இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். 1930-ஆம் வருடம் இதேநாளில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.
ஸ்டூடியோ ஒன்றில் சவுண்ட் இன்ஜினியராக தன் சினிமா வாழ்க்கையை துவங்கிய அவர் இயக்குநராகும் ஆசையில் வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார். பிறகு தெலுங்கு இயக்குநர் அதுர்தி சுப்பாராவிடம் உதவியாளராக வேலை செய்யத் துவங்கினார். அதனைத்தொடர்ந்து கே.பாலச்சந்தர், பாபு என பல இயக்குநர்களிடம் சினிமாவை ஆழமாக கற்றுக் கொண்டார்.
1965-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘ஆத்ம கெளரவம்’. இப்படத்தில் நாகேஷ்வர ராவ், காஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆந்திராவின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ‘எடானபுடி சுலோக்சனா ராணி’ எழுதிய ‘ஆத்மகெளரவம்’ என்ற நாவலை தழுவி விஸ்வநாத் இயக்கிய அத்திரைப்படம் நந்தி விருதினைப் பெற்றது. ‘கலா தபஸ்வி’ கே.விஸ்வநாத் என்றே அவர் அழைக்கப்பட்டார். ‘கலா தபஸ்வி’ என்றால் தவத்தினைப் போல கலையினை நேசிப்பவர் என்று பொருள். அதற்கான முழு தகுதியும் கே.விஸ்வநாத்திற்கு உண்டு.
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுபவர் ‘தாதா சாகேப் பால்கே’. இந்தியாவின் முதல் சினிமாவான ராஜா ஹரிச்சந்திரா’வை தயாரித்து இயக்கியவர் அவர். இந்திய சினிமாவை பொருத்தவரை மிகச் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு பால்கே விருது வழங்கப்படுகிறது. அவ்விருதினை 2016’ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் பெற்றார். அதற்கு முன்பாக சத்யஜித் ரே, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அவ்விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார் கே.விஸ்வநாத்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் கே.விஸ்வநாத். 50-க்கும் மேற்பட்ட சினிமாவை கே.விஸ்வநாத் இயக்கி இருந்தாலும் ‘சங்கராபரணம்’ மற்றும் ‘சாகர சங்கமம்’ ஆகிய படங்கள் காலத்தால் அழியாத படைப்புகளாகும். 1983-ஆம் ஆண்டு தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கத்தில் சாகர சங்கமம் உருவானது. கமல்ஹாசன் நடிப்பில் உருவான அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். சாகர சங்கமம் மூன்று பிலிம் பேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. பிறகு அப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. தமிழகத்தின் பல திரையரங்குகளில் சலங்கை ஒலி கிட்டத்தட்ட ஒருவருடங்கள் வரை ஓடியது. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் ‘சலங்கை ஒலி’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு கமல்ஹாசனும் கே.விஸ்வநாத்தும் இணைந்து பல படங்களில் பணியாற்றினர். கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1985-ல் உருவான ஸ்வாதி முத்யம் இந்திய சினிமாவில் மற்றுமொரு மைல்கல். இப்படம் தமிழில் ‘சிப்பிக்குள் முத்து’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.
கே.விஸ்வநாத் இயக்குநராக மட்டுமல்ல தயாரிப்பாளராக, நடிகராக என ஒரு பன்முக ஆளுமையாக இந்திய சினிமாவில் வலம் வருகிறவர். 'குருதிப்புனல்', 'முகவரி', 'யாரடி நீ மோகினி', உத்தமவில்லன் என பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக குருதிப்புனல் திரைப்படத்தில் நேர்மை தவறியதால் தற்கொலை செய்து கொள்ளும் அதிகாரியாக இவர் நடித்திருப்பார். அக்கதாபாத்திரம் வெகுவாக பேசப்படது.
இன்று அவருக்கு 90 வயதாகிறது., கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் அனுபவத்தை தாங்கி நிற்கும் பழுத்த ஆலமரமாக திகழும் கே.விஸ்வநாத்திற்கு புதிய தலைமுறை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.