சிலப்பதிகாரம் முதல் பொன்னியின் செல்வன் வரை! ஆடிப்பெருக்கின் மகத்துவம் இதுதான்!

சிலப்பதிகாரம் முதல் பொன்னியின் செல்வன் வரை! ஆடிப்பெருக்கின் மகத்துவம் இதுதான்!
சிலப்பதிகாரம் முதல் பொன்னியின் செல்வன் வரை! ஆடிப்பெருக்கின் மகத்துவம் இதுதான்!
Published on

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் பழம்பெரும் விழாக்களில் ஒன்று “ஆடிப் பெருக்கு”. தமிழ் மாதமான ஆடியின் 18 ஆம் நாள் தான் ஆடிப்பெருக்காக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஏன் அது ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது?

தென்மேற்குப் பருவக் காற்றினால் மழை பெய்யத் துவங்கி, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதிய நீரை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாதான் ஆடிப்பெருக்கு. பெருக்கெடுக்கும் புதுப்புனலை போற்றும் புலனாடும் விழாவாகத் தான் இந்நாள் கொண்டாடப்படுகிறது. புதுப்புனல் என்றால் புதிதாக பெருக்கெடுத்து வரும் தண்ணீர் ஆகும்.

வேறு மாதிரியும் ஆடிப்பெருக்கிற்கு பெயர்க்காரணம் உண்டு. பரதவர், கோசர், ஆவியர், ஓவியர், ஆயர், வேளிர், ஆண்டார், வில்லோர், மறவர், மழவர், கொங்கர், குறவர், மலையர், குடவர், புலியர், புலையர், கடம்பர், கள்வர் உள்ளிட்ட பதினெண் தமிழ்க் குடிகள் கொண்டாடுகிற பண்டிகை என்பதால் 'பதினெட்டாம் பெருக்கு' என்றும் அதையொட்டியே ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

என்ன மாதிரியான கொண்டாட்டம்?

நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்ந்த தமிழர்கள், புதிதாக பெருக்கெடுத்து வரும் நீரை போற்றி மகிழும் தினமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் உள்ள எல்லா பகுதிகளிலும் இவ்விழா கொண்டாடப்பட்டாலும், காவிரிக் கரையோரம் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு மிகச் சிறப்பு மிக்கது. ஒகேனக்கலில் துவங்கி கொள்ளிடம் வரையிலான பகுதிகளில் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் மக்கள் இந்த விழாவினை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். வாழவைக்கும் காவிரி நதியை ஒரு கடவுளாகவே பாவித்து, வணங்கி, படையலிட்டு பெருக்கெடுக்கும் புது நீரை வரவேற்று, அப்புதுப்புனலில் நீராடி மகிழ்வது இந்நாளின் சிறப்பம்சம்.

சங்க இலக்கியத்தில் ஆடிப்பெருக்கு:

இந்த ஆடிப்பெருக்கு விழா இன்றோ நேற்றோ கொண்டாடப்படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் மகத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் கொண்டாடி வருகின்றனர். சங்க இலக்கியமான அகநானூறிலேயே இந்த ஆடிப் பெருக்கு புது வெள்ளம் பற்றி கூறப்பட்டுள்ளது.

சோழ நாட்டில் ஆட்டனத்தி எனும் நீச்சல் நட வீரனை கரிகாலனின் மகள் ஆதிமந்தி காதலித்து வந்திருக்கிறாள். ஆட்டனத்தி, கரிகாலன் முன்னிலையில் கழார் எனும் காவிரி ஆற்றுத் துறையில் நடந்த புதுப்புனல் பெருவிழாவின் போது, நீச்சல் நடனம் ஆடி காட்டிக் கொண்டிருந்த போது, ஆற்றின் வெள்ளம் அவனை அடித்துசென்றதாக பரணர் எழுதிய அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

“....முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்...”

சிலப்பதிகாரத்தில் ஆடிப்பெருக்கு:

இளங்கோவடிகள் எழுதிய குடிமக்கள் காப்பியமான “சிலப்பதிகாரத்தில்” ஆடிப்பெருக்கில் ஏற்படும் வெள்ளம் பற்றி கூறப்பட்டுள்ளது. புதுப்புனல் வரக் கண்டு உழவர்கள் ஆரவாரத்தில் ஏர்பூட்டி உழும் ஓசை, நீரானது கரைகளையும் வரப்புகளையும் உடைத்துச் செல்லும் ஓசை, நீர் மதகின் வழியாகச் செல்லும் பொழுதும் ஏற்படும் ஓசை, புதுப்புனல் விழா கொண்டாடும் மக்களின் ஓசை இவையனைத்தும் ஒருசேர சிறந்து ஆர்ப்பரிக்க இரு கரைகளோடு நடந்து செல்பவள் நீ! ஆகையால் நீ வாழ்வாயாக காவிரி! என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள்.

உழவர் ஓதை மதுகு ஓதை;
உடைநீர் ஓதை; தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப
நடந்தாய்; வாழி, காவேரி!”

பரிபாடலில் குறிப்பிடப்பட்ட வைகைப் பெருக்கு:

காவிரி மட்டுமல்லாது வைகை, தாமிரபரணி நதிகளை மையப்படுத்தியும் ஆடிப்பெருக்கு விழாக்கள் நடத்தப்படுகின்றன. பரிபாடலில் வைகையில் நடந்த புதுப்புனல் விழா குறித்த பாடல் இடம்பெற்றுள்ளது. கரும்பிள்ளைப்பூத்தனார் எனும் புலவர் வைகையில் வெள்ளம் வந்ததைப் பற்றிய பாடலை இயற்றியுள்ளார். பரிபாடலில் 10,11,12 ஆகிய மூன்று பாடல் தொகுப்புகளும் வைகை நதியை ஒட்டிய நிகழ்வுகளை அடிப்படையாக எழுதப்பட்டது.

பொன்னியின் செல்வனிலும் ஆடிப்பெருக்கு:

சங்க இலக்கியம் மட்டுமல்லாது, சோழப்பேரரசு வரலாற்றை பற்றி அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலிலும் ஆடிப்பெருக்கு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கதையில் தொடக்கமே ஆடிப்பெருக்கில் தான் நிகழும். காவிரி நதியில் புது வெள்ளம் பொங்கி வரும் தருணத்தில், சோழ தேசம் விழாக்கோலம் பூண்டுள்ள தருணத்தில்தான் நாயகனான வந்தியத்தேவன் கதையில் அறிமுகமாவான். திரைப்படமாக உருவாகி வரும் அந்நாவலின் முதற்பாடலான “பொன்னிநதி பாக்கணுமே பொழுதுக்குள்ள!” என்பதில் பொன்னி நதி, பெருக்கெடுத்து பாயும் காவிரிதான்!

ஆடிப்பெருக்கின் நோக்கம்தான் என்ன?

சங்க இலக்கியங்களில் தைப் பொங்கலுக்கு அடுத்தபடியாக, சித்திரைத் திருநாளை விட அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ள விழாதான் ஆடிப்பெருக்கு. நீரின் மகத்துவத்தை, அதன் இன்றியமையாத இயல்பை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே இவ்விழா தொன்றுதொட்டு கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளை உருவாக்கி, நூறாண்டு கடந்தும் பெருமையோடு நிற்கும் நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்த அதே இனத்தின் வழித்தோன்றல்களாகிய நாம், இருப்பதை பாதுகாத்தாலே போதும் என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.

நதிக்கரையில் தோன்றிய நாகரிகங்கள் அதை அழிக்கும் அழிக்கும் இடத்திற்கு வந்து நிற்பது வருத்தத்திற்கு உரிய விஷயமல்லவா? அடுத்த தலைமுறைக்கு நாம் எதை கொடுக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து இனியாவது நாம் செயல்பட்டால்தான் அது ஆடிப்பெருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி பெருக்காக அமையும்.

“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com