க வேண்டும்?

பணம் பண்ண ப்ளான் B - 16: பணத்தை சேமித்தால் மட்டும் போதுமா? எங்கு சேமிக்க வேண்டும்?
பணம் பண்ண ப்ளான் B - 16: பணத்தை சேமித்தால் மட்டும் போதுமா? எங்கு சேமிக்க வேண்டும்?
Published on

புத்தாண்டு நெருங்குவதால் ஒவ்வொருவரும் எடுக்கும் சபதங்கள் குறித்து பல மீம்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. அதனை ரசிப்பது மட்டுமல்லாமல் நிதிசார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் நன்றாகவும் இருக்கும். நம் அனைவருக்கும் பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. இந்த கனவு பலருக்கு வாழ்க்கை முழுவதும் கனவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் சரியான திட்டமிடல் இல்லாத்தால்தான். நிதிசார்ந்த ஒழுங்கு இருந்தால்தால் மட்டுமே நீண்ட காலத்தில் பெரும் தொகையை சேர்க்க முடியும்.

சம்பாதிக்கும் பணத்தை சேமித்தால் போதும்; இதில் செய்வதற்கு என்ன இருக்கிறது என வழக்கமாக தோன்றும். பணத்தை சேமித்தால் மட்டும் போதாது, எங்கு சேமிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

மருத்துவக் காப்பீடு

பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினர் கடனில் சிக்குவது மருத்துவ சிகிச்சையால்தான். காப்பீட்டை முதலீடாக கருதுவதால்தான் மருத்துவ காப்பீட்டை பலரும் எடுக்க தயங்குகின்றனர். ஐந்து வருடம் பிரீமியம் செலுத்துகிறோம். ஆனால் எந்த க்ளைமும் வாங்கவில்லையே. அதனால் அந்த பிரீமியம் செலுத்துவது வீண்தான். அதனால் மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு பதிலாக தேவைப்பட்டால் சொந்த காசில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என நினைப்பார்கள். விதி இங்கு விளையாடும். ஒரு நோய் அல்லது ஒரு விபத்து மொத்த சேமிப்பையும் கறைத்துவிடும். மேலும் கடனாளியாக்கும். அதன் பிறகு இதில் இருந்து மீளுவதற்கே வருடங்கள் ஓடிவிடும். அதனால் அதிக பணம் சேமிக்க வேண்டும் என்றால் முதலீல் செய்ய வேண்டியது மருத்துவக் காப்பீடுதான்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்

மருத்துவ காப்பீடு இல்லை எனில் நீங்கள் கஷ்டப்படுவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் டேர்ம் இன்ஷூரன்ஸ் இல்லையெனில் உங்கள் குடும்பமே கஷ்டப்படும். ஆனால் அதனை பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். தற்போதைய வேலை சூழலில் பென்ஷன் என்பதே கிடையாது. இருக்கும் சேமிப்பை வைத்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். வேலையில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைந்துவிட்டார் என்றால் அந்த குடும்பத்தின் துயரத்தை சொல்லுவதற்கு வார்த்தை இல்லை. தவிர குடும்பத்தின் உறுப்பினர் கடனுடன் இறந்துவிட்டார் என்றால் மேலும் சிக்கலாகிவிடும்.

அதனால் ஒருவரின் ஆண்டு வருமானத்தை விட சுமார் 15 மடங்கு அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. அப்போதுதான் அசாதாரண சூழலில் நிதி தன்னிறைவுடன் குடும்பம் இருக்கும். மருத்துவக் காப்பீடு மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் இவை இரண்டும்தான் அடிப்படை பிரதானம். இவற்றை எடுக்காதவர்கள் இவை குறித்து யோசிக்கவும்.

ஜெயிக்கிற குதிரை வேண்டாம்

ஜெயிக்கிற குதிரையில் பந்தயம் கட்டலாம் என்னும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. தற்போது தங்கம் விலை உயர்கிறது என்றால் உயர்ந்துமுடிந்த பின்பு தங்கத்தில் முதலீடு செய்வோம். அதேபோலதான் பங்குச்சந்தை உயர்கிறது என்றால் அந்த சுழற்சியின் இறுதியில் முதலீடு செய்து மாட்டுக்கொள்வோம். இதற்கு ஒரே வழி அனைத்து முதலீடுகளிலும் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வதுதான்.

சிலர் பங்குச் சந்தையை மட்டுமே கவனம் செலுத்துவார்கள். சிலர் பிக்ஸட் டெபாசிட்டில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிலர் ஒட்டுமொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இவை அனைத்துதம் தவறு. தங்கம், பங்குச்சந்தை, டெபாசிட், ரியல் எஸ்டேட் என அனைத்து வகையான முதலீட்டு திட்டங்களிலும் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். வயது குறைவாக இருப்பவர்கள் பங்குச்சந்தையில் கொஞ்சம் அதிகமாக முதலீடு செய்யலாம். வயது கூடும்போது பங்குச்சந்தை முதலீட்டின் அளவை குறைத்துக் கொள்ளலாமே தவிர நிறுத்திக்கொள்ள வேண்டாம்.

இவைதவிர இன்னும் பல செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் இவற்றை செய்யாதவர்கள் முதலில் செய்யலாம். மேலும் முதலீட்டை தொடங்கும்போது இலக்கு அடிப்படையில் முதலீட்டை தொடங்கினால் வீடு, கார் உள்ளிட்டவற்ற இதர அத்தியாவசிய தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பணக்காரராக இருப்பதன் முதல்படி நிதி சார்ந்த ஒழுங்கம்தான். 2022-ம் ஆண்டின் இலக்காக இதனை ஏற்றுக்கொள்வோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com