தென்னாப்பிரிக்க நாட்டில் தொடரும் வன்முறையில் இந்திய வம்சாவளி மக்கள் குறிவைக்கப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசை வலியுறுத்தி வருகிறது. இந்திய வம்சாவளி அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலாளராக பொறுப்பு வகிக்கும் சஞ்சய் பட்டாச்சார்யா தொடர்ந்து டெல்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும், டர்பன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களை காக்க எடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுபோலவே பல தலைமுறைகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நாட்டுக்கு குடியேறி அங்கேயே வாழ்ந்து வரும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய தூதரகம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தினசரி தகவல்களை சேகரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசும் இந்திய வம்சாவளி மக்கள் தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். பல தலைமுறைகளாக அந்த நாட்டில் வசித்துவரும் அவர்கள், அங்கே கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.
தற்போது தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறைச் சூழலில், இந்திய வம்சாவளி மக்கள் நடத்தும் கடைகள், மருந்தகங்கள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. வன்முறை கும்பல்கள் கடைகளை சூறையாடி பொருட்களை அள்ளிச் செல்வது மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடங்கிய கலவரங்களை, கடைகளை சூறையாட வாய்ப்பாக சமூக விரோத கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஸூமா 2009 வருடம் முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக கலவரங்கள் வெடித்தன.
தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், இந்திய வம்சாவளி மக்கள் தங்களுடைய கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை பாதுகாக்க தனியார் பாதுகாவலர்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், ராணுவத்தை அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. இது இந்திய வம்சாவளி மக்கள் குறிவைத்து தாக்கப்பட்ட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
75 வயதாகும் ஸூமா இந்த மாதம் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் வன்முறையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. கலவரம், வன்முறை, மற்றும் கடைகளை கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ரேடியோ நிலையம் கூட சூறையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பான்டோர்ருடன் வன்முறை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடைபெற்று உள்ள சம்பவங்கள் சட்டம் - ஒழுங்கு தொடர்பானவை; இதிலே இனரீதியான வன்முறை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வன்முறையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜெய்சங்கருக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபரான சிறில் ரமாபோசா, கலவரத்தை தங்களுக்கு சாதகமாக சமூக விரோத நபர்கள் பயன்படுத்தி கடைகளை சூறையாடும் சம்பவங்களில் ஈடுபட்டதாக தெளிவுபடுத்தி உள்ளார். இந்நிலையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இந்திய அரசு தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசை வலியுறுத்தும் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கணபதி சுப்பிரமணியம்