காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லையா?: மார்க்சிஸ்ட் கட்சியில் தொடரும் விவாதம்

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லையா?: மார்க்சிஸ்ட் கட்சியில் தொடரும் விவாதம்
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லையா?: மார்க்சிஸ்ட் கட்சியில் தொடரும் விவாதம்
Published on

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்த, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற குரல் எதிர்கட்சிகளால் நாட்டில் எழுப்பட்டு வருகிறது. இதேபோன்ற ஒரு விவாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில், பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற யெச்சூரியின் தீர்மானம் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியில் தோல்வியை தழுவியது. இருப்பினும், இது இறுதி முடிவல்லை. மார்ச் மாதம் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல; மற்ற கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில், “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாமென மார்க்சிஸ்ட் முடிவெடுக்குமேயானால் அது தற்கொலைக்கு நிகரானது. நச்சுப்பாம்பு வளர்ச்சி அடைய உதவி செய்யும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். தா.பாண்டியன் ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறார்? மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் இந்த விவாதம் ஏன் இந்திய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது? பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஏன் நினைக்கின்றன? என்ற கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன.

2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் பாரதிய ஜனதா கட்சி அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இப்படி ஒரு வளர்ச்சி அடையும் என்று காங்கிரஸ் கூட எதிர்ப்பார்த்திருக்காது. நாட்டில் 13 மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி செய்கிறது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 6 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. அதாவது, 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. 78.08 சதவீதம் மக்கள் பாஜக ஆட்சியின் கீழ் உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. அதில், கர்நாடகா, பஞ்சாப் மட்டுமே பெரிய மாநிலங்கள். புதுச்சேரி, மிஸோரம், மேகாலயா  மாநிலங்கள் மிகவும் சிறியவை. இதனால், ஒரு காலத்தில் காங்கிரஸ் இருந்த நிலையை பாஜக கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. 

இதோடு, அடுத்த ஜனவரி வரை தேர்தல் காலம்தான். மேகலாயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்திற்கு மே மாதம் தேர்தல் நடைபெறுகிறது. அதன் பிறகு அடுத்த ஜனவரிக்குள் மிஸோரம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அடுத்த ஜனவரி மாதத்திற்குள் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20-ஐ தாண்டும் என்றே தெரிகிறது. 

பாரதிய ஜனதா கட்சி இப்படி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வரும் நிலையில், அக்கட்சிக்கு எதிரான விமர்சனங்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. வளர்ச்சி தொடர்பான விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, நாட்டில் மதவாத சக்திகளின் குரல் ஓங்கி ஒலிப்பதாக ஜனநாயக ஆதரவாளர்களும், மதச்சார்பின்மை ஆதரவாளர்களும் கடும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் கட்சி சாராதவர்களும் பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சித்து வருகிறார்கள். கௌரி லங்கேஷ் படுகொலையை அடுத்து பாஜக மீது கூடுதல் விமர்சனம் எழுந்தது. அதேபோல், தலித்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக விமர்சனங்களையும் அக்கட்சி சம்பாதித்து வருகிறது. பாஜகவை பின்னால் இருந்து ஆர்.எஸ்.எஸ் இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒன்றைக் கட்சியாக பாஜகவை எதிர்த்து நின்று வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் முடியாத நிலை உள்ளதாகவும் கருத்து நிலவுகிறது. குஜராத் தேர்தலில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி உடன்  காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்தியிருக்கும் என்ற கருத்தும் நிலவியது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், பாரதிய ஜனதா கட்சிய வீழ்த்த எப்படி கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக இந்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ‘கூட்டணி’ உருவாக்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வரைவுத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதற்கு எதிராக அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தலைமையிலான அணியினர் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. 

தன்னுடைய தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து, சீதாராம் யெச்சூரி தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மார்க்சிஸ்ட் கட்சி மேலிடத்திடம் தெரிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. 
இருப்பினும், ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. 

சீதாராம் யெச்சூரில் தனது தீர்மானத்தில் சில முக்கியமான வரலாற்று முக்கியத்துவங்களை சுட்டிக்காட்டி விவாதங்களை முன் வைக்கிறார். ஜெர்மனியில் ஹிட்லரும், அவரது நாஜிக் கட்சியும் வளர்ந்து வந்த நேரம், மார்க்சிய சிந்தையாளரான டிராட்ஸ்கி, ‘For a Workers’ United Front Against Fascism’ என்ற முக்கியமானக் கட்டுரை ஒன்றினை ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எழுதுகிறார். அந்தக் கட்டுரையில், ஜெர்மனியில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாசிச போக்கினை முடிவுக்கு கொண்டு வர கம்யூனிஸ்ட் கட்சியானது இடதுசாரி அல்லாத மற்ற ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். டிராட்ஸ்கி தனது கட்டுரையில் குறிப்பிட்ட ‘March  separately, but strike together’ என்ற கருத்தை சீதாராம் யெச்சூரி தனது தீர்மானத்தில் சுட்டிக் காட்டுகிறார். அதாவது, வெவ்வேறு பாதைகளாக இருந்தாலும், பாசிசத்தை தோற்கடிக்க மற்ற கட்சிகளுடன் சேர்ந்து போராடுவது என்ற நிலைப்பாட்டை முன் வைக்கிறார். 

சீதாராம் யெச்சூரியின் வாதம் இப்படி இருக்க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் கட்சி மேலும் நீர்த்துப் போகும் என்று பிரகாஷ் காரத் கூறுகிறார். கொள்கை அளவில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது என்றும் ஆட்சியில் உள்ள கேரளாவில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தும் அவர் சார்பில் முன் வைக்கப்படுகிறது. சீதாராம் யெச்சூரியும், பிரகாஷ் காரத்தும் இப்படி இரு கருத்துக்களுடன் விவாதம் மேற்கொண்டு வரும் நிலையில், இது இருவருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட ஈகோ சார்ந்த பிரச்னை என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால், இந்தக் கருத்தினை இருதரப்பினரும் மறுத்துவிட்டனர்.

2004-ம் ஆண்டும் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு அப்போது காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. பாஜகவும் வீழ்த்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில், பாஜக அரசு மதவாதத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் மட்டுமல்லாமல் திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் மத்தியிலும் பாஜக மீது விமர்சனம். உள்ளது. குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் பாஜக எதிர்ப்பு மனநிலை உள்ளது. மாயாவதி, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களும் பாஜகவை வீழ்த்தக் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர்.

அதாவது, நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பாசிச போக்கில் செயல்படுவதாகவும், அதனை வீழ்த்த எப்படி கூட்டணி அமைய வேண்டும் என்ற கேள்வியே இறுதியாக நிற்கிறது. காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதால், மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்க யோசிக்கிறதோ என்ற பார்வையும் உள்ளது. ஆனால், இடதுசாரி கட்சிகளுடன் மாநில வாரிய கூட்டணியில் உள்ள ஜனநாயக கட்சிகள் காங்கிரஸ் உடனான கூட்டணியை வலியுறுத்துவதால் அக்கட்சிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.

ஏனெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி இரண்டும் இதுவரை மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே பெரும்பாலும் தேர்தல் வெற்றியை பெற்றுள்ளது. களத்தில் மற்ற எல்லா கட்சிகளையும் விட மக்களுக்கான போராட்டங்களை அதிக அளவில் முன்னெடுக்கும் போதும், அதனால் தேர்தல் வெற்றியை தனித்து ருசிக்க முடியவில்லை. தமிழகத்தில் கடும் விமர்சனங்களுக்கு இடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. தற்போது இரண்டு கட்சிகளும் மிகவும் குறைந்த அளவிலான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளனர். தனித்து போட்டியிட்டால் இடதுசாரிகளால் தேர்தல் வெற்றியை பெற முடியுமா என்ற ஐயம் அக்கட்சியினருக்கே உள்ளது. இருந்தும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் பட்சத்தால், மார்க்சிஸ்ட் கட்சி வேறு என்ன திட்டம், யுக்தியை முன் வைத்து பயணிக்கும் என்பது தெரியவில்லை. கூட்டணி இல்லை என்றால், மார்க்சிஸ்ட் கட்சி மற்ற எல்லா இடதுசாரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஓரணியில் திரட்டி தேர்தலை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com