உலக தேநீர் தினம்: நோய்த்தொற்று காலத்தில் இந்த தேநீர்களை மறக்கவேண்டாம்!

உலக தேநீர் தினம்: நோய்த்தொற்று காலத்தில் இந்த தேநீர்களை மறக்கவேண்டாம்!
உலக தேநீர் தினம்: நோய்த்தொற்று காலத்தில் இந்த தேநீர்களை மறக்கவேண்டாம்!
Published on

காலை எழுந்தவுடன் சூடாக ஒரு கப் டீ குடித்தால் அந்த நாளே ரம்மியமாக இருக்கும் என பலர் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு டீ பலரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. பேச்சுலர்கள் பலருக்கு உணவாகவே கருதப்படுகிறது இந்த டீ!

டீ பிரியர்களை குஷிப்படுத்த ஆண்டுதோறும் மே 21ஆம் தேதி உலக தேநீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டுவரை தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேஷியா, வங்கதேசம் கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா மற்றும் தன்சானியா போன்ற நாடுகளால் டிசம்பர் 15ஆம் தேதிதான் சர்வதேச தேநீர் தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மே 21ஆம் தேதியை உலக தேநீர் தினமாக அறிவித்தது.

தேநீரை உற்சாகத்திற்காக மட்டும் குடிப்பதில்லை. இதில் பல மருத்துவகுணங்களும் அடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர் வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது அவசியம். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்போது அது நல்ல மனநிலை, சீரான உடல் இயக்கம் மற்றும் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கிறது.

வல்லாரைக் கீரை டீ!

இது அனைவருக்கும் தெரிந்த நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதிமதுர டீ!

சுவாசப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கிய மூலிகைகளில் ஒன்று அதிமதுரம். மேலும் இது செரிமானத்தைத் தூண்டி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சளி, இருமல் மற்றும் மார்பு அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது இந்த அதிமதுரம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்ணிய கிருமிகள் மற்றும் அலர்ஜியிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே அதிமதுர டீயை தினசரி சேர்த்துக்கொள்ளலாம்.

ஏலக்காய் டீ!

பெரும்பாலானோருக்கு நறுமணமிக்க ஏலக்காய் டீ பிடிக்கும். உலகிலேயே அதிக மதிப்புமிக்க ஒரு நறுமணப்பொருள் ஏலக்காய். இது உடலில் வைரஸுக்கு எதிராக போராடும் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் செரிமான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

துளசி டீ!

துளசியில் வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான எதிர்ப்புப்பொருள்கள் அதிகம் உள்ளது. எனவே தினசரி துளசியை சேர்த்துக்கொள்ளும்போது நோய்க்கிருமிகள் உடலை அண்டாமல் தடுத்து பாதுகாக்கிறது. நுண்ணுயிர் எதிர்க்கொல்லியான ரோஸ்மாரினிக் அமிலம் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ், பயோஃப்ளவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் இதில் நிறைந்துள்ளது.

இஞ்சி டீ!

தினசரி நாம் குடிக்கும் டீயில் சிறிது இஞ்சி சேர்த்தாலே அதன் சுவை அபாரம்தான். மேலும் சிறந்த மூலிகையான இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. எனவே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினசரி இஞ்சி டீ சேர்த்துக்கொள்வது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com