பாஜகவுக்கு 40 தொகுதிகள் எனில், மற்ற கட்சிகளுக்கு? - அதிமுகவை அலறவைக்கும் 'கணக்கு'!

பாஜகவுக்கு 40 தொகுதிகள் எனில், மற்ற கட்சிகளுக்கு? - அதிமுகவை அலறவைக்கும் 'கணக்கு'!
பாஜகவுக்கு 40 தொகுதிகள் எனில், மற்ற கட்சிகளுக்கு? - அதிமுகவை அலறவைக்கும் 'கணக்கு'!
Published on

அதிமுக கூட்டணியில் பாஜக 40 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜகவுக்கு 40 தொகுதிகள் என்றால் பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பது என்று விழிபிதுங்கி நிற்கிறது அதிமுக.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கு அரசு விழாக்கள் காரணமாக சொல்லப்பட்டாலும், முக்கியமான காரணம் அரசியல்தான். சமீபகாலமாக அரசியல் அரங்கில் தமிழக பாஜகவின் தலைவர்கள் சிலர் அவ்வப்போது அதிமுகவை சீண்டும் வகையான கருத்துகளை கூறிவந்தனர். அதற்கு பதிலடியாக அதிமுக அமைச்சர்களும் பாஜகவைப் பக்குவமாகத் தாக்கிவந்தனர். எல்லாவற்றுகும் மேலாக, வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி மறுத்தது, தமிழக பாஜகவை உச்சகட்ட கோபத்திற்கு உள்ளாக்கியது. அதுபோலவே, பாஜகவின் வேல்யாத்திரை பிரசாரப் பாடலில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்தியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற பேச்சுகள்கூட எழுந்தன.

இதனிடையே, பாஜகவுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்தால், நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று அதிமுக அஞ்சியது. எனினும், பாஜக தரும் நெருக்கடியில் இருந்து தப்பமுடியாத சூழலில் அதிமுக சிக்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தப் பின்னணியில், அதிமுக - பாஜக இடையே இருந்த அனைத்து கோபதாபங்களை ஒரே விசிட் மூலமாக ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார், அமித் ஷா. தமிழக பாஜக தலைவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் பாய்ந்துசென்று பதிலடி கொடுத்த அதிமுக தலைவர்கள், அமித் ஷா என்றதும் கப்சிப் ஆகிவிட்டதை மக்களே நேரலையாகப் பார்த்தனர். அமித் ஷாவின் தமிழக வருகையை பாஜகவை விட அதிமுகவே சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்றது. அமித் ஷா வருவதற்கு முன்பே சென்னை விமான நிலையத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரை வரவேற்று, உபசரித்து அரசு விழா மேடையிலேயே கூட்டணியை அறிவித்தபிறகுதான் ஆசுவாசமடைந்ததையும் காண முடிந்தது. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிகரமாக இறுதிசெய்யபட்ட அடுத்த அதிரடியாக, தங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் குண்டை தூக்கிபோட்டிருக்கிறது பாஜக.

பாஜவின் இந்தக் கோரிக்கை அதிமுகவை அசைத்துபோட்டது என்றுதான் சொல்லவேண்டும். "பாஜகவுக்கு 40 தொகுதி என்றால் பாமக, தேமுதிக, தமாகா மற்றும் சிறிய கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கவேண்டும். அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு 117 தொகுதிகள் வெல்லவேண்டும், அப்படியானால், குறைந்தது 150 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் இது சாத்தியம். பாஜகவுக்கு 40 தொகுதி கொடுத்தால், அந்தக் கட்சியைவிடவும் வாக்கு வங்கி அதிகம் வைத்துள்ள பாமக இன்னும் கூடுதலான தொகுதிகள் கேட்பார்கள், தேமுதிகவும் பாஜகவுக்கு இணையாக சீட் கேட்பார்கள், தமாகா மற்றும் சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கவேண்டும். அப்படியானால் கூட்டணி கட்சிகளுக்கே 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கொடுத்துவிட்டு 120 தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட முடியும்" என்று அதிமுகவினரே புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

"இந்தச் சூழ்நிலை ஏற்பட்டால், அதிமுக கூட்டணி வெற்றிபெற்றாலும் ஆட்சியமைக்கும்போது நிச்சயமாக அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் தயவு தேவை. ஒருவேளை, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பும் உருவாகலாம்" என்று அரசியல் நோக்கர்களும் கணிப்புக் கணக்குப் போடுகின்றனர். அமித் ஷா முன்னிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முடிவான அன்றே பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். அதில் பாஜக பங்குபெறும்" என்று தெரிவித்தார்.

மேற்கூறிய கூட்டணி கணக்கையும், வானதி சீனிவாசனின் இந்தக் கருத்தையும் பொருத்திப் பார்த்தால், பாஜகவின் திட்டம் என்னவென்பது புரியும். ஆனால், தங்கள் கூட்டணியில் பாஜகவுக்கு 25 தொகுதிகள்தான் ஒதுக்கமுடியும் என்று அதிமுக கூறிவருகிறதாம். தேர்தல் நெருக்கத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உறுதியாகலாம். எப்படிப் பார்ப்பினும், பாஜகவுக்கு இணையாக அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் தொகுதிகள் கேட்கலாம். இதனால் தொகுதிப் பங்கீடு குறித்த கவலை இப்போதே அதிமுக தலைமைகளுக்கு தோன்றிவிட்டது.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com