இந்திய பாரம்பரிய இடங்கள் 27: சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

இந்திய பாரம்பரிய இடங்கள் 27: சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காசம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா
Published on

கி.மு 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிந்துவெளி நாகரிகத்தின் ஹரப்பா குடியிருப்புகள், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் லோத்தல் மற்றும் தோலாவிரா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய சிந்துவெளி நாகரீக காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது லோத்தல் தான். லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நகரத்தின் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஏராளமான அரசர்களின் படையெடுப்புக்கு ஆரம்பமாகவும், அதற்கு முடிவாகவும் குஜராத் அமைந்துள்ளது. சாளுக்கியர்கள், புலிகேசிகள், இராஷ்டிரகூடர்கள், பாலர்கள், கில்ஜிக்கள், மராத்தியர்கள், முகலாயர்கள் என அன்று முதல் தற்போது வரை ஏராளமான படையெடுப்புகளையும் ஆட்சி மாற்றங்களை நினைவு கூறும் வகையில் ஏராளமான எச்சங்களை கொண்டுள்ளது குஜராத். இதுமட்டுமின்றி மக்களைக் கவரும், வகையில் வரலாற்று நினைவுகளையும், பல்வேறு சுற்றுலாத்தலங்களையும், பாரம்பரிய இடங்களையும் பொக்கிஷமாக வைத்துள்ளது.

பழமையாக கட்டடக்கலைகளும், இந்து முஸ்லீம் ஒருமைப்பாட்டிற்குச் சின்னமாகவும், விளங்கிய ஒரு முக்கிய இடம் தான் குஜராத்தில் உள்ள பஞ்சமஹால். ஏராளமான வரலாற்று புதையல்களை கொண்டுள்ள இந்த இடம் அப்போதைய குஜராத்தின் தலைநகராகவும் இருந்துள்ளது. அங்கு அமைந்துள்ள சம்பானேர் - பாவாகேத் தொல்லியல் பூங்கா-வின் சிறப்பையும், வரலாற்றில் பிடித்த இடத்தையும் பற்றி தான் நாம் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பஞ்சமஹால் மாவட்டத்தில், சுமார் 800 மீட்டர் உயரம் கொண்ட பாவாகேத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகேத் என்றழைக்கப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் சாவ்டா (Chavda dynasty) வம்சத்தின் மிக முக்கியமான அரசரான வனராஜா சாவ்டாவால் நிறுவப்பட்ட வரலாற்று நகரமான சம்பானேரைச் சுற்றி அமைந்துள்ளது. பாவாகத் மலைகளிலிருந்து தொடங்கி சம்பானேர் நகரம் வரை நீண்டு செல்லும் கோட்டைகளுடன் இந்த பாரம்பரிய தலம் நிரம்பியுள்ளது. இந்தியாவின் பழமையான பாறை அமைப்புகளில் ஒன்றாக இந்த பகுதி கருதப்படுகிறது.

வரலாற்றில் சம்பானேர்-பாவாகேத்:

கி.பி. 8ம் நூற்றாண்டில் சாவ்டா வம்சத்தைச் சேர்ந்த வனராஜா அரசனின் ராஜபுத்திரத் தளபதியான சம்பாவின் நினைவாக பாவாகேத் மலையின் அடிப்பகுதிக்கு சம்பானேர் பாவாகேத் என்று பெயரிடப்பட்டது. கி.பி. 746 முதல் 806 வரை இப்பகுதிகளை வனராஜா சாவ்டா ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பின் கி.பி 11ம் நூற்றாண்டில், ராம் கவுர் துவார் (Ram Gaur Tuar) ஆட்சி செய்தார். இதையடுத்து, கி.பி 1297 வரை சம்பானேர் அன்ஹில்வாட் அரசின் கீழ் இந்நகரம் இருந்தது. 1297ம் ஆண்டுக்குப் பின் கில்ஜி வம்சத்தை சேர்ந்த அலாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சியை இழந்தனர்.

இதே காலகட்டத்தில் சௌஹான் ராஜபுத்திரர்களும் சம்பானேரில் குடியேறினர். அதைத்தொடர்ந்து கி.பி 13ஆம் நூற்றாண்டில் சௌலுக்யா என்றும் அழைக்கப்படும் சோலங்கி மன்னர்களும், கிச்சி சௌஹான்களும் கோட்டைகளைக் கட்டி ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏராளமான கோயில்களையும், நீர்த்தேக்கங்களையும் அமைத்தனர். கி.பி. 1484ம் ஆண்டில் குஜராத் இளம் சுல்தானாக விளங்கிய மஹ்மூத் பேகடா (Mahmud Begada) இவர்களை தோற்கடித்து இப்பகுதிகளைப் கைப்பற்றினார். இந்தப் பகுதிக்கு முகம்மதாபாத் சம்பானேர் (Muhmudabad Champaner)எனப் பெயரிட்டார். அதன்பின் தன்னுடைய மசூதிக்கு அவரே அடிக்கல் நாட்டினார். மேலும், சம்பானேர் பகுதிகளைப் புனரமைத்து சுமார் 23 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய கட்டடங்களை எழுப்பினார்.

அலங்கரிக்கப்பட்ட கட்டமைப்புகளையும், அங்கிருந்த கோட்டைகளையும் பலப்படுத்தினார். மலைக்கோட்டையை மௌலியாவாகவும் (மலையின் இறைவன்), அவரது கோட்டையாகவும் மாற்றி அவுரங்காபாத்தில் இருந்த தலைநகரத்தைச் சாம்பனாருக்கு மாற்றினார். அவரின் ஆட்சி காலத்தில், மாம்பழங்களும், சந்தன மரங்களும், வண்ணமயமான பட்டுப்புடவைகளும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் வணிகர்களும், கைவினைஞர்களும் இப்பதிகளில் அதிகம் இருந்தனர். கி.பி. 1511ம் ஆண்டில் மஹ்மூத் இறந்த பிறகு, அவரின் வாரிசுகள், சிக்கந்தர் ஷாவும், பகதூர் ஷாவும் அடுத்தடுத்து ஆட்சி செய்து வந்தனர். கி.பி. 1535ம் ஆண்டு முகலாய மன்னர் ஹுமாயூன் சம்பானேர் மீது படையெடுத்து இவர்களின் கஜானாவை கொள்ளையடித்தார். 1536 இல் பகதூர் ஷா இறந்தவுடன், தலைநகரமும் நீதிமன்றமும் அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டது. நகரம் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இதனால் பல நூற்றாண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில், வெறிச்சோடி காணப்பட்டது.

இதையடுத்து, கி.பி. 1803ம் ஆண்டுகளில் இந்தியா வந்த ஆங்கிலேயர்களால் இப்பகுதி அடையாளம் காணப்பட்டது. கி.பி.1812ம் ஆண்டுகளில் காலரா நோய் தொற்றினால் பலர் உயிரிழந்தனர். கி.பி.1829ல் இப்பகுதியை முழுவதுமாக தன்வசப்படுத்திய ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளைப் புனரமைத்து, பட்டு தயாரிப்பதற்காக மேம்படுத்தப்பட்டது. கி.பி.1879ம் ஆண்டுகளில் பில் (Bhil) மற்றும் நாய்க்டா (Naikda) பழங்குடியினர் இங்கு குடியேறத் தொடங்கினர். இங்குள்ள கோட்டைகளும், கட்டடங்களும் சிதிலமடைந்து வர ஆரம்பித்தது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பகுதிகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் சீரமைக்கும் பணி தொடங்கியது. பரோடா பாரம்பரிய அறக்கட்டளையின் (Baroda Heritage Trust) கீழ் இந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுமார் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இப்பகுதியைப் பாரம்பரிய இடமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிடம் இந்திய அரசு முறையிட்டது.

வரலாற்று நினைவுகளையும், பழமையான கட்டடக்கலையும், இந்து முஸ்லீம் ஒருமைப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, பாரம்பரியம், வரலாறு என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 3,4,5 மற்றும் 6-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா சேர்க்கப்பட்டது.

சம்பானேர்-பாவாகேத்தில் தற்போது எஞ்சியிருப்பது காளிகாமாதா கோயில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. பரோடா பாரம்பரிய அறக்கட்டளை வெளியிட்டுள்ள பட்டியலின் படி, இங்கு 114 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதில் 39 சின்னங்கள் மட்டுமே இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள 94% நிலம் வனத்துறைக்குச் சொந்தமானது. மசூதிகள், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், கல்லறைகள், கிணறுகள், சுவர்கள் மற்றும் மொட்டை மாடிகள் உட்பட 11 வகையான கட்டடங்கள் இங்கு உள்ளன. பல்வேறு நினைவுச்சின்னங்கள் பாவகேத் மலையின் அடிவாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன.

நினைவுச் சின்னங்கள்: இங்குள்ள ஹெலிகல்(helical) வடிவத்தில் அமைக்கப்பட்ட படிக்கட்டுள் நிறைந்த கிணறுகள், சாகர் கானின் தர்கா, கஸ்பின் தலாவ் அருகே நகர வாயில், கோட்டைச் சுவர்கள், தெற்கு பத்ரா வாயில்கள், ஷாஹெர் கி மஸ்ஜித் (Shaher ki Masjid), ஜாமி மஸ்ஜித் (Jami Masjid), நகினா மஸ்ஜித் (Nagina Masjid),கேவ்டா மஸ்ஜித் (Kevda Masjid), காமனி மஸ்ஜித் (Kamani Masjid), இடேரி மஸ்ஜித் (Iteri Masjid), சிக்கந்தர் ஷா-வின் கல்லறை என பல்வேறு தொன்மை மிக்க மசூதிகளும், சாட் காமன் ( Saat Kaman), சிந்தவி மாதாஜி கோவில் (Sindhvi Mataji Gheraiya Jadiya Temple) போன்ற பல்வேறு கட்டடக் கலைநயமிக்க கோயில்களும் ஏராளமாக உள்ளன.

மசூதிகள்: முகலாயர்கள் காலத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் ஐந்து பெரும் மசூதிகள் அமைந்துள்ளது. நிலத்திலிருந்து உயரமான மேடை அமைத்து அதற்கு மேல் இந்த மசூதிகளை அமைத்துள்ளனர். பிரதானமான மசூதியான ஜாமி மஸ்ஜித்தின், மத்திய குவிமாடம், அதற்கு அரணாக இரண்டு மினார்கள் என்று அமைக்கப்பட்டுள்ளது. குவிமாடம் 172 தூண்கள் மேல் அமைக்கப்பட்டுள்ளது. கல்லால் அமைக்கப்பட்ட ஜாலிகள் (Jali), மாடங்கள் கொண்டு அமைந்துள்ளது.

காளிகா மாதா கோவில் (Kalika Mata Temple): "பெரிய கறுப்புத் தாய்" என்று அழைக்கப்படும் காளிகா மாதாவின் கோயில் 800 மீ உயரமுள்ள பாவகத் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான கோயிலாகும். இங்குள்ள காளிகா மாதா 3 பெண் தெய்வங்களின் உருவங்களைக் கொண்டுள்ளது. இது 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுவில் காளிகா மாதாவும், வலதுபுறம் காளியும், இடது புறம் பஹுசாரமாதாவும் (Bahuchara Mata) உள்ளது. இந்த கோவிலின் கோபுரத்தில், இப்பகுதியில் மிகவும் மதிக்கப்படும் ஒரு முஸ்லீம் துறவியான சதானந்த்ஷா பீரின் சமாதியும் உள்ளது. இது குஜராத்தின் முக்கிய சக்தி பீடங்களில் மூன்றாவது மற்றும் தாந்த்ரீக வழிபாட்டிற்குப் பெயர் பெற்றது. இப்பகுதியில், இது ஒரு மணி நேரத்திற்கு 1200 பேர் பயணிக்கக்கூடிய வகையில் மோனோ-கேபிள் ரோப்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் மிக உயரமான ரோப்வே எனவும் கூறப்படுகிறது. சைத்ரா அஷ்டமி அன்றும், நவராத்திரியின் போதும் (ஒன்பது நாள் திருவிழா), ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு செல்கின்றனர்.

சைவக் கோவில்: காளிகா மாதா கோவிலை அடுத்து பிற கோவில்கள் என்று எடுத்துக்கொண்டால் இந்து மற்றும் சமண சமய கோயில்களை இங்கே காண முடிகிறது. 10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ பிரிவைச் சேர்ந்த கோயில் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் இது பெரும்பாலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கருவறை, அர்த்த மண்டபம், மண்டபம், விமானம் உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு சிறந்த சைவ இந்து கோவிலில் வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது வழிபாட்டிற்குப் பெரிதாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

சமணக் கோவில்: சமணக் கோயில் என்று எடுத்துக்கொண்டால் இங்கே மூன்று பிரிவுகள் அமைந்துள்ளது. முதலாவது நவலக்கா கோயில்கள் என்று அழைக்கப்படும் பவனதேரி கோயில்கள் குழு, இரண்டாவது குழு தீர்த்தங்கரர்களான சுபார்ஷ்வநாதர் மற்றும் சந்திரபிரபு. மூன்றாவது குழு, பாவகர் மலையின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. அவற்றின் ஸ்டைலிஸ்டிக் மற்றும் கட்டடக்கலை அம்சங்களின் அடிப்படையில், இந்த கோவில்கள் 14-15 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோயிலின் அருகில் 30 அடி உயரத்தில் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுள் ஒருவரான பாகுபலியின் சிலை அமைந்துள்ளது. கி.பி 140 இல் இந்தியாவிற்கு வந்த கிரேக்கப் புவியியலாளர் டோலேமி (Greek geographer Tolemi) இந்த கோயிலை ஒரு பழமையான மற்றும் புனிதமான இடமாகக் கருதினார். 1483 ஆம் ஆண்டில் குஜராத்தின் முஸ்லீம் சுல்தானான மஹ்மூத் பேகடா (Mahmud Begada)இந்த கோவிலைப் பெரிதும் சிதைத்தார். 1880-ல் இந்தக் கோயில் பழுதுபார்க்கப்பட்டது.

கோட்டைகள்: இங்கு சுமார் பதினொன்று கோட்டைகள் அமைந்துள்ளது. சோலங்கி மன்னர்களும், கிச்சி சௌஹான்களும் அமைத்த கோட்டை, சுல்தான் அமைத்த கோட்டை என்று எல்லாம் சிறப்பு பெற்றவை. கோட்டைகள் பெரும்பாலும் 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக அமைந்துள்ளது. கோட்டைக்குள்ளேயே முகாம்கள், சிறைகள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்த மலையில் அதிகம் கிடைக்கும் சிவப்பு மஞ்சள் நிற மணல் கற்களால் இந்த கோட்டைக்கு அரண் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் சுட்ட செங்கற்கள் சாந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. வளைந்த, இணைக்கப்பட்ட கோட்டை வாயில்கள் எல்லா திசைகளிலும் அமைந்துள்ளது. நுழைவுவாயில்கள் செரிவான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நீரியல் அமைப்புகள் என்று எடுத்துக் கொண்டால், அந்த காலத்தில் வாழ்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுகளும், அவற்றை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்புகளும் கொண்டு இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான நீரை தேக்கி வைக்கும் வசதிக்காக நீர் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாய கட்டமைப்புகள், படி கிணறுகள், தொட்டிகள், நீர்த்தேக்க கிணறுகள் உள்ளிட்டவை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு: சென்னையிலிருந்து சுமார் 1,778 கி.மீ தொலைவில் உள்ள சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா அமைந்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்திருக்கும் இந்த பகுதிக்கு, நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் ரயில்,அகமதாபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் வசதிகள் உள்ளன. சம்பானேர் பகுதியிலிருந்து 48 கி.மீ தொலைவில் வதோதரா ரயில் நிலையம் அமைந்துள்ளது. 42 கி.மீ தொலைவில் விமான நிலையமும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து விமானச் சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவிற்குச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 30 ரூபாயும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 500 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

(உலா வருவோம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com