அப்பாடா எவ்வளவு ஆப்கள், அதில் எத்தனை படங்கள் என துல்லி குதிக்கின்றனர் இப்போதைய இளைஞர்கள். ஆம், உண்மைதான் பலவிதமான ஆப்களில் இப்போது ஏராளமான வெப் சீரிஸ்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலிடம் பெற்று இருந்தாலும் இந்திய அளவில் வூட், ஆல்ட்பாலாஜி, ஜீ5 ஆப்கள் இப்போது மிகப் பிரபலமானவையாக இருக்கின்றன. சினிமாவாக பெரிய திரைக்கு வருவதற்கு பதிலாக மொபைலின் சின்னத் துறையில் பிரகாசமாக பவனி வருகிறது வெப் சீரிஸ்கள். வித்தியாசமான களம், விறுவிறுப்பான திரைக்கதை, சென்சார் செய்யப்படாத காட்சிகள் என இளைய சமுதாயத்தை ஜிவ்வென கட்டிப்போடுகிறது. மேலும், பயணங்களின் போது மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது இன்றைய வெப் சீரிஸ்கள்.
இந்திய சினிமாவில் ஒரு இயக்குநர் தன் படைப்பை உள்ளது உள்ளபடி போல உருவாக்க முடியாத சூழல் இப்போதும் இருக்கிறது. அது பாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி இதுதான் நிலை. ஒரு இயக்குநர் தன் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி, நடிகர் நடிகையிடம் சொல்லி இறுதியாக சென்சாரிடம் போராடுவது வரை, ஒரு படைப்பு பெரிய திரைக்கு வருவதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது. இந்தச் சிரமத்தை எல்லாம் தாண்டி பின்பு ரசிகர்களிடையே படம் வெற்றிபெற வேண்டும். அதுமல்லாமல், வசூல் ரீதியிலும் தயாரிப்பாளரை பாதிக்காமல் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இப்போது வெப் சீரிஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வெப் சீரிஸில் இவ்வளவு சிரமப்பட தேவையில்லை, ஒரு இயக்குநர் சொன்ன நினைத்த கதையை எந்தவித சிரமமின்றி வெப் சீரிஸ் வகையில் இணையத்தில் சொல்லலாம். இதற்கு உங்களுக்கு நெட் பிளிக்ஸ், யூடியூப், மற்றும் ஏராளமான ஆப்கள் கை கொடுக்கும். பாலியல் காட்சிகள், வன்முறை காட்சிகள் என உள்ளது உள்ளபடியே அப்பட்டமாக சென்சார் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம். இதில் யுடியூப்புக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் நெட்பிளிக்ஸ் போல இருக்கும் இதர ஆப்களுக்கு அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் இந்திய அளவில் மிகப்பிரபலமாக இருக்கும் பலரும் கூட வெப் சீரிஸ் வகையில் தனது படைப்புகளை வெளியிடுகின்றனர்.
நிர்வாண காட்சியையோ அல்ல பாலியல் உறவு காட்சியையோ அப்பட்டமாக காட்சிப்படுத்தி படத்தில் சேர்க்கலாம். இந்தச் சுதந்திரம் படைப்பாளிக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம், ஆனால் இந்தச் சுதந்திரம் வரம்புக்கு மீறி சென்றுக்கொண்டு இருப்பதாக தொடர்ந்து வெப் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகத் தெளிவாகவே புரியும். இப்போது அண்மையில் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியான வெப் சீரிஸ்கள் "லஸ்ட் ஸ்டோரிஸ்" மற்றும் "சேக்ரட் கேம்ஸ்" ஆகியவற்றில் கசமுசவான காட்சிகள் ஏராளம். அதேபோல பாலிவுட்டில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏக்தா கபூரில் ஆல்ட் பாலாஜி ஆப்பில் வெளியான கண்டி பாட், ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன், xxx அன்சென்சார்டு ஆகியவை காமம் தொடர்பான கதைகளை அப்பட்டமாக காட்சிப்படுத்தியுள்ளன. அதிலும் "கண்டி பாட்" சீரிஸில், பாலின புத்தகங்களில் வந்த கதைகள்.
அதிலும் பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை ஸ்வரா பாஸ்கர் நடிப்பில் வூட் ஆப்பில் வெளியான "It's not that simple" என்ற வெப் சீரிஸின் கதை என்னவென்றால், அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் எப்படி மூன்று ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுகிறாள். அதன் சிக்கல்கள் என்னென்ன என்பதே. இதிலும் பாலியல் காட்சிகளும், வசனங்கள் உள்ளது உள்ளபடியே நிறைந்திருந்தன. இந்த வெப் சீரிஸ் பெரிய அளவில் ஹிட். பாலியல் தொடர்பான காட்சிகளுக்கும் முறையற்ற உறவுகளையும் கதைக்களமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்களின் சப்ஸ் க்ரைபுக்கும், அதிகப்படியான லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்குமே இத்தகைய சீரிஸ்கள் வருகின்றனவோ என தோன்றுகிறது.
இதில் உச்சபட்சமாக "சேக்ரட் கேம்ஸ்" மற்றும் "லஸ்ட் ஸ்டோரிஸ்" வெப் சீரிஸ்களிலும் நடித்தவர்கள் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள். இதில் "லஸ்ட் ஸ்டோரிஸ்" நடித்தவர்கள் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மணிஷா கொய்ராலா, பூமி பெண்டேகர் மற்றும் நேகா தூபியா. இந்த லஸ்ட் ஸ்டோரிஸ் கதை பெண்களின் பாலியல் ஆசைகள், அதை எவ்வாறு தீர்த்துக்கொள்கிறார்கள், கணவரிடம் பாலியல் வேட்கையை தீர்த்துக்கொள்ளாத நிலையில் அவர்கள் எவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதே கதையம்சம். லஸ்ட் ஸ்டோரிஸில் இருக்கும் ஒரே ஆறுதல் அதில் நிர்வாண காட்சிகள் இடம் பெறவில்லை. ஆனால் அதனை மிஞ்சும் வகையில் பாலியல் உணர்ச்சிகளை சீண்டும் காட்சிகள் எக்கச்சக்கம்.
அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் இயக்கிய நான்கு குறும்படங்களின் தொகுப்பே லஸ்ட் ஸ்டோரிஸ். இந்தியப் பெண்களின் காமம்தான் படத்தின் மையக் கரு, ஆனால் இதனை வெறும் இரண்டாம் தர படங்களில் வரும் காலம்காலமாக நாம் பார்த்து கேட்டு படித்து வந்தக் காமக் கதையைதான் படமாக எடுத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது லஸ்ட் ஸ்டோரிசை மிஞ்சும் வகையில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது "சேக்ரட் கேம்ஸ்" எனும் வெப் சீரிஸ்.
இந்த சீரிஸில் சைஃப் அலி கான், நவாஸூதின் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து. ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது. இது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், கேங்க்ஸ்டர் தலைவனுக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டமே கதை. ஆனால், இதில் முழு நிர்வாண காட்சிகள் பாலுறவு காட்சிகளும் அப்பட்டம். இப்படியாக போகின்றது பாலிவுட்டில் இருந்து வெளியாகும் வெப் சீரிஸ்கள். தமிழில் கூட இதுபோன்ற வெப்சீரிஸ்கள், குறும்படங்கள் யுடியூப் மற்றும் அமேசான் பிரைமில் வெளியாகின. அண்மையில் கூட பார்வதி நாயர், பாபி சிம்ஹா நடித்த "வெள்ளை ராஜா" என்ற சீரிஸ் வெளியானது. அதில் பாலியல் காட்சிகள் இல்லை. ஆனால், வட சென்னை திரைப்படத்தில் கேட்ட அதே வகையான கெட்ட வார்த்தைகள் இதிலும் வெளியானது.