வரலாற்றில் இன்று | இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி பதவி ஏற்ற தினம் இன்று!

இந்திய பெண் பிரதம மந்திரியாக இந்திராகாந்தி பதவியேற்றுக்கொண்ட தினம் இன்று.
இந்திராகாந்தி
இந்திராகாந்திPT
Published on

இந்திரா காந்தியின் இயற்பெயர் பிரியதர்சினி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள். ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது பெயரை இந்திரா காந்தி என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு சஞ்ஜய், ராஜீவ் என இரு மகன்கள். அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவிற்கு பிறகு, ஜனவரி 1966 ஜனவரி 19ல் பிரதமமந்திரியாக பதவியேற்றார் இந்திரா.

ஆனால் இவர் பிரதமரானது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் 1967ல் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் துணை பிரதமரான முரார்ஜி தேசாய், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலரை வெளியேற்றினார். இந்த நிகழ்வை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட இந்திராகாந்தி பெரும்பான்மையான ஆதரவாளர்களைக் கொண்டு இந்திரா காங்கிரஸ் என்ற புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி மக்களின் மதிப்பை பெற்றார். 1971ல் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்று மீண்டும் இந்திய பிரதமரானார்.

வங்காளம் உருவானது

இந்திரா காந்தி பிரதமரானதும், பாகிஸ்தானில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தில் (கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக படைகளை இந்தியாவிலிருந்து அனுப்பினார். இதில் வெற்றிபெற்ற கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாகமாறியது.

எமர்ஜென்ஸி காலம்

இந்திரா காந்திக்கு எதிராக 1971ல்  சோசலிஸ்ட் கட்சியானது இந்திரா காந்தி தேர்தல் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி, ஜூன் 1975ல் அலகாபாத்  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில் உயர் நீதிமன்றம் இந்திராகாந்திக்கு எதிராக , பாராளுமன்றத்தின் பதவி பறிக்கப்படும் என்றும் இந்திராகாந்தி அரசியலிலிருந்து ஆறு ஆண்டுகள் விலகி இருக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அங்கும் அவருக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அவரின் பதவி பறிபோகும் நிலையில் இருந்ததால் உடனடியாக 1975 ஜூன் 25 மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் சங்கருடன் நாட்டின் நிலைமையைப்பற்றி ஆலோசனை நடத்தினார்.

குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழலில் எதிர்கட்சிகளின் கோரிக்கைகள், அழுத்தங்கள் அதிகமாக இருந்தன. இச்சமயத்தில் கடுமையான உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதே இந்திராகாந்தியின் விருப்பமாக இருந்தது. அதனால் இந்திய அரசியலமைப்பை மட்டும் அல்லாது அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்து, 352 வது பிரிவின் படி இந்தியா முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். ஜூன் 26-ஆம் தேதி ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் முரார்ஜி தேசாய் தேசாய் போன்ற பல தலைவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பல அவசர சட்டங்கள் இயற்றப்பட்டன.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜர், பீகார் மாநில அரசியல் தலைவர் கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை.

இந்திரா காந்தியின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், இரண்டு ஆண்டுகள் வரை இந்தியாவில் எமெர்ஜென்ஸி காலம் நீடித்தது. அதனால் பொதுமக்களின் அதிர்ப்தியை பெற்றார். இதனால் 1977ல் நடந்த தேர்தலில் இந்திராகாந்தியும் அவரது கட்சியும் படுதோல்வியடைந்தது.

மீண்டும் வெற்றி

இருப்பினும் 1980 ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். இதேவருடத்தில் 1980ல் நடந்த விமானவிபத்து ஒன்றில் இந்திராகாந்தியின் மூத்த மகனும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான சஞ்சய் காந்தி இறந்தார்.

சீக்கிய பிரிவினை

1980ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் தன்னாட்சி கோரி வன்முறை செய்து வந்தனர். இதில் சீக்கியர்களில் சிலர் ஒன்றுகூடி 1982ல் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸில் உள்ள ஹர்மந்திர் சாஹிப் (பொற்கோயில்) வளாகத்தை சாண்ட்ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையில் ஏராளமான சீக்கியர்கள் ஆகிரமித்து தங்களின் பலத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் அரசாங்கத்திற்கும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்தன. 1984ல் இந்திராகாந்தி இந்திய இராணுவத்தின் உதவியுடன் பிரிவினைவாதிகளை பொற்கோவில் வளாகத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆனாலும், சீக்கியர்கள் வெளியேறாத நிலையில் இந்தியராணுவத்தைக் கொண்டு, சீக்கியர்களை அப்புறப்படுத்தும் பணியை செய்ய உத்தரவிட்டார். இதில் இந்திய ராணுவத்தால், 450 சீக்கிய போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலில் உள்ள சில கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்திராகாந்தியின் இறுதி நாள்

அமிர்தசரஸில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக 31 அக்டோபர் 1984 ல் இந்திராகாந்தியின் சொந்த சீக்கிய மெய்ப் பாதுகாவலர்கள் புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தியின் தோட்டத்திலேயே அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்திராவின் நீண்ட நெடிய சகாப்தம் அன்றுடன் நிறைவுக்கு வந்தது. மக்கள் கண்ணீரில் மிதந்தனர்.

பாரதியார் கண்ட புதுமைப்பெண்ணாக இருந்து இந்தியா ஒருங்கிணைப்புக்கு காரணமாக விளங்கிய இந்திராகாந்தி முதன்முறையாக பிரதமமந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட தினம் இன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com