காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் தாக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதை உலக நாடுகள் உணர தொடங்கியிருக்கின்றன. அதன் பாதிப்பைக் குறைக்கும் வகையில் கரிம எரிபொருள்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான வழிகளும் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் இருந்து மின்சார உற்பத்தி போன்றவை சமீப காலமாகப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அந்த வரிசையில் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஹைட்ரஜன்தான். இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளை பரவலாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியள்ளது மத்திய அரசு. அதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கிரீன் ஹைட்ரஜன் பாலிசி
கடந்த பிப்ரவரியில் ஹைட்ரஜன் எரிபொருளுக்கான கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவை முக்கியமான ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதே இந்த க்ரீன் ஹைட்ரஜன் பாலிசி-யின் நோக்கமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஹைட்ரஜன் மற்றும் அமோனியா ஆகியவற்றின் உற்பத்திக்கான அனுமதி பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருள்களை உற்பத்தி செய்ய விரும்புபவர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை எங்கே வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
2025-ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன் மற்றும் அமோனியா ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை நிறைவேற்றிவிட்டால் அடுத்த 25 வருடங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு சலுகைகள் இந்த கொள்கையில் குறிப்பிடப்ப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஹைட்ரஜன் தேவை 6.7 மில்லியன் டன்னாக இருக்கிறது, இது 2030 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேவையை பூர்த்தி செய்ய இந்த புதிய கொள்கை உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒத்துழைப்பைத் தொடர ஜப்பான் விருப்பம்
இந்தியாவைப் போலவே ஜப்பானும் ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது . கார்பன் உமிழ்வை குறைத்து பசுமை சூழலை உறுதி செய்யும் வகையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida). அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் இது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மின்சார வாகனங்கள், பேட்டரிகள், ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி ஆகியவற்றில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் வழங்கி வரும் ஒத்துழைப்பை ஜப்பான் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கார் 'மிராய்'
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று டொயோட்டா நிறுவனத்தின் ஹைட்ரஜன் காரை அறிமுகப்படுத்தி வைத்து அந்த காரிலேயே பாராளுமன்றத்துக்கும் வந்தார். மிராய் எனப்பெயரிடப்பட்டுள்ள இது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் காராகும். " சோதனை முயற்சியாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பசுமை ஆற்றல் மூலமாக பிரித்தெடுக்கும் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஹைட்ரஜன் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு உள்நாட்டில் இந்த துறைக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் " என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களை போலவே ஹைட்ரஜன் கார்களிலும் IC இன்ஜினுக்கு பதிலாக மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. அந்த மோட்டார் இயங்க தேவையான மின்சாரம் ஹைட்ரஜன் ஃபியூல் செல்கள் மூலமாக பெறப்படும்.
- மு. ராஜேஷ் முருகன்