சமூக வலைதளமான ட்விட்டர் பெண்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கும் கணக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ட்விட்டர் கணக்கு வைத்திருக்கும் பல பெண்கள் தங்களின் கருத்தை பதிவு செய்ததற்காக பலரால் அச்சுறுத்தப்படுகின்றனர். இதில் உன்னை கற்பழிப்போம், உன் மீது அமிலம் வீசுவோம் என்று மிரட்டும் நபர்களும் அடங்குவார்கள். ஆனால், இந்த கணக்குகளுக்கு எதிராக புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று ட்விட்டர் மீது புகார் கூறுகின்றனர் வலைதளத்தில் உள்ள பெண்கள் பலர். இப்படி பாதிக்கப்பட்டவர்களில் பிரபல பாடகி சின்மயியும் ஒருவர்.
ட்விட்டரின் இந்த அலட்சியப்போக்கை எதிர்த்து ஒரு வலைதள பிரச்சாரத்தையும் சின்மயி தொடங்கியுள்ளார். 2015-ம் ஆண்டில், 3,60,000 கணக்குள் பயங்கரவாதத்தை பரப்புகின்றன என்று கூறி ட்விட்டர் முடக்கியது. பெண்களை அச்சுறுத்தும் கணக்குகளை ஏன் இதுபோல முடக்கக்கூடாது? பெண்கள் பாதுகாப்பு குறித்து ட்விட்டரின் அக்கறை இதுதானா?, என்று சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டருடன் ஒப்பிடும் போது பேஸ்புக் நிறுவனம் இதுபோன்ற புகார் அளித்தவுடன் அதற்கான பதிலையும் நடவடிக்கையையும் உடனடியாக உறுதி செய்வதாக கூறுகின்றனர் பல பெண்கள். இனியாவது பெண்களின் கோரிக்கையை கேட்பாரா ட்விட்டர் தலைவர் ஜாக்?