இறக்குமதி கார்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய இருப்பதாகவும், இந்தியாவில் டெஸ்லாவின் திட்டம் குறித்து மத்திய அரசு விவாதிக்க இருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது டெஸ்லாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது.
"இந்தியாவில் இறக்குமதி கார்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்படுகிறது. 40,000 டாலர்களுக்கு கீழே உள்ள கார்களுக்கு 60 சதவீதமும், இதற்கு மேலே விலையுள்ள கார்களுக்கு 100 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதம் மிகவும் அதிகம். அதனால், கணிசமாக குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதம் எலெக்ட்ரிக் கார்களுக்கு இருக்கக் கூடாது. வரி விகிதம் 40% மற்றும் 60 சதவீதமாக இருக்க வேண்டும்" என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு சந்தையில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. ஓலா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்குமதி வரியை குறைக்கக் கூடாது என கூறின.
டெஸ்லாவின் கோரிக்கைக்கு நிதி ஆயோக், சாலை போக்குவரத்து துறை உள்ளட்டவை சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால், கனரக போக்குவரத்து துறை அமைச்சகம் வரி குறைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், வரி குறைப்பினை கேட்பதற்கு முன்பாக 'மேக் இன் இந்தியா' மூலமாக ஆலையை தொடங்கி செயல்பட்ட பிறகு, வரிச் சலுகை குறித்து கோரிக்கை வைக்கலாம் என கூறியிருக்கிறது மத்திய அரசு. குறிப்பாக, வரியை குறைத்த பிறகு, இந்தியாவில் சந்தை நிலவரத்தை புரிந்துகொண்ட பிறகு ஆலை தொடங்கலாம் என்னும் டெஸ்லாவின் யோசனையை மத்திய அரசு நிராகரித்தது. ஆலை தொடங்க வேண்டும் என்னும் திட்டத்துக்காக வரிச்சலுகை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா காருக்கு சலுகை வழங்குவது என்பது உள்நாட்டில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால், இந்தியாவில் 40,000 டாலருக்கு மேல் தயாரித்து விற்கப்படும் கார்கள் என்பது 2 சதவீதம் கூட இருக்காது. எலெக்ட்ரிக் அல்லது ஐசிஇ இன்ஜின் என எந்தக் கார்களாக இருந்தாலும் இந்த விலைக்கு மேல் தயாரிக்கப்படுவது மிகக் குறைந்த எண்ணிக்கைதான். அதனால், டெஸ்லாவுக்கு சலுகை வழங்குவதால் மற்ற நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்னும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், "எலெக்ட்ரிக் வாகன துறை இந்தியாவில் வேகம் எடுத்து வருகிறது. டெஸ்லாவுக்கு இது பெரும் வாய்ப்பு. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆலை அமைப்பது குறித்து டெஸ்லா திட்டமிட வேண்டும்" என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எப்போது? - இந்திய சந்தைகளில் டெஸ்லா இருக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனம் திட்டமிட்டு வந்தது. 2021-ம் ஆண்டில் நிச்சயம் இருக்கும் என எலான் மஸ்ட் கடந்த ஆண்டு ட்வீட் செய்திருந்தார். மேலும், டெஸ்லா கார்களான மாடல் 3 மற்றும் ஒய் ஆகியவை இந்திய சாலைகளுக்கு ஏற்றவை என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆண்டுக்கு 2500 கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
வரிச் சலுகைகளுக்காக எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறக்குமதி செய்து கார்களை விற்பனை செய்வது அல்லது ஆலை அமைப்பது இதில் எந்த முடிவை டெஸ்லா எடுக்கும் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.