உங்கள் கனவு இல்லத்தை காக்கும் ஹோம் இன்சூரன்ஸ் - நிபுணர் விளக்கம்

உங்கள் கனவு இல்லத்தை காக்கும் ஹோம் இன்சூரன்ஸ் - நிபுணர் விளக்கம்
உங்கள் கனவு இல்லத்தை காக்கும் ஹோம் இன்சூரன்ஸ் - நிபுணர் விளக்கம்
Published on
வீட்டுக் காப்பீடு மூலமாக நம்முடைய வாழ்க்கையை நாம் அமைதியாக, எதிர்கால பயமின்றி வாழலாம்.
 
நம்முடைய வாழ்க்கையில் மிகவும் தேவை எண்ணி என்று பல தேவையற்ற செலவுகளை செய்கிறோம். அதே நேரம் தேவையில்லை என்று நினைத்து மிக மிக முக்கியமான காப்பீடு என்ற முதலீட்டை வீணான செலவென்று செய்யாமல் விட்டுவிடுகிறோம். காப்பீடு நமது உயிருக்கும், நமது வண்டிகளுக்கும் மட்டுமல்ல அசையா சொத்தான நமது சொந்த வீட்டுக்கும், அதில் நாம் வைத்துள்ள விலை உயர்ந்த பொருட்களுக்கும் கிடைக்கும் என்பதை நம்மில் எத்தனைப்பேர் அறிவோம்? வீட்டுக் காப்பீடு ஏன் அவசியம் எடுக்க வேண்டும்? வீட்டுக் காப்பீட்டில் உள்ள கவனிக்கத்தக்க அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் தருகிறார் காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.
''வீட்டுக் காப்பீடு (HOME INSURANCE) என்பது நமது பெரும் உழைப்பின் வழியாக கட்டிய வீட்டின் பாதுகாப்புக்கு மிகவும் தேவையானது. அதுவும் கடனில் வாங்கிய வீடு என்றால் நம்முடைய வாழ்நாளின் உழைப்பை எடுத்துக்கொண்டு இருக்கும் வீடல்லவா? பேரிடர்களான புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து,மற்றும் எதிர்பாராத தீவிரவாதத் தாக்குதல் என்று பல நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நடக்கிறது. அதனால் நம்முடைய வீடு சேதமடையலாம். அதில் இருந்து நமது வீட்டை காக்க வீட்டுக்கு காப்பீடு முக்கியமாகிறது.
அதுமட்டுமல்ல, வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போய்விட்டாலும் இந்த காப்பீட்டின் துணைகொண்டு நாம் இழப்பீடு பெறலாம், ஆனால் காப்பீடு எடுக்கும் முன்பு எந்தெந்த பொருட்களுக்கு (நகை, விலையுயர்ந்த பொருட்கள் போன்றவை, மற்றும் அந்த நிறுவனங்கள் அனுமதி தரும் மற்ற பொருட்கள்) காப்பீடு வேண்டும் என்பதை நம்முடைய காப்பீட்டு நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
நாம் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் இந்த வீட்டுக் காப்பீட்டின் வழியாக நம்முடைய விலையுயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். அந்த காப்பீட்டு மேலே கூறியுள்ள சூழலில் நம்மை இழப்பில் இருந்து காக்கும். வீட்டுக் காப்பீட்டுக்கு செலவு அதிகம் என்று நினைக்க வேண்டாம். மிகக்குறைந்த சந்தாவே இருக்கும். இந்த வீட்டுக் காப்பீடு வழியாக நம்முடைய வாழ்க்கையை நாம் அமைதியாக, எதிர்கால பயமின்றி வாழலாம்.
இன்றைக்கு நம்மில் பலரும் வங்கிக் கடன் பெற்றுத்தான் சொந்தமாக வீடோ, அடுக்குமாடி குடியிருப்போ வாங்குகிறோம். அதற்கு நாம் பல ஆண்டுகள் வட்டியும் முதலும் தவணை முறையில் செலுத்துகிறோம். இந்த சூழ்நிலையில் முதன்மைக் கடன் வாங்குபவரின் திடீர் மரணம், வேலை இழப்பு அல்லது பெரிய விபத்து போன்ற சூழ்நிலையால் வேலையை தொடர முடியாமை போன்ற நிலை ஏற்படலாம். இது நமது குடும்பத்துக்கு சொல்ல முடியாத பெருந்துயரமாகும்.
நம்முடைய குடும்பத்தின் எதிர்காலம் ஒரு பக்கம் இருக்க, ஆசை ஆசையாய் வாங்கிய நமது கனவு இல்லம் நாம் இல்லாத, நமக்கு மாத வருமானம் இல்லாத, நம்மால் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படும் நிலையில், நாம் தொடர்ந்து மாதத் தவணைச் செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்த நிறுவனத்தால் சட்டப்படி கையகப்படுத்தும் நிலை வரலாம்.
இந்த நிலையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவ தயாராக இருப்பது கடன் காப்பீடு ஆகும். இதில் நாம் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப கடன் பாதுகாப்பு காப்பீட்டை (CREDIT SHIELD INSURANCE) எடுத்துக் கொள்ளலாம். நாம் வாங்கும் பல லட்சம் கடனுக்கு சில ஆயிரங்கள் காப்பீட்டு சந்தாவாக செலுத்தினால் அந்த கடன் தொகைக்கு அவர்கள் உறுதி தருவார்கள். நாம் இல்லை என்றாலும் காப்பீட்டு நிறுவனம் நாம் கடன் வாங்கிய நிறுவனத்துக்கு அந்த தொகையை செலுத்திவிடும். நம்முடைய வீடு நம் குடும்பத்திற்கு எப்போதும் இருக்கும்.
நமது வீட்டுக்கடன் காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நாம் எடுத்துள்ள காபீட்டுத் திட்டதின் வகையைப் பொறுத்தது. பல விரிவான வீட்டுக் கடன் காப்பீட்டுத் திட்டங்கள் இங்கு கிடைக்கின்றன, அவை நமது தேவைக்கு ஏற்ப பல்வேறு வழியில் நமக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
தற்போதைய நிலையில் வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கியோ, நிதி நிறுவனமோ, அவர்களாவே இந்த காப்பீட்டை நமக்காக எடுத்து விடுகிறார்கள். நம்முடைய மாதத் தவணையில் இந்த காப்பீட்டுக்கும் சேர்த்து பணம் எடுத்து கொள்கிறார்கள். நீங்கள் கடன் வாங்கும் முன்பு இது பற்றி நிறுவனங்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் எடுக்கவில்லை என்றால் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி எடுக்கும் காப்பீட்டுக்கு சந்தாவை, மாதத் தவணை, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு அல்லது முழு கால அளவுக்கும் என்று செலுத்தும் வசதி இருக்கிறது. உங்கள் வசதிப்படி, விருப்பப்படி சந்தா செலுத்தும் காலத்தை தெரிவு செய்யலாம். எந்த காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அதில் அரசின் வழிகாட்டுதல் படி வரிச்சலுகைகள் கிடைக்கும்'' என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com