உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலையை ‘அல் ஜசீரா’ ஆவணப்படமாக எடுத்திருக்கிறது. கவுல்சயாவின் தந்தை சின்னச்சாமி உட்பட பலருக்கும் தூக்கு உறுதி செய்யப்படும் அந்தக் கடைசி நொடிவரை மிக இயல்பாக இந்த ஆவணப்படத்தில் காட்சி படுத்தியிருக்கிறார் சாதனா சுப்ரமணியன். இந்த ஆவணப்படத்தில் ஒரு வரி வருகிறது.
நெஞ்சை உலுக்கும் அந்த வார்த்தையை வெப்பம் குறையாமல் வெறியேற்றுகிறார் கவுல்யா. தனியார் தொலைக்கட்சி ஒன்று ‘கவுசல்யா தாய் விடுதலை’ என பிரேக்கிங் நியூஸ் போடுகிறார்கள். அதனை பார்த்த கவுசல்யா, “த்த்..தாய் விடுதலை?’ என வெறுப்போடு அந்த உறவை புறந்தள்ளுகிறார். உடனே குறிப்பிட்ட தொலைக்காட்சியை அழைத்து, ‘தாய்னு போடாதீங்க... அன்னலட்சுமினு போடுங்க’ என கட்டளை இடுகிறார் கவுசல்யா. ‘அம்மா’ என்ற உறவுக்கு தமிழ் சமூகம் கொடுத்திருக்கும் உயர்வான அடையாளம் என்ன என்பதை நாம் விளக்கத் தேவை இல்லை. ஆனால் அந்தச் சொல் கவுசல்யாவுக்கு ரணகளமான நினைவின் அடையாளம். நூற்றாண்டுகளாக படிந்துக் கிடக்கும் சாதிய படிமங்களின் வெறுப்பு சொல். ஆகவேதான் அவர் தாய் என்று போடாதீர்கள் என்கிறார். அன்னலட்சுமி என்று போடுங்கள் என்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் மெளனமான ஒரு வன்மம் புரையோடி உள்ளதை காட்டுகிறது. அவரது சகோதரர் கெளதமின் உடல் மொழியும் அவர் உச்சரிக்கும் வெறுப்பு அரசியலும் ரசிக்கக் கூடியதாக இல்லை. அவர் அடிப்பட்ட மிருகத்தை போல மூச்சை கட்டுகிறார். கண்ணீரை அடக்குகிறார். கெளரவத்திற்காக அவர் தனது பாட்டியிடம் தரும் வாக்குமூலம் ‘ஆணாதிக்க சாதிய வாரிசாக’ அவர் வளர்ந்து வருகிறார் என்பதை காட்டுகிறது. அது கெளதமின் குறையல்ல; அவர் ஊட்டி வளர்க்கப்பட்டுவரும் கூறுகளுக்கு உண்மையாக இருப்பதாக அவர் நம்புகிறார்.
அவர், சிந்தனை ரீதியாக பல நூற்றாண்டுகள் பின் தங்கிக் கிடக்கிறார் என்பதையே காட்டுகிறது. தனது வீட்டு உடமையை ஒருவன் அநியாயமாக அபகரித்து கொண்டுப் போய்விட்டான் என்பதாகவே இந்தப் பிரச்னையை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. பெண், வீட்டின் சொத்தாக எப்படி கட்டிக் காப்பாற்றப்படுகிறாள். அவள் எப்படி வீட்டின் கெளரவத்தை தூக்கிச் சுமக்கும் சுமைதாங்கியாக இருக்கிறாள் என்பதை கவுசல்யாவின் சகோதரர் கெளதம் கூறும் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஆவணப்படத்தில் பழைய ஒரு போட்டோ ஆல்பத்தை புரட்டுகிறார் கெளதம். அதில் தன் குடும்பத்தினரை காட்டுகிறார். அதில் உட்கார்ந்திருக்கும் ஒரு உருவத்தை மட்டும் மறைத்துக்காட்டுகிறார். அந்த உருவம் கெளரவமானதல்ல என்பது அவரது நம்பிக்கை. அந்த உருவம் யாருடையதாக இருக்கும் என தனியாக விளக்க வேண்டாம். உலகமே இன்று வெளிச்சப்படுத்தி கெளரவிக்கும் கவுசல்யாதான் அது.“எங்களைப் பொறுத்தவரை இவள் எங்க குடும்பத்தில் ஒருத்தி இல்லை” என்கிறார்.
இந்தக் குரலை எப்படி எடுத்துக் கொள்வது? அவரது பாட்டி சொல்கிறார். “வளர்ந்ததும் ஒரு நல்ல அரசியல்வாதியாக பார்த்துக் கட்டிக் கொடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அவள் இப்படி செய்துவிட்டாள். அவள் இனிமேல் மேடையில் ஏறிப்பேசக்கூடாது. எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்த கூடாது” என்கிறார்.
பட்டப்பகலில், நடுரோட்டில் ஓர் உயிரைக் கொலை செய்யும் அளவுக்கு நடந்து கொண்டவர்கள் குறித்து இந்தக் குடும்பத்து பெண்கள் என்ன கருத்தை வைத்திருக்கிறார்கள்? ரத்த வெள்ளத்தில் இதே மார்ச் மாதம் தானே அந்த அப்பாவி சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவம் சிசிடிவியில் பதிவாகி இருந்ததே? அதை தொலைக்காட்சிகள் நூற்றுக்கு நூறுதரம் ஒளிபரப்பினார்களே? அதை பார்த்த போது இவர்களின் உள்ளம் பதைக்கவில்லையா? பாவம் என தோன்றவில்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த ஆவணப்படத்தில் நேரடிப் பதில்கள் இல்லை.
“இதே பேருந்து பயணத்தின் போதுதான் சங்கரை நான் முதன்முதலாக பார்த்தேன். அவ்வளவு அன்பா பழகுவான். அவன் அளவுக்கு என்னிடம் அன்புக்கட்டியவங்க இல்ல” என்கிறார் கவுசல்யா. அமைதி என்றால் அவ்வளவு அமைதியான பையன் அவர் என்கிறார். அவனா காதல் பண்றான் என சந்தேகிக்க வைக்கும் முகம் அவனுக்கு என்கிறார். ஆக இந்தக் காதல் எப்படி இயல்பாக முகிழ்ந்தது என்பது புரிகிறது. திட்டமிட்ட ‘காதல்’ அல்ல என்பதை உணர்த்துகிறது. வெட்டும் போதுகூட என்ன வார்த்தையை சொல்லி வெட்டினார்கள் என்பதை குறிப்பிடுகிறார் கவுசல்யா. ‘சாதியின் பெயரை சொல்லி அவர்கள் உனக்கு எல்லாம் காதல் கேட்குதா?’ என்றார்கள், என்கிறார்.
கவுசல்யாவுக்குள் ஒரு பயம் இருக்கிறது. நாம் எப்போதாவது ஒருநாள் குடும்பத்தினரால் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற அச்சம்தான் அது. அதில் உண்மையில்லாமல் இல்லை. இந்த ஆவணப்படத்தில் திமிரிக்கொண்டு நடமாடும் அவரது சகோதரரால் கூட அவருக்கு அந்த ஆபத்து வரலாம். அவரே ‘திரும்ப அவ வந்தா உன்னைய வெட்டுவேன். அவளையும் வெட்டுவேன். ரெண்டு கொலை பரவாயில்லை’ என்கிறார் அவரது பாட்டியிடம். என்ன நியாயம் கெளதம்? குற்ற உணர்ச்சி உங்களை கொடூரமாக வதைக்கவில்லையா? சாக வேண்டியவன்தான் சங்கரா? அப்படிதான் இந்தப் பிரச்னையை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? அப்படி என்றால் உங்களிடம் பேச ஒன்றுமில்லை.
தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் தினம் தினம் ஆயிரம் பிரச்னைகள் நடக்கிறது. அதையெல்லாம் அல் ஜசீரா எடுத்து கையாளுகிறதா என்ன? நாட்டின் எலையை மீறி இந்தப் பிரச்னை போய் இருப்பதிலேயே இதன் குரூரம் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே?
சாதிய ஒழிப்பு என்பது ஒருவரால் செய்து முடித்துவிடக்கூடியதல்ல; காலம் காலமாக இருந்து வரும் விஷயம் அது என்கிறார் தாய் அன்னலட்சுமி. காலங்காலமாக நாம் செய்ததைதான் நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோமா? அதை அவரது தாய்க்கு யார் புரிய வைப்பது? இதை விட ஒரு கொடுமை, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தீர்ப்பு வெளியாகும் தருணம். அந்த நேரத்தில் ஒருவர் கோர்ட் வாசலில் நின்றுகொண்டு ‘எங்க இனம்? எங்க சாதி?’ என வசனம் பேசுகிறார். நாம் பாதுக்காப்பான சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என மனம் பதைபதைக்கிறது.