நாட்டின் 74 வது சுதந்திர தினம் இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்திய வரலாற்றில் கொரோனாவால் ஊரடங்கில் அடைப்பட்டுக்கொண்ருப்பது இதுதான் முதல்முறை. அதனால், இந்த சுதந்திர தினத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று சில பிரபலங்களிடம் கேட்டோம், நடிகர் தம்பி ராமையா நம்மிடம்,
“இந்த சுதந்திர தினத்தில் எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்கிறோம். ஒருவரியில் சொல்வதென்றால் அரசுக்கு கட்டுப்பட்டோ ஆண்டவனுக்கு கட்டுப்பட்டோ அல்ல. உயிருக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள் மக்கள். முகத்தை மூடிவிட்டு தூங்கினால் ‘முகத்தை மூடிக்கோப்பா. காத்து வராதுப்பா’ என்பார், அம்மா. ஆனால், இப்போது, முகத்தை மூடிக்கொள்ளச் சொல்கிறார்கள். ஏற்றுக்கொள்ளவேண்டிய வாழ்க்கை இது. முந்தைய தலைமுறை பார்க்காத அத்தனை சந்தோஷத்தையும் இந்த தலைமுறை அனுபவித்தது. அதேபோல, எந்த தலைமுறையும் பார்க்காத ஒரு கொடுமையான விஷயத்தை இந்தத் தலைமுறை பார்த்துக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நமக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் வெளிநாடுகளுக்கு போகலாம் என்ற வாய்ப்பு இருந்தது. இப்போது, எந்த சாய்ஸும் இல்லை. இப்போது, ஒரே ஆறுதல் இறப்பு விகிதம் குறைந்ததுள்ளது, என்பது மட்டும்தான்.
நான் ஒரு ஆன்மிகவாதி. கொரோனா வந்தது இறைவனுக்குத்தான் அவமானம். கோயில் நடையையே மூடிவிட்டார்கள். கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள். நாம் சிலைகளையாவது பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால், சிலைகளைக்கூட பார்க்கமுடியவில்லை. இதில், வெட்கப்படவோ கூச்சப்படவோ மனிதர்களுக்கு அசிங்கம் இல்லை. அதனால், கொரோனா கடவுளுக்குத்தான் இழுக்கு. அவருக்குத்தான் பாலபிஷேகம் கிடையாது. சந்தன அபிஷேகம் கிடையாது. செடிகளும் மலர்களும் செடியில் கருகி கிடக்கின்றன. கடவுளுக்கு போடமுடியவில்லை.
வாழ்க்கையில் மிக முக்கிய கட்டமான திருமணம் நிகழ்வை பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்ச்சியோடு செய்வார்கள். ஆனால், இன்று சோர்ந்துபோய் இருப்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. எதிர்காலத்தில் ஆல்பம் போட்டுப்பார்க்ககூட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால், இந்த சுதந்திர தினத்தை என்னால் சந்தோஷமாக பார்க்க முடியாது.
மேலும், நான் கிராமத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவன். ஆதிக்கலை இல்லை என்றால் சினிமாக்கலை இல்லை. ஆடி மாதத்தில் கிராமங்களில் நடக்கும் திருவிழாதான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வருமானமே. ஆனால், அவர்கள் கொரோனாவால் கண்ணீர் வடிக்கிறார்கள். இன்று மேடையில் இருந்தால் மாதம் முழுக்க சம்பாதிப்பார்கள். திருவிழா இல்லாத காலத்தில் நகைகளை அடகு வைத்துவிட்டு ஆடி மாதத்தில் வரும் வருமானத்தில் மீட்டெடுப்பார்கள்.இப்போது, அந்த இசைக்கலைஞர்கள் துவண்டு கிடக்கிறார்கள். இசைக்கருவிகள் எல்லாம் அநாதை ஆகிக்கிடக்கிறது. மேடைகள் சுடுகாடாய்,கருவிகள் தனிமையில், கலைஞரகள் வறுமையில் கிடக்கிறார்கள். சினிமாக்கலைஞர்களுக்குகூட பெரிய சிக்கல் கிடையாது. நாட்டுப்புற கலைஞர்கள்தான் பாவம். இவர்களுக்கு உதவி செய்து அரசு கண்ணீரை துடைக்கவேண்டும். கொரோனாவுக்கு இன்னும் சரியான மருந்து எந்த மதத்தினராலும் தீர்வு கொடுக்கப்படவில்லை. ஏதோ ஒரு காலத்தில், மருந்து கிடைக்கும்போது இந்தக் கலைஞர்கள் உயிரோடு இருப்பார்களா? என்பதை நினைக்கும்போது இந்த சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாட முடியும்? இது சுதந்திர தினமே கிடையாது.
சுதந்திர தினத்தை யாராவது கொண்டாடுகிறோம் என்றால், அது எங்க அம்மா சத்தியமா பொய். எல்லாம் வீட்டுக்குள் முடங்கிகிடக்கிறோம். ஆங்கிலேயர் காலகட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடனாவது வெளியில் செல்வோம். ஆனால், அவர்கள் காலத்தில் நம் முன்னோர்கள் எவ்வளவு கொடுமையாக இருந்திருப்போமோ, அதைவிட நாம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளோம். ஆங்கிலேயர் காலத்தில் நாம் பிறக்கவில்லை. நம் முன்னோர்கள் பட்ட துயரத்தை இப்போது உணரமுடிகிறது” என்கிறார், வருத்தத்துடன்.
- வினி சர்பனா