1994 ஆம் ஆண்டுமுதல் ஆகஸ்டு 9 ஆம் தேதி ‘உலக பழங்குடிகள் தின’மாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறு,சிறு குழுக்களாக வாழும் பழங்குடிகளுக்கான உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை காக்கும் நோக்கத்தோடு இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வாழும் பழங்குடியினர் பற்றிய துல்லியமான கணக்கெடுப்புகள் இல்லையென்றாலும், சுமார் 37 கோடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்ற புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன. இது உலக மக்கள்தொகையில் 6 சதவீதத்திற்கும் குறைவு எனினும் இவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகமான கலாச்சாரங்களையும், 7 ஆயிரத்திற்கு மேற்பட மொழிகளையும் பேசுகின்றனர்.
உலகில் வாழும் பழங்குடிகளில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடிகள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் பழங்குடியினர் வாழ்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 36 பழங்குடியின வகுப்பை சார்ந்த சுமார் 8 லட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கையுடன் இணைந்து காப்பாற்றி வாழ்கின்றனர். இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பெற்ற தங்கள் பாரம்பரிய அறிவின் மூலமாக இயற்கையிடம் இருந்தே உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தையும் பெற்று வாழ்கின்றனர். இன்று பெரும்பாலான மலைகள், காடுகள் அழிப்படுவதால் பழங்குடிகளின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகிறது, இதன்காரணமாக அவர்கள் போராடும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர்.
தனித்த அடையாளங்களும், தனித்த மொழி, உடை, கலாச்சாரங்களுடன் வாழும் பழங்குடிகளுக்கான அடிப்படை உரிமைகள் தற்போதுவரை கிடைப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி. இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பழங்குடிகள் அரசியலில் பங்கேற்க தனித்தொகுதிகள், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்றவை வழங்கப்படுகின்றன.
பழங்குடியினர் என்பவர்கள் மனித சமூகத்தின் ஆதி வடிவம், இவர்களிடம் தனித்த மொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் இவர்களிடம் மத அடையாளங்கள் எதுவும் இல்லை இதற்கான சான்று. இவர்கள் பெரும்பாலும் இயற்கையை வணங்கும் முறையையே கடைபிடிக்கின்றனர், உலகமெங்கும் வாழும் பெரும்பாலான பழங்குடிகளின் இறை என்பது இயற்கையே. இயற்கையின் பிள்ளைகளான இவர்களின் வாழ்வியலை சக மனிதர்களும், அரசுகளும் புரிந்துகொள்வதுதான் இவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் கிடைப்பதற்கும், இவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதற்குமான ஒரே வழி.