தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் வெள்ளி விழாவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது விடுதலை மற்றும் பத்து தல ஆகிய படங்கள். இவ்விரு படங்களும் தன்னகத்தே வெவ்வேறு பரிணாமங்களை கொண்டிருந்தாலும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருப்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
இருப்பினும் பத்து தல படத்தை காட்டிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்துக்கு கூடுதல் கவனமே மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணமாக இருப்பது இதுவரை வெறும் பரோட்டா சூரியாக மட்டுமே கோலிவுட் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர் சூரி விடுதலை படத்தில் குமரேசன் பாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களை திகைக்கச் செய்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரது நடிப்புத்திறனுக்கு வெற்றிமாறனின் விடுதலை தீனி போட்டிருக்கிறது என சிலாகிக்காதவர்களே இல்லை.
இதுபோக வெற்றிமாறனின் கதையில் எப்போதும் ஒரு நேட்டிவிட்டிக்கான கருத்தாக்கம் இருக்கும். அந்த கருத்து விடுதலையிலும் இருக்கிறது என்றும் படத்தின் கதை ஜெயமோகனின் துணைவன் சிறுகதையின் நீட்டிக்கப்பட்ட கதையம்சமாக இருந்தாலும், படத்தில் இடம்பெற்றிருக்கும் சில கொடூர காட்சி அமைப்புகள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன என கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.
குறிப்பாக விடுதலை படத்தில் மக்கள் படை தலைவராக வரும் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த தமிழரசனை ஒத்ததாக இருக்கிறது என்றும், படத்தின் தொடக்கத்தில் வரும் ரயில் பாலம் தகர்க்கப்படும் காட்சியும் 1987ம் ஆண்டு அரியலூர் அருகே உள்ள மருதையாற்றுப்பாலத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை ஒத்ததாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனித் தமிழ்நாடு, தமிழ் ஈழம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு விடுதலைப் படை 1980ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்தது. அந்த சமயத்தில்தான் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுடய எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் தெரிவிக்கும் வகையில் 1987ம் ஆண்டு அரியலூர் அருகே உள்ள மருதையாற்றுப்பாலத்தை தகர்ப்பதாக தமிழ்நாடு விடுதலைப் படை முடிவெடுத்தது.
அதன்படி சென்னை திருச்சியை இணைக்கும் பிரதான ரயில் பாலமாக இருக்கக் கூடிய இந்த மருதையாற்றுப்பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். இதற்காக மூன்று குழுக்களை உருவாக்கிய தமிழ்நாடு விடுதலைப்படை அதில் பாலத்தை வெடி வைத்து தகர்க்க ஒரு குழுவும், இந்த செயலை மக்களிடம் போஸ்டர் ஒட்டி தெரியப்படுத்தவும், ரயில் நிலையங்களுக்கு இதனை தெரிவிக்கவும் என மற்ற இரண்டு குழுக்களும் தனித்தனியே செயல்பட்டிருக்கிறது.
அந்த வகையிலேயே மருதையாற்றுப் பாலத்தை அதிகாலை 3 மணியளவில் குண்டு வைத்து தகர்த்ததோடு, முடிவெடுத்தபடியே அரியலூர் ரயில்வே அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த தகவலை ரயில்வே அதிகாரி அசட்டையாக எண்ணி சென்னையில் இருந்து திருச்சி வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை அரியலூர் வழியாக இயக்கச் செய்திருக்கிறாராம்.
இதன் காரணமாக அதிகாலை 4.30 மணியளவில் அரியலூர் வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அடுத்த சில நிமிடங்களிலேயே திருச்சியை நோக்கி சில்லக்குடி வழியாக புறப்பட்டிருக்கிறது. இதனிடையே வெகு தொலைவில் வெடிச்சத்தம் கேட்டதோடு ரயிலும் கால் மணிநேரமாகியும் சில்லக்குடிக்கு வராததால் மருதையாற்றுப் பாலம் அருகே சென்று இருப்புப்பாதை அலுவலர் கண்காணிக்க அங்கு பாலம் தகர்ந்து, ரயில் விபத்துக்குள்ளாகியதை அறிந்திருக்கிறாராம்.
இந்த சம்பவத்தால் 25க்கும் மேலானோர் சம்பவ இடத்திலேயே பலியாக, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் படுகாயத்துக்கு ஆளாகினார்கள். இதனையடுத்து தமிழ்நாடு விடுதலைப்படை தரப்பிலிருந்து இது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான செயலே தவிர, மக்களுக்கான இந்த போராட்டத்தில் ரயிலை கவிழ்த்து மக்களையே பலிகடா ஆக்குவதற்கானதல்ல என கூறியிருக்கிறார்கள்.
இதுபோக, சம்பவம் நடந்த காலகட்டமான 80களில் தமிழ்நாட்டில் விடுதலைப்படை மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் தமிழ்நாடு மாநில அரசு காவல்துறையை ஏவி அதனை அடக்கவும், ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வந்த நிலையில்தான் இந்த மருதையாற்றுப்பால தகர்ப்பு அரசுக்கு துருப்புச் சீட்டாக மாறியதால் இதனை வைத்து, தகவல் தெரிவிக்கப்பட்டும் வேண்டுமென்றே அப்போதைய மத்திய மாநில அரசுகள் மக்கள் மீது நடத்திய படுபாதகம் என்றும் தமிழ்நாடு விடுதலைப்படையினர் குற்றஞ்சாட்டியிருந்தார்கள். இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவமாகவே இதுகாறும் கருதப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களை பிரதிபலிக்கும் விதமாகவே விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன. உண்மையில் நடந்த சம்பவங்கள் தமிழ்நாட்டின் மத்திய கடலோர மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் நடந்திருந்தாலும், விடுதலை படத்தில் அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க திட்டமிடும் அரசை எதிர்த்து மக்கள் படை என்ற ஆயுதம் ஏந்திய பெருமாள் வாத்தியாரின் அமைப்பு நடத்தும் போராட்டமாகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.