மும்பை கடற்கரைக்கு அருகில் ஏராளமான தீவுகள் இருந்தாலும், மும்பையின் துறைமுகப்பகுதியில் உள்ள காரபுரி (Gharapuri) தீவில் அமைந்துள்ள எலிஃபெண்டா குகைகள் மிகவும் பிரபலமானவை. இங்குள்ள எலிபண்டா குகைகளில் இந்து, பௌத்தக் குடைவரைக் கோயில்களும், ஏராளமான சிற்பங்களும் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் துப்பாக்கி சூடும் பயிற்சியை பெற்று வந்தனர். மேலும், இந்த இடத்திற்கு எலிஃபெண்டா தீவு என்றும் பெயர் வைத்தனர். போர்ச்சுக்கிசியர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக இங்குள்ள சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அஜந்தா, எல்லோரா என்று வரலாற்றில் இடம் பிடித்த பல இடங்கள் மகாராஷ்டிராவில் இருந்தாலும், இந்த இடம் மிகவும் தனித்துவமானது.
16 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த தீவில் செண்ட்பந்தர், மோரா பந்தர் மற்றும் ராஜ் பந்தர் என மூன்று குக்கிராமங்கள் உள்ளன. மோரா பந்தர் கிராமம் அடர்ந்த காடுகளைக் கொண்டது. செண்ட்பந்தர் என்ற கிராமத்தில்தான் புகழ்பெற்ற எலிபெண்டா குகைகள் அமைந்துள்ளன. உலக பாரம்பரிய இடமாக பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் 60,000 சதுர அடி பரப்பளவில் ஹினாயனா பௌத்த சமயத்தின் 24 குடைவரைக்கோயில்கள் உள்ளன. அழகிய புடைப்புச் சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் இங்குள்ளது.
எலிஃபெண்டா வரலாறு: மலைகள், குன்றுகளில் படுக்கைகளை அமைத்து வாழ்ந்து வரும் ஹினாயனா பௌத்த சமயத்தினர், கி.பி 2 ஆம் நூற்றாண்டில் புத்த மதத்திலிருந்து பிரிந்து, பீகாரின் தென் பகுதியை நோக்கி பயணம் செய்யத் தொடங்கினர். பயணத்தின்போது அப்போதைய காலத்தில் மக்கள் நடமாற்றம் இல்லாத இடமாக இருந்த காரபுரி (Gharapuri) தீவிற்கு வந்து குடியேறியனர். இங்கு வந்ததும் இப்பகுதியில் 7 ஸ்தூபிகளைக் கட்டினர். 4 ஆம் நூற்றாண்டில் சத்ரபதிகளின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி அவர்களின் வசம் வந்தது. இவர்களையடுத்து சுமார் 7 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதிகளைக் கைப்பற்றிய கலாச்சுரி வம்சத்தினர் இங்கு இந்து மத வழிப்பாட்டை நடத்தி வந்தனர்.
காரபுரி என்ற மராத்தியப் பெயரால் அழைக்கப்படும் இத்தீவு, மராத்தியர்களிடமிருந்து குஜராத் சுல்தான்களின் வசம் சென்றது. சுல்தான்கள் இத்தீவை 1534ம் ஆண்டுகளில் போர்ச்சுக்கீசியர்களுக்கு பரிசாக தந்தனர். முதன்முதலாக இப்பகுதிக்கு வந்த போர்ச்சுக்கீசியர்கள் அங்குள்ள யானை சிற்பத்தைக் கண்டு வியந்து அப்பகுதிக்கு எலிஃபெண்டா என்று பெயரிட்டனர். அந்த யானையின் சிலை முழுவதுமாகவே ஒரே கல்லினால் தத்ரூபமாகச் செதுக்கப்பட்ட ஒரு சிலையாகும். அதுவே பிற்காலத்தில் தீவின் பெயராக மாறிவிட்டது.
போர்ச்சுக்கீசியர்கள் வரும் வரை இந்து வழிபாட்டுத் தலமாக இருந்தது. போர்ச்சுகீசியரிடம் இருந்து இத்தீவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இங்குள்ள குகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். சேதமடைந்த குகைகளை 1909 ல் ஆங்கிலேயர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு, 1970ம் ஆண்டுகளில் நினைவுச்சின்னங்களை மீட்டனர். தற்போது, இந்தியத் தொல்லியல் துறை (ASI) இக்குகைகளை பராமரித்து வருகின்றது.
எலிஃபெண்டா குகையின் முன் இருந்த யானை சிற்பத்தைக் கண்டு வியந்த போர்ச்சுக்கீசியர்களில் சிலர், 1,800களில் அதனை இங்கிலாந்திற்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் முயற்சி தோல்வியடைந்தது. அவர்களின் முயற்சியின் காரணமாக யானை சிலையும் சேதமடைந்தது. 1864ம் ஆண்டுகளில் விக்டோரியா தோட்டத்திற்கு மாற்றப்பட்டது. 1914 இல் கேடல் மற்றும் ஹெவெட் மூலம் மீண்டும் சிலைகள் சீரமைக்கப்பட்டு, இப்போது மும்பையில் உள்ள ஜிஜமாதா உத்யானில் (Jijamata Udyan) வைக்கப்பட்டுள்ளது.
எலிஃபெண்டா குகையின் சிறப்புகள்: கடல் மட்டத்திலிருந்து 173 மீட்டர் உயரத்தில் இரண்டு மலைகளுடன் அமைந்துள்ளன இந்தத் தீவு. கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மலையானது ஸ்தூபி மலை என்றும், மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மலையானது கேனான் மலை அதாவது பீரங்கி மலை என்றும் அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலையைத்தான் பயன்படுத்தி வந்தனர். இத்தீவின் உயரமான பகுதியில், மராத்தியப் பேரரசின் இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளது.
மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கேனான் மலையில் பிரதான குகைகள் அமைந்துள்ளன. இங்கு ஐந்து இந்துமத குகைகள் அமைந்துள்ளன. அடில், பிரதான குகை, குகை 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. 39.63 மீட்டர் (130.0 அடியில்) சதுர வடிவில் மண்டபத்துடன் அமைந்துள்ள பெரிய குகை, கிராண்ட் கேவ் அல்லது கிரேட் கேவ் என்று அழைக்கப்படுகிறது. புத்த விஹாரங்களும், குகையின் வடிவமைப்பும், திட்டமிட்டிருப்பதையும் கொண்டு இக்குகை சுமார் 500 முதல் 600 ஆண்களுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இக்குகைக்குப் பல நுழைவாயில்கள் இருந்தாலும், பிரதான நுழைவாயில் மிகவும் சிறியதாகவும், வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. குகையின் உள்ளே சதுர வடிவ சிவலிங்க சன்னதியும் அமைந்துள்ளது. முதலில் காணப்படும் குகை கிபி 5 முதல் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சாளுக்கியர்களால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற குகைகள் எல்லாம் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் இராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.
குகையின் வடக்கு நுழைவாயில் குப்தர் காலத்தைச் சேர்ந்த சிவனின் இரண்டு சிலைகளைக் கொண்டுள்ளது. இடது பக்கத்தில் யாக நிலையில் யோகீஸ்வரர் சிலையும், வலதுபுறத்தில் நடன அரசனான நடராஜரின் சிலையும் அமைந்துள்ளது. குகை முழுவதும் சிவன் பார்வதி, அர்த்தநாரீஸ்வரர், கங்கை, யமுனை, சரஸ்வதி என பல்வேறு உருவங்கள் குகையை அலங்கரிக்கின்றன.
சுவர்களில் 16 அடி உயரங்களில் புராணங்களில் வரும் சிவனின் வடிவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பிரதான நுழைவாயிலுக்கு எதிரே தெற்கு சுவரில் சிவன் திரிமூர்த்தி உருவமானது பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதாவது, பஞ்சமுக லிங்கத்தைக் குறிக்கும் விதமாக, சதாசிவா என்றும் அழைக்கப்படும் சிவன், 20 அடி உயரத்தில் மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. மூன்று தலைகளும் சிவனின் மூன்று முக்கிய அம்சங்களான படைத்தல், பாதுகாத்தல் மற்றும் அழித்தலைக் குறிக்கின்றன.
இதன் இடது புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் (ஒரு பாதி சிவன், மறுபாதி பார்வதி) மற்றும் அதன் வலதுபுறத்தில் கங்காதர புராணக்கதையின் படி அமைந்துள்ளது. சிவன் கங்கை நதியை வானத்திலிருந்து கீழே கொண்டு வருகிறார், மேலும் மகத்தான சக்தி வானத்திலிருந்து இறங்கிய சிவனின் முடியில் இருப்பதை போன்று 13 அடியில் சிலை அமைந்துள்ளது. குகையின் தென்கிழக்கில் அமைந்துள்ள குகை எண் 2 பெரும்பாலும் சிதைந்துவிட்டது. 1970களில் மீட்கப்பட்டதால் 2 அறைகள் போன்ற அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது.
மூன்றாவது குகையான குகை எண் 3, 6 தூண்களுடன் கூடிய மண்டபமாகவும், ஒரு சந்நிதானத்தையும் கொண்டுள்ளது. ஆனால் அதன் உள்ளே லிங்கம் எதுவும் இல்லை. சந்நிதானக் கதவுகளில் சிற்பங்கள் இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே காணப்படுகிறது. மேலும், இங்கு குகை 4 மற்றும் குகை 5 இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அடையாளங்கள் கூட இல்லாத அளவுக்குச் சிதைந்துவிட்டது.
இங்குள்ள மற்றொரு மிகப்பெரிய குகை சீதாபாயின் கோயில் குகை அல்லது குகை எண் 6 ஆகும். இதன் மண்டபத்தின் பின்புறத்தில் 3 அறைகள் உள்ளன. குகையின் மையத்தில் ஒரு சன்னதி மற்றும் துறவிகள் உறைவிடங்கள் உள்ளன. மண்டபம் எந்த அலங்காரமும் இல்லாமல் இருந்தாலும், மைய சன்னதியின் கதவு மற்றும் வாசலில் சிங்க உருவங்கள் உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகையாக பார்க்கப்படும் இந்த 6வது குகை போர்ச்சிக்கீசியர்களின் கிறிஸ்துவ தேவாலயமாகப் பயன்படுத்தப்பட்டது. கிழக்கு மலையின் முகப்பில், தற்போது வறண்ட நிலையில், செயற்கையாக அமைக்கப்பட்ட குளமானது குகை எண் 7 ன் அருகில் உள்ளது. மேலும், சிவன் அந்தகனை வதம் செய்தல், சிவனின் திருமணம், கங்காதரா, யோகீஸ்வரர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, லிங்கம் என ஏராளமான சிற்பங்கள் கண்கவரும் வகையில் அமைந்துள்ளன.
சிறந்த கட்டடக்கலை நுட்பத்தையும், அழகிய சிற்பக்கலைகளின் கருவூலமாகவும் உள்ள எலிஃபெண்டா குகைகளை, 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, சிற்பக்கலை, தனித்துவம், நாகரிகம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1 மற்றும் 3-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் எலிஃபெண்டா குகைகள் சேர்க்கப்பட்டன.
சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு… சென்னையிலிருந்து சுமார் 1,362 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த எலிஃபெண்டா குகைகளுக்குச் செல்ல, திங்கள் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து எலிஃபெண்டா குகைகளுக்குப் படகு சேவைகள் இயக்கப்படுகின்றன. எலிபெண்டா தீவிலிருந்து துறைமுகத்திற்குத் திரும்ப, முதல் படகு மதியம் 12.30க்கும், கடைசிப் படகு மாலை 5.30க்கும் இயக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவமழை காலம் என்பதால் படகுகள் இயக்கப்படாது. இத்தீவில் சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்க அனுமதி இல்லை.
கட்டணம்: படகு சேவைக்காக நபர் ஒருவருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குகைகளைச் சுற்றிப்பார்க்க இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குகைகளைச் சுற்றிப்பார்க்க க்ளிக் செய்யவும் > VIRTUAL TOUR
(உலா வருவோம்...)