பிரதமர் மோடியின் ஆப்ஸ் மூலம் நம்முடைய தகவல்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுடன் உரையாடவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் நரேந்திர மோடி ஆப்சை(Narendra Modi Mobile App) பிரதமர் மோடி கடந்த 2015 ஜூலை 17ல் அறிமுகம் செய்தார். இதை கூகுள் பிளே ஸ்டோரில் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆப்ஸில், பிரதமர் மோடியின் அறிவிப்புகள், திட்டங்கள், தனிப்பட்டமுறையிலான மின்னஞ்சல்கள், மான்கிபாத் உரைகள் போன்றவை இடம்பெறும்.
இந்நிலையில், மோடி ஆன்ட்ராய்ட் ஆப்ஸில்(செயலி) பதிவு செய்யும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் சம்மதம் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த பல தகவல்களை பதிவிட்டுள்ளார்.
எலியாட் ஆல்டர்சன் தனது ட்விட்டரில், “மோடி ஆப்ஸை பயன்படுத்தி, அதில் தங்களின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி அமெரிக்காவின் ‘கிளவர் டேப்’ (Clever Tap) என்ற நிறுவனத்துக்கு பரிமாறப்பட்டு வருகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் in.wzrkt.com. என்ற தளத்துக்கு மாற்றப்படுகிறது. இந்த முகவரி அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.” என பதிவிட்டுள்ளார்.
நரேந்திரமோடி செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் புகைப்படம், மின்னஞ்சல், பெயர், பாலினம் ஆகியவையும் அவர்களின் அனுமதியின்றி அனுப்பப்பட்டு வருவதாக அவர் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ஃபேஸ்புக் தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பயனாளிகளின் அனுமதியின்றி கொடுக்கப்பட்டது என்று வெளியாகியிருந்த நிலையில், மோடி ஆப்ஸ் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி வெளியான உடன் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், ஊடகங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்புமா என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சியின் 15 லட்சம் உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்கள் என்ன ஆகுமோ? என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, எலியாட் ஆல்டர்சன் வெளியிட்ட செய்தியின் உண்மை தன்மை குறித்து ‘altnews’ என்ற செய்தி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், மோடி ஆப்ஸ் மூலம் எப்படி தகவல்கள் in.wzrkt.com. என்ற தளத்துக்கு மாற்றப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளது. இதற்காக ‘Charles’ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி இதனை கண்டறியலாம் என அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோடி ஆப்ஸை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து, அதில் நமக்கென ஒரு புரபைல் உருவாக்கி உள்ளே சென்ற உடனே நமது தகவல்கள் மூன்றாவது நபருக்கு மாற்றப்படுவதை அறிய முடியும். in.wzrkt.com என்ற இணையதளத்திற்கு நம்முடைய பெயர், இ-மெயில் ஐடி, பாலினம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இதில் பரிமாற்றம் செய்யப்படும். இதற்கான டெமோ வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.