உடலில் ரத்த சிவப்பணுக்கள்தான் நுரையீரல் மற்றும் திசுக்களுக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்கிறது. இந்த ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெரும்பாலும் நாம் தினசரி உண்ணும் உணவிலிருந்தே உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்துவிடுகிறது. அதுவே இரும்புச்சத்து குறையும்போது அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், சிவப்பணுக்கள் திசுக்களுக்கு ஆக்சிஜனை திறம்பட கடத்தும் திறனும் குறையும்.
இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு தினந்தோறும் கண்டிப்பாக 20 மி.கி இரும்புச்சத்து தேவைப்படும் என்கிறது இங்கிலாந்தின் தேசிய சுகாதார மையம். இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயத்துடிப்பில் மாற்றம், சோர்வு, மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், உடலில் அரிப்பு, தலைவலி, வழக்கத்திற்கு மாறான நாக்கு மென்மை, விழுங்குவதில் சிரமம், முடி உதிர்வு, ஆற்றல் பற்றாக்குறை போன்ற சில பொதுவான அறிகுறிகள் தென்படலாம். இவை அனைத்துமே ஒருவருக்கு காணப்படாவிட்டாலும் இவற்றில் பெரும்பாலான அறிகுறிகள் தென்படலாம். அதேபோல், நகங்கள் வெளிரிப்போதல், உடைந்துபோதல், ஸ்பூன் வடிவில் மாறுதல் மற்றும் நகங்களில் உலோகச்சுவை போன்றவையும் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்தான் என்கிறது ஆராய்ச்சிகள்.
இரும்புச்சத்து குறைபாடு பெரும்பாலும் யாருக்கு ஏற்படுகிறது?
பெரும்பாலும் பெண்களுக்குத்தான் இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாதவிடாய் காலங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கும்தான் அதிகம் இந்த குறைபாடு ஏற்படுகிறது. வயிற்றிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் சேர்த்து இரண்டு மடங்கு இரும்புச்சத்து தினசரி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் தினசரி 17 மி.கி எடுத்துக்கொள்வது போதுமானது.
ஒருநாளைக்கு சராசரியாக 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 8.7 மி.கிராமும், 19-50 வயது பெண்களுக்கு 14.8 மி.கிராமும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 8.7 மி.கிராம் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது.
உடலில் இரும்புச்சத்தை அதிகரிப்பது எப்படி?
உடலில் இரும்புச்சத்து சரியான அளவில் இருக்க என்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை தேசிய சுகாதார மையம் விளக்கியிருக்கிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கும் சில உணவுகள்
பெரிய பீன்ஸ், பட்டாணி, சோயாபீன் மாவு, முளைக்கட்டிய பயிறுகள், உலர்ந்த ஆப்ரிகாட், தானியங்கள், பருப்பு வகைகள், சிவப்பு இறைச்சி, கல்லீரல் இறைச்சி (கர்ப்பிணிகள் தவிர்க்கவும்), நட்ஸ் போன்றவை இரும்புச்சத்தை அதிகரிக்கும்.