இந்தியாவின் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்பு, மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 'ஹேங்ஓவரில்' இருந்து மீளாத இந்திய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருண்டனர். டாஸ் வென்றதும் மிகவும் உற்சாகமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் கோலி. ஆனால் ஆடுகளம் முதல் 2 மணி நேரம் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அவர் கணிக்கவில்லை போலும். மேகமூட்டமான வானிலை ஒரு நல்ல பிட்சை கூட பவுலர்களுக்கு சாதகமாக்கும் என்று கோலிக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் இந்திய பேட்ஸ்மேன்களை நம்பி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து மோசம்போனார்.
இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்டு பார்த்தால் இந்திய பேட்ஸ்மேன்களில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, புஜாரா மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்து "கன்சிஸ்டென்ட்டாக" விளையாடி வருகின்றனர். இதில் ரோகித் சர்மா 36, 12 (நாட் அவுட்), 83, 21, 19, 59 ரன்களை எடுத்துள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசினார். அதற்கு முன்பு அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். பின்பு முதல் டெஸ்ட்டில் சொதப்பிய புஜாரா. லார்ட்ஸ் டெஸ்ட்டின் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக விளையாடி 40 சொச்சம் கன்களை சேர்த்தார். பின்பு மூன்றாவது டெஸட்டில் 91 ரன்களை சேர்த்தார்.
இந்த மூவரை தவிர ரஹானே, கோலி, ரிஷப் பன்ட் ஆகியோரிடமிருந்து ரன்கள் வரவில்லை என்றாலும் கூட ஒரு நிலையான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. கோலி இந்தத் தொடரிலேயே அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்துள்ளார், ரஹானே அதிகபட்சமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் 73 ரன்களை எடுத்தார். இதில் துரதிருஷ்டவசமாக இளம் வீரர் ரிஷப் பன்ட் இந்தத் தொடரில் எடுத்த அதிகபட்ச ரன் 37. இப்படி இருக்கையில் முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் கை ஓங்கியதும், இரண்டாவது போட்டியில் வெற்றிப்பெற்றதற்கும் முழு காரணம் பவுலர்கள் மட்டுமே. தோல்விதான் என்றாலும் லீட்ஸில் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் கூட அற்புதமாக பந்துவீசினார்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்.
பும்ரா, ஷமி, சிராஜ், இஷாந்த் சர்மா என வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் இந்தத் தொடரில் அபாரமாகவே இருந்தது. இதே வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கிலும் சாதித்தால்தான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை நம்மால் வெல்ல முடிந்தது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் பவுலர்கள் பேட்டிங் செய்து அணியை மீட்டெடுப்பார்கள் என நம்பியிருக்க முடியுமா? பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்தால் பவுலர்களுக்கு பேட்டிங்கில் என்ன வேளை இருக்கப் போகிறது? ஆனால் நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் பவுலர்கள்தான் போராடினார்கள் என்பதே உண்மை. அதிலும் பேட்டிங் ஆல் ரவுண்டரான ஜடேஜா ஏன் லெவனில் இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இதுவரை பேட்டிங்கில் அதிகபட்சமாக 55 ரன்களும், பவுலிங்கில் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
அஸ்வினுக்கு பதிலாக பேட்டிங்க்கு பலம் என சேர்க்கப்பட்ட ஜடேஜாவின் கதையும் லீட்ஸ் டெஸ்ட்டுன் முடிவுக்கு வந்துவிட்டதாக நாம் நம்பலாம். இந்தியா 4 ஆவது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் கோலி, ரஹானே, பன்ட் ஆகியோர் பார்முக்கு திரும்ப வேண்டும். ஒருவேளை ரஹானே மீது தொடர்ந்து நம்பிக்கை இல்லையென்றால் அவரின் இடத்துக்கு வேறு பேட்ஸ்மேனை பார்க்க வேண்டும். அடுத்து ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா தன்னுடைய ஆடும் 11 பேர் கொண்ட அணியில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு வரும் இந்தியாவும் வெற்றிப்பெறும்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவதற்குள் கோலிக்கு அதிக அழுத்தம் இருக்கிறது. இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன், உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்ற இரண்டை தக்க வைக்க வேண்டும். இப்போதிருக்கும் இந்திய அணியில் "Non Performing Asset" ஆக வைத்திருக்க முடியாது. ஏனென்றால் ஒருவர் நன்றாக விளையாடினால்தான் அணியில் நீடிக்க முடியும் இல்லையென்றால் அந்த வீரரின் இடத்தை நிரப்ப வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். கோலி வெற்றிகரமான கேப்டனாக இருந்தாலும் அவருக்கு மாற்றாக கேப்டன் பொறுப்பை ஏற்கவும் வீரர்கள் இருக்கிறார்கள், அதை அவரும் உணர்ந்திருப்பார் என்று நம்புவோமாக.