இந்திய பிரதமர் மோடி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி, 6 நாள் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலில் ஜப்பான் சென்ற பிரதமர், அங்கு நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் குவாட் மாநாட்டில் பங்கேற்று அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
ஜப்பானை தொடர்ந்து அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார் பிரதமர் மோடி. இதுவரை இந்திய பிரதமர்கள் யாரும் இங்கு சென்றதில்லை. மோடி தான் முதன்முதலில் சென்றுள்ளார். பப்புவா நியூகினியாவின் தலைநகரான மோர்ஸ்பி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய பிரதமர் மோடியை, விமான நிலையத்துக்கே நேரில் வந்து வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரப்.
பப்புவா நியூகினியாவை பொறுத்தவரை மாலையில் சூரியன் மறைவுக்குப் பின்னால் தங்கள் நாடுகளுக்கு வரும் உலகத் தலைவர்களுக்கு அந்நாட்டு சம்பிரதாயப்படி வரவேற்பு வழங்கப்படாமல் சாதாரண வரவேற்பு மட்டுமே அளிக்கப்படும். ஆனால், இரவு நேரத்தில் அங்கு வந்த மோடிக்கு அந்நாட்டு மரபு படி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது எந்த தலைவரை வரவேற்கவும் பப்புவா நியூகினியா பிரதமர் விமான நிலையத்துக்குச் சென்றதில்லை. ஆனால், இந்திய பிரதமரை விமானநிலையம் சென்று வரவேற்றதோடு அவரது காலை தொட்டு வணங்கினார் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரப்.
இதனையடுத்து இந்தோ - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களையும் மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது பிஜி தீவின் மிக உயரிய விருதான 'கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி' (companion of the order of fiji) என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. மேலும் பப்புவா நியூகினியாவில் வழங்கப்படும் உயரிய விருதான 'Grand companion of the order of logohu' என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக போராடியதற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருது கிளிண்டன் போன்ற வெகு சில வெளிநாட்டினருக்கே வழங்கப்பட்டுள்ளது. தற்போது விரல்விட்டு எண்ணக் கூடிய அந்த பட்டியலில் மோடியும் இணைந்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பப்புவா நியூகினியா சுதந்திரம் பெற்று தனியாகச் சென்றபோது இந்தியாவுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. 1996 ஆம் ஆண்டு இந்தியா, பப்புவா நியூகினியாவில் தங்கள் தொழில் துறையைத் தொடங்கியது. அதேபோல் 2006-ல் இந்தியாவில் பப்புவா நியூகினியா தங்கள் தொழில்துறையை நிறுவியது. பப்புவா நியூ கினியாவில் சுமார் 3,000 இந்தியர்கள் வசிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில், சுமார் 2,000 பேர் எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) துறையில் பல்வேறு திட்டங்களில் பணிபுரிகின்றனர். அங்குள்ள இந்தியர்களின் பங்களிப்புகள் இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் தொழில்துறையை வளப்படுத்துகின்றன.
ஃபிஜியில் 2014-ல் முதன்முதலில் பசிபிக் தீவுப் பகுதியில் இந்தியாவின் இருப்பை வளர்க்க இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம் (FIPIC) வடிவமைக்கப்பட்டது. இதன் இரண்டாவது உச்சி மாநாடு 2015-ல் இந்தியாவின் ஜெய்ப்பூரில் நடந்தது. தற்போது பப்புவா நியூ கினியாவில், இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகளை ஒன்றிணைக்கும் குறிப்பிடத்தக்க கூட்டமான FIPIC-ன் மூன்றாவது உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பல தரப்பிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டைவெளிப்படுத்தினார். சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ -பசிபிக் பிராந்தியத்திற்கு நாட்டின் ஆதரவை வலியுறுத்தினார்.
பசிபிக் தீவு நாடுகள் வெறுமனே சிறிய தீவுகள் அல்ல, அவை பெரிய கடல் சூழ்ந்த நாடுகள். பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்தியா முயல்வதால், இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெல்ட் அண்ட் ரோடு திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் பசிபிக் பகுதியில் சீனா தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டில், சீனா, சாலமன் தீவுகளுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, மேலும் சமீபத்தில், தலைநகர் ஹோனியாராவில் துறைமுகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது.
பப்புவா நியூகினியாவும் சீனாவை நோக்கி சாய்வதால் ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய குவாட் நாடுகள் கடுமையாக கவலையடைந்துள்ளன. எனவே இந்திய பிரதமர் மோடியின் பப்புவா நியூ கினியா பயணம், உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும், அப்பகுதியில் வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாக புது டெல்லியை நிலைநாட்டவும் உதவும் என்று கூறப்படுகிறது.