கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவது யார் பொறுப்பு? - “City Police Act” என்ன சொல்கிறது? - ஓர் அலசல்

கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே ஏதேனும் சட்டங்கள் அமலில் உள்ளதா? அப்படி மீறினால் யார் அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பை விளக்கும் வண்ணம் இந்த கட்டுரை அமைந்துள்ளது.
கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவது சரியா?
கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவது சரியா? Twitter
Published on

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கடற்கரை பகுதிகள், தெருவின் நடுவில், தெருவின் ஓரத்தில் என்று கால்நடைகளின் நடமாட்டம் என்பது தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளன.

கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவது சரியா?
கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவது சரியா? Twitter

குறிப்பாக மாடுகளை தொழுவத்தில் கட்டாமல் அவிழ்துவிடுவது, வீட்டில் நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கூட வீட்டின் உட்புறத்தில் வளர்க்காமல் வெளியில் விடுவது என்று வளர்பவர்களே இதன் பின்புறம் உள்ள அபாயம் அறியாமல் அலட்சியமாக செயல்படுவது என்பது வேதனைக்குறியது, அதே சமயம் கண்டிக்கத்தக்கதும் கூட.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை அருப்பாக்கத்தில் எம்.எம்.டி காலணியில் இளங்கோ நகர் சாலையில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்த சிறுமியை அவ்வழியில் நின்றுகொண்டிருந்த பசுமாடு திடீரென தாக்கவே அருகில் இருந்த ஒருவர் தடியை கொண்டு மாட்டை அடிக்கவே சிறுமி காப்பாற்றப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் என்பது முதல் முறை அல்ல. இது போன்று பல சம்பவங்கள் அறங்கேறியுள்ளன.

அருப்பாக்கம்- சிறுமியை தாக்கிய மாடு
அருப்பாக்கம்- சிறுமியை தாக்கிய மாடுTwitter

ஒரு தனிமனித அலட்சியம் என்பது அவரின் அலட்சியத்தோடு நின்று விடுவதில்லை அதற்கு ஈடாக எங்கோ ஒருவர் பாதிக்கபட்டு கொண்டுதான் இருக்கின்றார் என்பது இதன் பின்புறம் உள்ள நிதர்சனம். இந்த அசம்பாவிதம் குறித்து பேசிய சென்னை மாநகர ஆணையர் ராதகிருஷ்ணர், ‘சென்னை பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது.

சென்னை மாநகர ஆணையர் ராதகிருஷ்ணர்
சென்னை மாநகர ஆணையர் ராதகிருஷ்ணர்Twitter

வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று பெரம்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் வைக்கிறோம். ஒரு மாட்டிற்கு 2,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அதன் உரிமையாளர்கள் அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு, சம்பவத்தை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் அவற்றை தெருக்களில் சுற்றவிடுகின்றனர். இது குறித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

அதுவரை உரிமையாளர்கள் மாடுகளை கிராமப்புற பண்ணைகளில் வைத்து பராமரிக்க வேண்டும். மாடுகள் தொடர்ந்து இவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்தால் அவற்றை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபடும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகளை திரிய விட்ட உரிமையாளர்களுக்கு நான்கு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்களின் அடிப்படையில் பிடித்துச் செல்லப்பட்ட மாடுகளுக்கு, தலா 10 ஆயிரம் வீதம் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இப்படி கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே ஏதேனும் சட்டங்கள் அமலில் உள்ளதா? அப்படி இதை மீறினால் யார் அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது பற்றி கடலூர் வழக்கறிஞர் திரு. என். ராதா அவர்களிடம் கேட்கப்பட்டு அதற்கு அவர் கூறிய விளக்கங்கள் அடங்கிய தொகுப்பை இங்கே காணலாம்.

City Police Act
City Police ActFacebook

"சிட்டி போலீஸ் சட்டத்தின்” (City Police Act) படி பொது இடங்களில் அதாவது மாநகராட்சி போன்ற பொது வெளிகளில் ஆடு,மாடு போன்ற கால்நடைகளை அவிழ்த்துவிட கூடாது. கால்நடையின் உரிமையாளர் அந்த கால்நடையை முறையாக கட்டிவைத்துதான் பராமரிக்கவேண்டும். அதனை பொது வெளியில் சுற்றிதிரிய விடக்கூடாது அப்படி செய்தால், மாநகராட்சி சார்பில் அதன் உரிமையாளரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அந்த கால்நடையினால் யாருக்கேனும் உடல் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டாலோ அதன் உரிமையாளர் அதற்கு ஏற்றார் போல் இழப்பீடு செலுத்த வேண்டும்.

அதோடு கூட இந்த சம்பவம் நடப்பதற்கு காரணமாக இருந்த மாநகராட்சியும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதுமட்டுமல்லாது முதலில் மாநகராட்சி ஆணையர் மீதும், இரண்டாவதாக மாட்டின் உரிமையாளரின் மீதும், ஒரு வேளை அந்த கால்நடைக்கு இன்சூரன்ஸ் செய்யபட்டு இருந்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் மீதும் வழக்கு தொடுத்து அவர்களிடம் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.”

City Police Act
City Police ActFacebook

கூடுதலாக “ ‘கால்நடைகள் அத்துமீறுதல் சட்டம்’ பிரிவு 20 ன் படி கால்நடைகள் 10 ரூபாய்க்கு மேற்பட்ட பயிர்களை அதாவது கம்பு, கேழ்வரகு, கோதுமை இது போன்ற பயிர்களை மேய்ந்து விட்டால் அது குற்றமாக கருதப்படுகின்றது” சாதாரணமாக ஒரு விபத்து ஏற்பட்டால் அதற்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது வயது, சம்பாதிக்கும் திறன், அவரை சார்ந்து குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை என்று இந்த 3 விஷயங்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் இழப்பீடை பெற்றுகொள்ளலாம். இவ்விடத்தில் பசுமாடு என்பது கால்நடையின் கீழ்வரும். எனவே மாநகராட்சி இப்படி வீதிகளில் திரியும் மாட்டினை பிடித்துவிட்டு சென்றால் அபராத தொகையை செலுத்தி மட்டுமே அந்த கால்நடையை அழைத்து செல்ல முடியும். அப்படி அந்த தொகையை செலுத்தி அவற்றை பெற்று செல்லும்வரை “கோ சாலை” எனப்படும் கால்நடைகளை பராமரிக்கும் இடத்தில் அவை ஒப்படைக்கப்பட்டு அதற்கு தேவையான உணவு, பராமரிப்பு செலவுகள் என்று ஒரு நாளைக்கு 300 ரூபாய் வீதம் மாட்டின் உரிமையாளரிடமிருந்து பெறப்படும்” என்றார்.

இதன் படி, “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற இடங்களில் மாடுகளை வளர்ப்பவர்கள் உரிய முறையில் உரிய கவனத்தில் அவற்றை கட்டி வைத்து வளர்ப்பது என்பது அவர்களது கடமை. எனவே பொது வெளியில் சுற்றி திரியவைத்து விபத்து ஏற்படுத்தக்கூடாது. மாட்டிற்கு உரிய மாட்டு தொழுவத்தில் அவற்றை வைத்து அதனை பராமரித்தல் என்பது சிறந்தது” என்றும் கூறினார்.

ஆடு, மாடு, நாய் போன்ற பல்வேறு உயிரினங்கள் தெரிந்தே சாலைகளிலும், வீதிகளிலும் சுற்றி திரிவதில்லை. அவற்றை பேணி காப்பவர்கள் தான் அதனை கவனமாக பார்த்து கொள்ளவேண்டும். வீதிகளிலும், தெருக்களிலும் சுற்றி திரிகின்றதா? என்ன செய்து கொண்டுடிருக்கின்றது? என்பதை அதன் உரிமையாளர்கம்தான் உறுதி செய்ய வேண்டும். அரும்பாக்கத்தில் நடைப்பெற்ற இந்த சம்பவம் என்பது முதலல்ல.

மாட்டு தொழுவம்
மாட்டு தொழுவம்Twitter

இது போன்று பல்வேறு இடங்களில் பலர் கால்நடைகளால் விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் அவற்றை பேணி வளர்ப்பவர்கள் கவனமாக கையாளுதல் என்பது அவசியம். இப்படி செய்வதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

- ஜெனிட்டா ரோஸ்லின்.S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com