அண்ணா பல்கலைகழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று ஒன்று நடைபெற்றுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் என பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மீம்ஸ் குறித்தும் அதை உருவாக்குபவர்கள் குறித்தும் நிறைய பேசினார். குறிப்பாக சமீபத்தில் அவரை பற்றி வந்த சொட்ட சொட்ட நனையுதே தாஜ்மகால் பாடல் மீம் பற்றி சிலாகித்தார். மாணவர்கள் எப்படியெல்லாம் இணையத்தில் செயல்பட வேண்டும் , அதற்கான தேவை என்ன என்றெல்லாம் பேசினார். அமைச்சர் மணிகண்டனும் மாணவர்கள் இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இயங்க வேண்டிய அவசியம் என்னவென்று விவரித்தார்.
சாதாரணமாக அரசியல் கட்சிகள் கல்லூரிகளை குறிவைத்து இறங்குவதில்லை. மாணவர் அணி என்று ஒன்று இருக்கும் ஆனால் கல்லூரிக்கு வெளியில் செயல்படுவதாக இருக்கும். ஆனால் மத்திய பல்கலைகழகங்களில் அரசியல் பாடத்தோடு இணைந்ததாக இருக்கிறது. இந்த முயற்சியை அதிமுக எடுக்க தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலும் திமுக அதிமுக இடையிலேயே தமிழக்த்தில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இந்த சூழலில் முதல் முறையாக வாக்களிப்பவர்களின் அல்லது ஒரு முறை மட்டுமே வாக்களித்தவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்கிற சூழல் உள்ளது.
கல்லூரி மாணவர்களை பொருத்தவரை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இயங்க கூடியவர்கள். தற்போதைய சூழலில் அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் எண்ணம் தற்போதே அவர்கள் மனங்களில் தொடங்கியிருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களை சென்றடையும் போது அது அதிமுகவுக்கு எளிதாக இருக்கலாம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ராஜ் சத்யன் கூறுகையில் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வை கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்றார். ஆனால் அரசியல் நிகழ்வாக இருக்காது என்றும் கூறினார். மாவட்டம் தோறும் அதிமுக சார்பில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்வாகவும் இதனை நாம் பார்க்க முடிகிறது
நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழலில், மாணவர்களை சென்றடையும் வழியாக இதனை அதிமுக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் மட்டுமல்ல, இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்குமே அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.