ஆயுள் காப்பீடு பாலிசி: ஏன் அவசியம் எடுக்க வேண்டும்? - விளக்கம் தரும் காப்பீட்டு ஆலோசகர்

ஆயுள் காப்பீடு பாலிசி: ஏன் அவசியம் எடுக்க வேண்டும்? - விளக்கம் தரும் காப்பீட்டு ஆலோசகர்
ஆயுள் காப்பீடு பாலிசி: ஏன் அவசியம் எடுக்க வேண்டும்? - விளக்கம் தரும் காப்பீட்டு ஆலோசகர்
Published on
ஆயுள் காப்பீடு பற்றி பலரும் தவறான புரிதல் கொண்டுள்ளனர். ஆயுள் காப்பீடு பற்றி பேசினாலே பலரும், நான் இல்லாத நிலையில் இழப்பீடு என் குடும்பத்துக்கு கிடைக்கும் சரி. நான் இருக்கும்போது எனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது பலரும் கேட்கும் ஒரு கேள்வியாகும். இதற்கு விளக்கம் தருகிறார் காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.
''காப்பீடு என்ற சிந்தனைத் தோன்ற முதல் தேவையாக இருந்தது இழப்புகளில் இருந்து ஒருவரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே. ஒரு நிறுவன திட்டத்தின் கீழ் பலரும் உரிய சந்தா (premium) செலுத்தி ஒரு ஒப்பந்தத்தின் கீழ் உறுப்பினர்களில் யாருக்காவது எதிர்கால இழப்பு ஏற்பட்டால் அதில் இருந்து காப்பது என்பதே காப்பீட்டின் அடிப்படை ஆகும். இது தேவையின் பொருட்டு எழுந்த சேவை ஆகும்.
பொருட்களின் இழப்புக்கு என்று உருவான காப்பீடு பின்னர் மனித வாழ்க்கைக்கும் இழப்பீடு தரும் வகையில் ஆயுள் காபீட்டுத் திட்டங்கள் உருவாகின. இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படை Term Insurance எனப்படும் குறித்த கால காப்பீடு ஆகும். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கைக்கு முழுமையான பணப் பாதுகாப்பு அளிக்கும் ஒன்றாகும். எனவே பிரிமியம் தொகையும் குறைவாகவும், கட்டிய பிரிமியம் திரும்பி வராத திட்டமாகவே இருக்கும்.
யாருக்கு, எங்கே, எப்படி, எப்போது எதிர்பாராத இழப்புகள் வரும் என்பதே தெரியாத நிலையில்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்த எதிர்பாராத இழப்பு என்பது ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் ஒரு உறுப்பினரின் இழப்பாக இருந்தால் அந்தக் குடும்பத்தின் வலியை, வேதனையை எதனாலும் போக்கவோ, மாற்றவோ முடியாது, என்றாலும் பணம் என்ற தேவையை இந்த ஆயுள் காப்பீடு ஈடு செய்து அந்த குடும்பத்தின் வலியைக் கொஞ்சம் போக்குகிறது.
ஆயுள் காப்பீட்டை என்றைக்கும் யாரும் எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம். எதிர்மறை விளைவுகளில் இருந்து ஒரு குடும்பத்தைக் காக்க நேர்மறையாக உதவிக்கரம் நீட்டும் திட்டமே ஆயுள் காப்பீடு என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். என்றைக்குமே வருமானம் ஈட்டும் ஒரு உறுப்பினரே குடும்பத்தின் முக்கியமானவர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்த நிலை மாறி இன்றைக்கு பெண்களும் அந்த இடத்தில் இருப்பது மனித சமூகத்தின் வளர்ச்சியும் மாற்றமும் ஆகும்.
இந்த சம்பாதிக்கும் நபர் திடீரென்று இல்லை என்றால் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பது அந்த குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்க்கும் ஒருவரால் மட்டுமே முடியும். நம்மை அந்த ஒரு நபராக நிறுத்திப் பார்த்தால் ஆயுள் காப்பீடு எவ்வளவு அதிமுக்கியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆயுள் காப்பீடு நமக்காக என்ன செய்யும்?
உங்களுக்காக, உங்கள் எதிர் காலத்துக்காக என எடுக்கும் ஆயுள் காப்பீடுக்கு நீங்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு அரசு வருமான வரிச் சலுகையை பெற வழி செய்து இருக்கிறது. ஆயுள் காப்பீடு பாலிசிக்கு செலுத்தும் பிரிமியம் தொகைக்கு 80-சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. ஒரு நிதியாண்டில் நீங்கள் செலுத்தும் பிரிமியம் தொகையில் ரூபாய் ஒன்றரை லட்சம் வரைக்கும் வரிச் சலுகைக்காக கழிக்க முடியும். அது மட்டுமா? உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கு எந்த ஒரு வரிப் பிடித்தமும் செய்யப்படாது. முழுமையான வருமான வரி இல்லாத தொகை உங்கள் குடும்பத்துக்குச் சென்று சேரும்.
நீங்கள் இல்லாத நிலையில் என்ன நன்மைகள் கிடைக்கும்? அதையும் பார்க்கலாம்.
கடனில்லா வாழ்க்கை தான் இன்றைக்கு நிம்மதி தருவதாகும். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை இன்றைய சூழலில் நினைக்க முடியாத அளவிற்கு பொருளாதார தேவைகளும், வாழ்க்கை சூழலும் மாற்றி இருக்கிறது. பல குடும்பத்தில் தனிநபர் கடன், வண்டிக் கடன், வீட்டுக் கடன், கடன் அட்டை என்று கடன்கள் பின்னிப்பிணைந்து இருக்கிற சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது. இந்த நிலையில் அந்தக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரு நபரின் மறைவு என்பது நடு ஆற்றில் படகில் விழுந்த ஓட்டை போலாகும். ஆனால், அந்த நபருக்கு ஆயுள் காப்பீடு இருந்தால் அந்தப் படகு எவ்வித சிக்கலும் இல்லாமல் கரை சேர முடியும். ஆம், ஆயுள் காப்பீடு தரும் இழப்பு அந்த குடும்பத்தின் எல்லா சுமையும் சுமக்கும் ஒரு மாற்றாக இருக்கும்.
கடன் சுமை மட்டுமா? மகிழ்வான எதிர்காலத்திற்கும் இந்த காப்பீடு கண்டிப்பாக உதவி செய்யும். ஆம், அந்த குடும்பத்தின் எதிர்காலத் தேவையை தீர்த்து, குடும்ப வாரிசுகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கும் அந்த காப்பீடு உறுதுணையாக இருக்கும். அது மட்டுமா? வயோதிக காலத்தில் உங்கள் துணையின் வாழ்க்கை யாரையும் எதிர்பார்த்து ஏக்கத்துடனும் மன வருத்தத்துடனும் துன்பத்துடன் இல்லாமல் அமைதியாக இருக்க நீங்கள் எடுக்கும் ஆயுள் காப்பீடு உங்களுக்கு பதில் துணையாக இருக்கும்.
ஆயுள் காப்பீடு ஒரு செலவா என்றால் இல்லை என்பதே பதிலும் உண்மையும் ஆகும். ஆயுள் காப்பீடு உங்கள் குடும்பத்தின் சிக்கல் இல்லாத எதிர்கால வாழ்க்கைக்கான ஒரு முதலீடு மட்டுமே. வருமுன் காப்பது தானே நமது பண்பாடு. தவறாமல் உடனடியாக நீங்களும் ஒரு ஆயுள் காப்பீடு எடுத்து விடுங்கள். இதற்கான பிரிமியம் தொகையும் அதிகமில்லை. டெர்ம் இன்சூரன்ஸ் எனப்படும் குறித்த கால காப்பீட்டு திட்டத்தில் சுமார் 50 லட்சம் காப்பீட்டுக்கு ஒரு ஆண்டுக்கான பிரிமியம் தொகை ரூ. 15,000/- க்குள் மட்டுமே வரும். இது காப்பீடு வழங்கும் நிறுவனங்களைப் பொருத்து சிறிது மாறலாம்'' என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com