இந்தியாவில் பேரிடர் காலத்தில் ஏழைகளின் நலன் புறக்கணிப்பு: அமர்தியா சென் காட்டமான விமர்சனம்

இந்தியாவில் பேரிடர் காலத்தில் ஏழைகளின் நலன் புறக்கணிப்பு: அமர்தியா சென் காட்டமான விமர்சனம்
இந்தியாவில் பேரிடர் காலத்தில் ஏழைகளின் நலன் புறக்கணிப்பு: அமர்தியா சென் காட்டமான விமர்சனம்
Published on

இந்தியாவில் கொரோனா பேரிடர் பாதிப்பு குறித்தும், அதை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்தும் பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பாக, நாட்டில் ஏழைகளின் நலன் புறக்கணிக்கப்பட்டதாக மத்திய அரசின் செயல்பாடுகளை அவர் விமர்சித்துள்ளார்.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அமர்தியா சென் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மத்திய அரசு காண்பித்த முரண்பாடு இந்தியாவுக்கு இன்னும் அதிகமான ஜனநாயகம் தேவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துவிட்டது. ஒரு ஜனநாயகத்தின் வலிமை, அந்த நாட்டின் ஏழைகளை நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கும். தொற்றுநோய் காலகட்டத்தில் இந்தியாவில் அந்த ஜனநாயகம் காணப்படவில்லை.

மத்திய அரசு தனது முதல் லாக்டவுனின்போது ஏழைகளின் நலன்களில் சிறப்பு கவனம் செலுத்தாமலிருந்து அவர்களின் நலன்களை புறக்கணித்தது. ஏழை மக்களால் அந்தநேரத்தில் வேலை தேடக் கூட முடியவில்லை. முதல் லாக்டவுன் அறிவித்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட பின்னர், தங்கள் வீட்டை விடுத்து வெகு தொலைவில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் கொரோனா தடுப்பு நிர்வாக பணிகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை தெற்காசியாவின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையில் காணப்படும் அணுகுமுறையில் பெரும் வேறுபாட்டைக் காட்டியது. தொற்றுநோயின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நடத்தப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில், அந்தத் தேர்தல் அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸூக்கும் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் மோதிக்கொள்ளும் விதமாக அமைந்தது.

மேற்கு வங்கத்தில் ஒருபோதும் ஆட்சியமைக்காத பாஜக, இந்த முறை வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல்கள் நடப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தன. இதனால், அந்த நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று அவர்கள் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது திடீரென தன்னம்பிக்கை இல்லாதது போல் அமைந்துவிடும். அதேநேரம், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலை நிறுத்த முயற்சிப்பது பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்காதது போல் இருந்திருக்கும்" என்றவர், நீதித்துறை அதன் பாதுகாப்புப் பாத்திரத்தில் தோல்வியடைந்துவிட்டது குற்றம்சாட்டினார். சமீபத்தில் சிறையில் இறந்த ஸ்டேன் சுவாமியின் மரணத்தை முன்வைத்து பேசினார்.

``ஸ்டேன் சுவாமியின் மரணம், நீதித்துறை அதன் பாதுகாப்புப் பாத்திரத்தில் தோல்வியடைந்து விட்டது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அரசாங்கம், ஸ்டேன் சுவாமிக்கு பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக, சட்ட வழிகளை பயன்படுத்தி அவரின் வாழ்க்கையை மிகவும் ஆபத்தானதாகவும், கடினமானதாகவும் ஆக்கியது. அதன் விளைவு, அவர் மிகவும் பலவீனமான நிலைக்கு ஆளானர்" என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com