பல மாதங்களுக்கு பிறகு சென்னையில் கடந்த திங்கள் இரவு ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. இம்மழை சிறுசிறு குட்டைகளையும் குளங்களையும் நிரப்ப சற்றே உதவியது. அடுத்து வரும் சில நாட்களுக்கு இது தொடரும் என கூறப்பட்டுள்ளது. திங்களன்று பெய்த மழையால் பூந்தமல்லியில் 9 செமீ மழை பதிவாகியிருந்தது. நுங்கம்பாக்கம் மாதவரத்தில் தலா 5 செமீ மழை பதிவானது… வரும் நாட்களில் மழையின் தீவிரம் குறைந்தாலும் மழை நீடிக்கும் என சொல்கிறது வானிலை ஆய்வு மையம். கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்தது. அதன் பிறகு குறிப்பிடத்தகுந்த அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. அப்படியே சில நாட்கள் பெய்தாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் பெய்தது. சில நாட்கள் வடசென்னை சில நாட்கள் தென் சென்னை பகுதிகளில் மழை பெய்தது.
ஆனால் நிலத்தடி நீர்மட்டத்தையோ அல்லது ஏரிகளில் நீர்வரத்தை கணிசமாக உயர்த்தும் அளவிற்கோ மழை இல்லை. 2015ம் ஆண்டில் பெய்த மழை அளவு போல மீண்டும் பெய்யவில்லை. அப்போது பெய்த மழையே அடுத்த 3 ஆண்டுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது என பேச வைத்தது. ஆனால் ஓராண்டுக்கு கூட முழுவதுமாக உதவவில்லை. அதற்கு காரணம் ஏரிகளை வீட்டுமனைகளாக்கியது, குளங்களை மூடியது, மழைநீர் உரிய முறையில் சேகரிக்கப்படாதது என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. என்ன காரணத்தை முன் வைத்தாலும் நாம் மழைநீரை அப்போது தவறவிட்டுவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இயல்பை விட 2 மடங்கு அதிகமாக மழை கொட்டித்தீர்த்தது 2015ம் ஆண்டு…..
சரி.. அதைப் பற்றி பேசி தற்போது பயனில்லை.. இருக்கும் வளங்களை எப்படி பயன்படுத்துவது என்றுதான் பார்க்கவேண்டும்… நீரை தேக்கி வைக்க சென்னையில் பிரதானமாக இருப்பது ஏரிகள்… குடிநீர் பற்றி தீர்மானிக்கும் ஏரிகள் குறித்தும் அதன் தற்போதைய நிலை என்னவென்றும் பார்க்கலாம்.
1. பூண்டி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிகபெரியது..திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் மொத்த உயரம் 140 அடி. தற்போதைய அளவில் 123 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது..
2. சோழவரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மற்றொரு ஏரி.. மொத்த உயரம் 65.50 அடி. தற்போது 46.74அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது..
3. செங்குன்றம்: புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரி சிறியது என்றாலும் கூட சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மொத்த உயரம் 50 அடி.. தற்போது 37 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது..
4. செம்பரம்பாக்கம் ஏரி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்துதான் அடையாறு பிறக்கிறது. சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தலையாய ஏரியாக பார்க்கப்படுகிறது. இதன் மொத்த உயரம் 85.40 அடி ஆகும். தற்போது 72.48 அடியாக நீர் இருப்பு உள்ளது.
மேலே நாம் பார்த்த அனைத்து ஏரிகளிலும் தற்போது 60% அதிகமாகவே நீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நீர் இருப்பு மிக குறைவாகவே இருந்தது. அதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டு நீர்வரத்து கணிசமாக உயர்ந்திருப்பதால் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வர வாய்ப்பில்லை என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். ஆனால் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் ஒருவேளை அது பொய்த்து போனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகும் என்கின்றனர். வடகிழக்கு பருவமழையை அதிகம் நம்பியிருக்கும் வடமாவட்ட மக்களுக்கும் சென்னை நகர வாசிகளுக்கும் வருண பகவான் வழி காட்டுவாரா? நல்லதே நடக்கும் பொறுத்திருப்போம்..