மொய் விருந்துக்கு கணினி செயலி : கலக்கும் புதுக்கோட்டை

மொய் விருந்துக்கு கணினி செயலி : கலக்கும் புதுக்கோட்டை
மொய் விருந்துக்கு கணினி செயலி : கலக்கும் புதுக்கோட்டை
Published on

மொய்விருந்துக்கு பெயர் போன புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணினி மயமான மொய் விருந்தால் நேரத்தை மிச்சப்படுத்தி செலவு குறைந்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, மாங்காடு, கீரமங்களம் உள்ளிட்ட பகுதியில் ஆடி மாதத்தில் மொய் விருந்து சேவை பிரசித்தி பெற்றது. இதற்குமுன் லட்சங்களில் வசூல் ஆன மொய் விருந்து தற்போது கோடிகளில் புரள ஆரம்பித்துள்ளது. ஒருவர் மொய் விருந்து வைத்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் மீண்டும் மொய் விருந்து வைக்கின்றார். ஒரு மொய் விருந்தை 10 முதல் இருபது நபர்கள் கூட்டாக சேர்ந்து நடத்துவது வாடிக்கையாக உள்ளது. மொய்க்கு என்றே வைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மொய் எழுதுவதற்கு உறவினர்கள் தவிர்த்து 50க்கும் மேற்பட்ட ஆட்களை சம்பளத்திற்கு பிடிக்க வேண்டிய நிலையுள்ளது. இதுவே இந்த விருந்தை வைப்பவர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. 

விருந்துக்கு வரும் பெரும்பாலானோர் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக மொய் எழுதுவதால் பணத்தை எண்ணுவது சிரமமாக இருந்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு வங்கிகள் மூலம் பணம் எண்ணும் மெஷினை பயன்படுத்தினர். இந்நிலையில் அப்பகுதி மக்கள், முதல் முறையாக மொய் எழுதுவதற்கு கணினியை அறிமுகப்படுத்தியுள்ளனர். கணினி மயமான மொய் விருந்து இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த கணினி முறையில் மொய் எழுதும்போது மொய் எழுதியவருக்கு ரசீதும், செல்போனில் குருஞ்செய்தியும் அனுப்பப்படுகின்றது. மொய் விருந்துக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டது தான் இந்த ‘மொய் டெக்’ செயலி. விருந்துக்கு செல்ல முடியாத சிலர், இனி கவலைப்பட வேண்டி இருக்காது. காரணம் இச்செயலி மூலம் மொய் விபரங்களை ஆண்ட்ராய்டு செல்போனில் பார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. மொய் யாருக் கெல்லாம் செய்துள்ளோம் என்பதை இச்செயலி சுலபமாக தெரிந்து கொள்ளலாம். 

மேலும் மொய் எழுதி முடிந்த பிறகு மென்பொருள் மூலமாகவும், பிரிண்ட் எடுத்தும் ஊர் வாரியாக தெளிவான விபரங்களுடன் மொய் விருந்து வைத்தவர்களுக்கு வழங்குகின்றனர். இதற்கென ஒரு கணினிக்கு 3500 ரூபாயை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

இந்த புதிய முறை மிகவும் அற்புதமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த நடைமுறை தற்போது மொய்விருந்து நடக்கும் பல இடங்களில் பிரபலம் அடைந்து வருகிறது.

தகவல்கள்: குமரேசன் - செய்தியாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com