“இன்னும் இரு தினங்களுக்கு பின், சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலன மழையின் தாக்கம் அதிகரிக்கும்” என்று புதிய தலைமுறைக்கு பேட்டி வழியாக தெரிவித்துள்ளார் `வெதர் மேன்’ என அழைக்கப்படும் வானிலை கண்காணிப்பாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாகவே வட இந்தியா அதிக மழையை சந்தித்து வருகின்றது. பல இடங்களில் வெள்ளப்பெருக்குக்கூட ஏற்பட்டுள்ளது. தென் இந்தியாவிலும் வடகிழக்கு மாகாணங்கள் அதிக மழையை சந்தித்து வருகின்றன. கிழக்குப் பகுதியில் இருக்கும் தமிழ்நாடும், இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் எப்போதுமே வெப்பமயாக இருக்கும் சென்னைகூட, கடந்த ஒரு வாரமாக பெங்களூரு போல குளு குளுவென்றே இருக்கிறது.
பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் இப்படி தூரல் மழை இருக்குமென்றாலும்கூட, இந்தளவுக்கு வானிலை குளிர்ந்தே காணப்பட்டிருக்காது. இதற்கு ஏதும் பிரத்யேக காரணம் உள்ளதா என்பதை அறிய, வெதர் மேன் பிரதீப் ஜானிடம் `புதிய தலைமுறை’ சார்பாக பேசினாம்.
“கடந்த சில நாள்களாக சென்னையில் மாலை நேரத்தில் மட்டும் சில மணி நேரத்துக்கு மழை பெய்து வருகிறது. அதேநேரம் உள்மாவட்டங்களில் மொத்த மழை அளவே குறைவாக உள்ளது. இதுவே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த வித்யாசங்களுக்குக் காரணம், தென்மேற்கு பருவமழை.
தென்மேற்கு பருவமழை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் (நீலகிரி, கேரளா பகுதிகளில்) தீவிரமடைகிறது என்பதால், அங்கு கனமழை உள்ளது. சென்னையில் காற்று மட்டுமே அதிகம் உள்ளது; அதனால் சில மணி நேரம் மட்டுமே மழை பெய்கிறது. இதை வெப்பச்சலன மழை என்போம். தமிழகத்தில் இப்போதைக்கு சென்னையில் மட்டுமே வெப்பச்சலன மழை பெய்கிறது; உள்மாவட்டங்கள் எங்கும் வெப்பச்சலன மழை இல்லை. காரணம், அங்கு தென்மேற்கு பருவமழைக்கான எந்த தாக்கமும் இப்போதைக்கு இல்லை.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் குறைந்தபின், உள்மாவட்டங்களிலும் வெப்பச்சலன மழையின் தாக்கம் அதிகரிக்கும். இன்னும் இரு தினங்களில் (ஜூலை 15-ல்) தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மேற்குப்பதியில் குறையத்தொடங்கிவிடும். அதன்பின் (ஜூலை 16,17 தேதிகளில்) உள்மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும். வெப்பச்சலன மழை நேரத்தில், வெயிலின் தாக்கமும் இருக்கும் - மழையின் தாக்கமும் இருக்கும். இப்போது சென்னையில் இருப்பது போல! ஒரே ஒரு வித்யாசம், மழையின் அளவும் நேரமும் (சென்னையிலும், உள்மாவட்டங்களிலும்) அதிகரிக்கும். இதற்கு காரணம், இனி வரும் நாள்களில் காற்றின் வேகம் குறையும்.
ஜூலை 16, 17 தேதிகளில் சென்னை - உள்மாவட்டங்கள் என அனைத்து இடங்களில் இடி மின்னலோடு வெப்பச்சலன மழை இருக்கும். பொதுவாகவே ஜூன், ஜூலை மாதங்களில் வால்பாறை, நீலகரி, கேரளா போன்ற மேற்குப்பகுதிகளில் சீசன் வரும்போதெல்லாம் நமக்கு இப்படித்தான் மேகமூட்டத்துடனும், அதிக காற்றுடனும் வானிலை இருக்கும். அங்கு குறையும்போது, நமக்கு மழை அதிகரிக்கும். அப்படியே இவ்வருடமும் இருக்கிறது. மற்றபடி இம்முறை கூடுதல் மழை, மாறிய வானிலை என்ற சூழல் சென்னையிலோ தமிழகத்திலோ இல்லை” என்றார்.
இன்றைய வானிலை நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கும் அவர், “இப்போதைக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். காற்று குறைந்தால், ஜூலை 16, 17 முதல் தெற்கு மற்றும் வட தமிழகத்தின் உள்பகுதிகளில் வெப்பசலன மழை பெய்யும். இதற்கிடையே அடுத்த 2-3 நாட்களுக்கு மேற்குப்பகுதியில் கடற்கரை பக்கம் முழுவதும் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
அந்தப் பகுதியில் வரக்கூடிய மும்பை, நீலகிரியில் உள்ள பந்தலூர்-கூடலூர் பகுதியிலுள்ள இடங்கள், வால்பாறை, குடகு, வயநாடு மற்றும் அனைத்து மலைப்பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களில் மிக கனமழை பெய்யும். மும்பையில் இன்று கனமழை பெய்யும். போலவே தேனியில் பெரியாறு அணை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளிலும் அடுத்த 2-3 நாட்களில் நல்ல மழை பெய்யும்.
இன்னும் அடுத்த 3-4 நாட்களில் மேட்டூர் அணை 120 அடியை எட்டும். அடுத்த 2 நாட்களுக்கு சென்னைக்கு அருகிலுள்ள மற்ற வட தமிழக மாவட்டங்களில் இப்போது போலவே குறைவான அளவு மழை பெய்யும்” என்றார்.