உலகம் முழுவதும் இன்று ‘உலக தாய்மொழி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலுள்ள மொழிகளின் நிலையை பார்ப்போம்.
மனிதர்கள் தாம் நினைப்பவற்றை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பதற்காக தோன்றியதே மொழி. மனிதர்களின் உரையாடல்களுக்கு மட்டும் பயன்பட்டு வந்த மொழி நாளடைவில், மனிதர்களின் அடையாளங்களின் ஒன்றாக மாறியது. அந்த வகையில் மனிதர்கள் தாம் பேசும் மொழியை இன அடையாளமாக கருதி வருகின்றனர். மனிதர்கள் அனைவரும் தம் தாய்மொழியை தொடர்ந்து பின்பற்றியும் போற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் ஐநாவின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உலகத்திலிருக்கும் மொழிகளை காப்பதற்கும் மற்றும் அவற்றின் சிறப்பை பறைசாற்றுவதற்கும் தாய்மொழி தினத்தை உருவாக்கியது. இந்த உலக தாய்மொழி தினம், கடந்த 2000-வது ஆண்டு முதல் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பு தொடர்ச்சியாக மொழிகள் பற்றிய ஆய்வை நடத்தி வருகிறது. யுனெஸ்கோவின் ஆய்வின்படி, உலகத்தில் பேசப்படும் 6000 மொழிகளில் 43% மொழிகள் தற்போது அழியும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக மக்களில் 40 சதவிதம் பேர் தங்களின் தாய்மொழியில் கல்வி கற்கவில்லை என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஒரு மொழி, மற்றும் அதன் கலாச்சாரம் ஆகியவை அழிந்து வருவதாக யுனெஸ்கோவின் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியா நாடு பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுக்கு பெயர் பெற்ற நாடு. இந்திய நாட்டில் பேசப்பட்டு வருகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏராளம். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் இதுவரை 22 மொழிகள் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, கன்னடம், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிபூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. அத்துடன் இந்திய அரசு ஆறு மொழிகளுக்கு செம்மொழி என்ற அந்தஸ்ததையும் அளித்துள்ளது. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் சமஸ்கிருதம். இந்த ஆறு மொழிகளும் ஆயிரம் வருடத்திற்கும் மேல் பழமையான வரலாற்றை கொண்ட மொழிகள் ஆகும்.
இந்தியாவில் முதல் மொழி ஆய்வு கடந்த 1894-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் 179 மொழிகள் மற்றும் 544 வட்டார மொழிகள் இருப்பதாக கண்டறியப்பட்டன. அதற்குப்பின் 1961-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் 1100 தாய் மொழிகள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் 1971-மக்கள் தொகை கணக்கெடுப்பில் 108 மொழிகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மொழி எண்ணிக்கையின் குறைவு, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் செய்த மாற்றத்தால் ஏற்பட்டது. அதாவது, 1971-ஆம் ஆண்டு முதல் 10,000 பேருக்கு மேல் பேசும் மொழி மட்டும்தான் கணக்கிடப்பட்டது.
இதனையடுத்து ‘மக்களின் மொழி ஆய்வு’ (People's Linguistic survey of India) என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் 1961 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை 220 மொழிகள் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொழிகளுக்கு சரியான அங்கீகாரம் மற்றும் வாழ்வாதாரம் இல்லாததுதான் இத்தனை மொழிகள் அழிவதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவில் 780 மொழிகள் பற்றிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் உலக அளவில் அழியும் என்று கூறப்படும் 4000 மொழிகளில் 10% மொழிகள் இந்தியாவில் தான் பேசப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் இந்தியா இந்த மொழிகள் அழியாமல் காக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 121 மொழிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தாண்டு உலக தாய் மொழி தினத்தின் கருப்பொருள்(Theme) ‘உள்நாட்டு மொழிகள்- வளர்ச்சி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான காரணியாக இருக்கவேண்டும்’ என்பதே ஆகும். அதனால் இந்த தாய்மொழி தினத்தில் நாம் இந்தியாவில் உள்ள உள்நாட்டு மொழிகளின் வளர்ச்சியை காப்போம் என்ற உறுதிமொழி எடுப்போம்.