கொரோனா கால நம்பிக்கை வெளிச்சங்கள்: ஊரடங்கிலும் வேலைவாய்ப்பை உருவாக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்

கொரோனா கால நம்பிக்கை வெளிச்சங்கள்: ஊரடங்கிலும் வேலைவாய்ப்பை உருவாக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்
கொரோனா கால நம்பிக்கை வெளிச்சங்கள்: ஊரடங்கிலும் வேலைவாய்ப்பை உருவாக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்
Published on

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி நகரங்களை விட்டு கால்நடையாக நடந்தும், சைக்கிள்களிலும், கிடைத்த வாகனங்களில் ஏறி சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையை நாம் அறிவோம். மீண்டும் அவர்கள் நகரங்களுக்குத் திரும்பியுள்ள நம்பிக்கை கதைகளும் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்புகளை வழங்கி எண்ணற்ற ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றியுள்ளார்கள் 5 ஐஏஎஸ் அதிகாரிகள். அந்த தொலைநோக்குப்பார்வை கொண்ட அந்த அரசு அதிகாரிகள் அப்படி என்னதான் செய்தார்கள்?

கொரனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டாலும், பொருளாதார மந்தநிலையும் வேலையிழப்புகளும்  மிகப்பெரும் விளைவுகளை உருவாக்கியுள்ளன. இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையின்படி, இந்தியாவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2020 ஏப்ரலில் 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 10 கோடிக்கும் அதிகமான  தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதுதான் புதிய எதார்த்தம்.

கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளைத் தவிர, வேறு வாய்ப்பில்லை. மேலும் நூறு நாள் வேலைத்திட்டம் கொஞ்சம் காப்பாற்றும். இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்களைக் காப்பாற்ற, வட இந்திய மாநிலங்களில் பணியாற்றும்  சில ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

நவீன்குமார் சந்த்ரா, துணை ஆட்சியர், மால்டா மாவட்டம், மேற்குவங்கம்

“கொரோனா தொற்று பாதிப்பை கவனிப்பதே எங்களுடைய முதன்மையான பணியாக இருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு திரும்பும்போது பலரும் வேலை தேடுவார்கள். அவர்களுக்கு உதவக்கூடிய நிலையில் தனியார் துறையும்  இல்லை. அந்தப் பொறுப்பு அரசிடம்தான் சேரும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைத் தவிர, ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் புதுமையான யோசனைகளைத் தேடுகிறோம்” என்கிறார்  மேற்குவங்க மாநிலம், மால்டா மாவட்ட துணை ஆட்சியர் நவீன்குமார் சந்த்ரா.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகப் பணிபுரிந்த கார்த்திக், நிலையான ஒரு வாழ்வாதாரத்தைத் தேடும் கனவுடன் உதவி கேட்டு அணுகினார். அவருக்கு கைவினைப் பொருட்கள் செய்யும் அசாத்திய திறமை இருந்ததை நவீன்குமார் நன்றாக அறிந்திருந்தார். சிறு நிதியுதவி கிடைக்க பிப்ரவரி 2020இல் கையால் செய்யப்படும் மூங்கில் தண்ணீர் பாட்டில்களைத் தயாரிக்கத் தொடங்கினார் கார்த்திக்.

கார்த்திக் கைவினையின் தரத்தையும் நுட்பத்தையும் கவனித்த மால்டா மாவட்ட நிர்வாகம் அவருக்குத் தேவையான எந்திரங்களை வாங்க உதவியது. ஒரு சிறு பட்டறையை உருவாக்கவும் உதவினார்கள். அதையடுத்து சில மாதங்களில்  சுய உதவிக்குழுவைச் சேர்ந்த முப்பது பெண்களுக்கு கைவினைத்தொழில் பயிற்சி அளிக்கும் அளவுக்கு முன்னேறினார் அவர். இப்போது கார்த்திக் கூடுதல் வருமானம் பார்ப்பவராக மாறிவிட்டார். விரைவில் அமேசான் போன்ற இகாமர்ஸ் தளங்களில் விற்பனையைத் தொடங்கவுள்ளார் கார்த்திக்.

பிரின்ஸ் தவான், துணை ஆணையர், லோகித் மாவட்டம், அருணாச்சலப்பிரதேசம்   

அருணாச்சலப் பிரதேசம், லோகித் மாவட்டத்தில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. காரணம் என்ன?  அவர்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை வழங்கியதோடு நின்றுவிடவில்லை மாவட்ட நிர்வாகம். அதையும் தாண்டி வேலைவாய்ப்பையும்  உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

“அருணாச்சலில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள்  வெளி மாநிலங்களில் இருந்துவந்தவர்கள். எல்லைப்பகுதி சாலைகள் அமைப்பின்கீழ் செயல்படும் பொறியாளர் அமைப்பு மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு கட்டுமானப் பணிகளில் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம்” என்கிறார் லோகித் மாவட்ட துணை ஆணையர் பிரின்ஸ் தவான்.   

இதுவரை மாவட்ட நிர்வாகம் 350 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். கூடுதலாக, ஊரடங்குக்கு முன்பே விவசாயப் பணிகள் அனுமதிக்கப்பட்டதால் தோட்டக்கலைப் பணிகளில் 15 விவசாயிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

“பாக்கு, வாழை, கருப்பு மிளகு, ஆரஞ்சு, மஞ்சள் போன்றவற்றுக்கான  நாற்றுகளை அவர்களுக்கு வழங்கினோம்.  ஒரு ஹெக்டேர் நிலத்திற்குத் தேவையான இடுபொருட்களை வழங்கினோம். இந்த விவசாயிகளும் பல தொழிலாளர்களுக்கு பணிகளைத் தருகிறார்கள். தோட்ட உரிமையாளர்களுடன் கூட்டுசேர்ந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கான வழிகளையும் நாங்கள் திறந்துவிட்டோம்.   தேயிலை பறிப்பது உள்ளிட்ட பல வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன " என்று உற்சாகமாகப் பகிர்கிறார் பிரின்ஸ்.

லோகித் மாவட்டத்திற்கு பல தொழிலாளர்கள் வேலை தேடி திரும்புகிறார்கள். அது மாவட்ட நிர்வாகத்திற்கு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் கொரோனா டெஸ்ட் நடத்தி, நெகட்டிவ் வந்தால் உள்ளே அனுமதிக்கிறார்கள். பின்னர் அவர்களுக்குரிய வேலைகள் வழங்கப்படுகின்றன.  

டாக்டர் ஆதர்ஷ் சிங், மாவட்ட ஆட்சியர் பாரபங்கி மாவட்டம், உ.பி

உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் 800க்கும் அதிகமான கிராம மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆதர்ஷ் சிங், அதற்கு வேறு மாற்றுத்திட்டங்களை வைத்திருந்தார். மக்களை சிரமத்திற்கு ஆளாக்காமல், மத்திய அரசு வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகளை அவர் தொடங்கினார்.

எங்கே கல்யாணி நதியைக் காணவில்லை என்ற அளவில்தான் அதன் நிலைமை இருக்கிறது. மாவையா கிராமத்தில் 2.6 கிலோ மீட்டர் நதியின் நீளத்தை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.59 லட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மறுசீரமைப்பிற்கான அருகிலுள்ள ஹைதர்கர் கிராமத்திலும் நதி சீரமைப்புப் பணிகள் தொடர்கின்றன. வேலையிழந்த தொழிலாளர்கள் அந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

“ஊரடங்கு ஒருவகையில் எங்களுக்கு உதவியாகவும் இருந்தது. அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதை அறியமுடிந்தது. அவர்களுக்கான வேலைவாய்ப்புப் பற்றி யோசித்தேன். முதல்கட்ட திட்டப் பணிகள் வெற்றிகரமான முடிந்துவிட்டன. கல்யாணி நதியின் நீளம் 170 கிலோ மீட்டர். மற்ற கிராமங்களிலும் சீரமைப்பைப் தொடரவுள்ளோம். அதற்குத் தேவையான மனிதவளமும் திறன்களும் அறிவும் இங்குள்ளன” என்கிறார் ஆதர்ஷ் சிங்.

தேவன்ஷ் யாதவ், துணை ஆணையர், சாங்க்லாங் மாவட்டம், அருணாச்சல்

வடகிழக்குப் பிராந்திய சமூகவள மேலாண்மைத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றும் மாவட்ட துணை ஆணையர் தேவன்ஷ் யாதவ், நாப்கின்  தயாரிப்பு மற்றும் மூங்கில் பொருட்களைத் தயாரிக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். அதில் மகளிர் சுயஉதவிக் குழுவினரை முழுமையாக ஈடுபடுத்தினார்.

போர்டும்ஸா வட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவால் இயக்கப்படும் நாப்கின்  தயாரிக்கும் பிரிவில் பத்து பெண்கள் வேலை பார்க்கிறார்கள். மேலும் ஆனால் திறன் அதிகரிப்பால் குறைந்தது அவர்களால் இருபது பேருக்கு வேலை கொடுக்கமுடியும். இங்கு தயாரிக்கப்படும் நாப்கின்கள் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

"போர்டுமாவில் மற்றொரு குழு மூங்கில் பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி நபார்டு வங்கியுடன் தொடர்புகொண்டோம். பயிற்சி முடிந்ததும் மூங்கிலைக்கொண்டு பொருட்களைத் தயாரிப்பதற்கான கருவிகளை வழங்கினோம். இன்று அந்தப் பெண்கள் சோபா செட், ஆய்வு விளக்குகள், மேசைகள் மற்றும் பேனா ஸ்டான்ட் போன்ற அலுவலகப் பொருட்களைத் தயாரிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள்” என்கிறார் தேவன்ஷ் யாதவ்.

அர்விந்த் சிங், மாவட்ட வளர்ச்சி அதிகாரி, லக்கிம்பூர் கேரி, உ.பி

அருணாச்சலப் பிரதேச கிராமங்களில் விவசாயப்  பண்ணைப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினரை ஈடுபடுத்துவதில் மாநில அரசு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இரண்டு, மூன்று குழுக்கள் தொடங்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான வேளாண்மை தொடர்பான உதவிகளை அரசு நிர்வாகம் செய்துதருகிறது. விளைபொருட்களை மொத்தமாக விற்பதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. 

வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களுடைய திறன்களை அறிந்து சாங்க்லாங் மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி மாவட்ட முதன்மை வளர்ச்சி அதிகாரி அர்விந்த் சிங் வழிகாட்டுதலில் அங்குள்ள் கிராமப்புறப் பெண்கள், உலகத்தரத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மருத்துவ கிட் தயாரிப்பில் முன்னணியில் உள்ளனர்.

கிராமப்புறங்களில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது பற்றி திட்டமிட்டார் அர்விந்த். ஆபரேஷன் சதுர்பூஜ் வழியாக சாலை மேம்பாட்டுப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தினார். மகாத்மா காந்தி கிராமப்புற  வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு சாலைப் பணிகளில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் வருமானமின்றி தவித்துக்கிடந்தவர்களுக்கு வெறுங்கையை விரிக்காமல், இதோ வேலை என்று வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர் இந்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

சுந்தரபுத்தன்  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com