பணம் பண்ண ப்ளான் B - 9: எந்தெந்த முதலீடுகளில் என்னென்ன ரிஸ்குகள்? - ஒரு பார்வை

பணம் பண்ண ப்ளான் B - 9: எந்தெந்த முதலீடுகளில் என்னென்ன ரிஸ்குகள்? - ஒரு பார்வை
பணம் பண்ண ப்ளான் B - 9: எந்தெந்த முதலீடுகளில் என்னென்ன ரிஸ்குகள்? - ஒரு பார்வை
Published on

ஒவ்வொரு செயலிலும் ஒரு ரிஸ்க் இருக்கிறது. வண்டியை வேகமாக ஓட்டினால் ரிஸ்க் என்பதில் தொடங்கி, ஜங்க் உணவுகள் உட்கொள்வது வரை எது அபாயம் என அனைவருக்கும் தெரியும். இதுபோல முதலீட்டிலும் ரிஸ்க் இருக்கிறது. ஒவ்வொரு முதலீட்டிலும் எதாவது ஓர் அபாயம் நிகழலாம்.

முதலீட்டை எடுத்துக்கொண்டால் அதிக வட்டிக்கு ஆசைப்படுவது ரிஸ்க் என்பதும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்தே இருக்கும். அதிக வட்டி ஆபத்து என்னும் ஒரு காரணத்துக்காகவே நிரந்தர வருமானம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எதையுமே கவனம் செலுத்தாத முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். "நான் எந்தவிதமான ரிஸ்கும் எடுக்க மாட்டேன்" என்று சொல்வதே மிகப் பெரிய ரிஸ்க்.

மிக அதிகமான ரிஸ்க் எடுத்தால் அதன் விளைவுகள் உடனுக்குடன் தெரியவரும். ஆனால், ரிஸ்க் எதுவும் எடுக்காமல் இருந்தால் நீண்ட காலத்துக்குப் பிறகே பாதிப்புகள் தெரியவரும். இதன் காரணமாகவே குறைவான ரிஸ்க் எடுப்பதும் ஆபத்து என்பது பலருக்கு தெரியாமலே போய்விடுகிறது.

தற்போதைய சுழலில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் என்னும் அளவில் வட்டி இருக்கிறது. இதுவும் நிலையானது அல்ல. (ஒரு வங்கி திவால் ஆகும் பட்சத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். சமயங்களில் ரிசர்வ் வங்கி, நீங்கள் வைத்திருக்கும் வங்கியில் பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் கூட விதிக்கலாம்).

நிலையான வருமானம்போல தெரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் ரிஸ்கே எடுக்காமல் இருந்தால் மிகப்பெரிய வாய்ப்புகளை இழக்க வேண்டி இருக்கும். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப, அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டினை தேர்வு செய்யலாம்.

எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்?

நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு எப்போது தேவை என்பதை பொறுத்து எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்பதை புரிந்துகொள்ளலாம். ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஒரு முதலீடு தேவைப்படுகிறது என்றால், உங்கள் வயது 50-க்குள் இருந்தால் நீங்கள் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம். 50 வயதுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் இயல்பாக செலவுகள் இருக்கும். (குழந்தைகளின் படிப்பு, திருமணம், பெற்றோர் உடல்நலன் அல்லது உங்களின் உடல்நலன்). சில விதி விலக்குகளும் இருக்கலாம். ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கவும்.

உங்களுக்கு வயது 30-தான் இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் பணம் தேவைப்படுகிறது என்று தெரிந்தால், ரிஸ்க் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்வதுதான் சரி.

அதிக ரிஸ்க்: பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் / செக்டோரல் பண்ட்கள், பங்குச்சந்தை சார்ந்த யுலிப் திட்டங்கள் (நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ரிஸ்க்கை ஏற்படுத்தும். தேர்ந்தெடுக்கும் பங்குகளில் தொடங்கி, எப்போது வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட அனைத்துமே சிறு முதலீட்டாளர்களுக்கு சவாலானது).

நடுத்தர ரிஸ்க்: பேலண்ஸ்டு பண்ட்கள், கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்கள்.

குறைவான ரிஸ்க்: ஃபிக்ஸட் டெபாசிட், நிரந்தர வருமானம் தரும் சிறு சேமிப்புத் திட்டங்கள்.

இதில் காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தை சேர்க்கவில்லை. காரணம், காப்பீடு என்பது முதலீடு அல்ல. பாதுகாப்புகாக செய்யும் நடவடிக்கை. ரியல் எஸ்டேட் என்பது நிச்சயம் முதலீடுதான். ஆனால், மாதச் சம்பளம் வாங்குபவர்களில், நடுத்தர வர்க்கத்தினர் சேமித்து சரியாக முதலீடு செய்தால்தான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடியும்.

மூன்றாவதாக தங்கம். ஒரு முதலீடாக நீண்ட கால அடிப்படையில் மிகக் குறைந்த வருமானமே கொடுத்திருக்கிறது. அதனால் ஒருவருடைய சேமிப்பில் / போர்ட்போலியோவில் அதிகபட்சம் 10 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம். முதலீடு மட்டும்தான் நோக்கம் என்றால் நகையாக வாங்காமல், பத்திரங்கள், இடிஎஃப்கள், மியூச்சுவல் பண்ட்கள் மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.

உடல் வெப்ப நிலையை அளவிடுவதுபோல ஒருவருடைய ரிஸ்கை அளவிட முடியாது. சம்பளம், செலவுகள், பொறுப்புகள், தேவைகள், ஒருவருடைய இயல்பு என பல விஷயங்களை மையமாக கொண்டுதான் ரிஸ்கினை அளவிட முடியும். அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒப்பீட்டளவில் கூடுதல் வருமானம் பெறமுடியும்.

அதேசமயம் அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டுமொத்தமாக அதிக ரிஸ்க் இருக்கும் ப்ராடக்ட்களிலும் முதலீடு செய்யக் கூடாது. முதலில் தேவை வகுத்துக்கொள்ளலாம், தேவைக்கு ஏற்ப முதலீட்டை பிரித்துக் கொள்ளலாம். சிலர் ரிஸ்கை நினைத்து வாய்ப்புகளை இழக்கின்றனர். சிலர் அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு அசலையும் இழக்கின்றனர்.

முதலீட்டின் நோக்கம் பாதுகாப்பும் இருக்க வேண்டும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிக வருமானமும் இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு முதலீட்டில் உள்ள அதிகபட்ச ரிஸ்க் என்ன, அதிக பட்ச வருமான வாய்ப்பு என்ன என்பதை புரிந்துகொண்ட பிறகு முதலீட்டை தொடங்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com