தமிழகத்தின் மாநில விலங்கு எது ? அதன் தற்போதைய நிலை என்ன?

தமிழகத்தின் மாநில விலங்கு எது ? அதன் தற்போதைய நிலை என்ன?
தமிழகத்தின் மாநில விலங்கு எது ? அதன் தற்போதைய நிலை என்ன?
Published on

இந்தியாவின் தேசிய விலங்கு, தேசியப் பறவை எனக் கேள்விகள் கேட்டால் நம்மிடையே உடனடியாக பதில் வரும். ஆனால் தமிழகத்தின் மாநில விலங்கு எது என்று கேள்வி கேட்டால் சற்றே யோசிப்போம் அல்லது கூகுளில் தேடுவோம். தமிழகத்தின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு. தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை, அவை எங்கெல்லாம் காணப்படும், அவற்றின் வாழ்க்கை முறை ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்.

நீலகிரி வரையாடு அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் 1996 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்த நீலகிரி வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைத் தவிர இந்தியாவில் வேறெங்கும் இவை காணப்படுவதில்லை. மேலும், சங்க இலக்கியப் பாடல்களில் வரையாடு குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆகையால் தான் தமிழக அரசின் மாநில விலங்காக வரையாடு சேர்க்கப்பட்டது.

வாழ்க்கை முறை !

கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் பகுதியில் வரையாடுகள் அதிகம் வசிக்கும். பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் இவை உணவாகக் கொண்டுள்ளன. முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பைவிடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் அமைந்திருக்கும்.



ஆண் வரையாடு அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண் வரையாடு சாம்பல் நிறத்தில் காணப்படும். ஆண் வரையாடுகள் தனியாகவும், பெண் வரையாடுகள் கூட்டமாகவும் வசிக்கின்றன. ஆண் வரையாடுகளில் யார் தலைவன் என்ற போட்டியில் சாகும்வரை சண்டை நிகழும் என விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர். வரையாடுகள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும். இவற்றின் ஆயுள் காலம் 5 முதல் 6 ஆண்டுகளேயாகும்.

வரையாட்டை எங்கெல்லாம் பார்க்கலாம் ?

ஆனைமலை, நீலகிரி மலை, முக்கூர்த்தி, வால்பாறை, கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், ரண்ணி வனப் பகுதிகளில் வரையாடுகள் நடமாட்டத்தைப் பார்க்கலாம். வரையாடுகளுக்கு இயற்கையான எதிரிகள் என்றால் அவை; சிறுத்தை மற்றும் புலிகள்தான். மேலும் மனிதர்களும் உள்ளனர். வரையாடுகளுக்கு புல்வெளிகள் நிறையே வேண்டும். அதுவும் உயரமான மலைகளில் இருக்க வேண்டும். காடுகள் சுருங்கிக் கொண்டு வருவதால், வரையாடுகளுக்குத் தேவையான உணவு கிடைக்காத நிலை உள்ளது. இவை காலையும், மாலையும் மட்டுமே மேய்ச்சலுக்குச் செல்லும். பகல்பொழுதில் ஓய்வெடுத்துக் கொள்ளும். இரவில் வரையாடுகளுக்கு பார்வை தெரியாது. அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இவை வசிக்கின்றன.

எண்ணிக்கை ?

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக 2019 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு தமிழக - கேரள எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மலைத் தொடர்களில் இப்போது 3300 வரையாடுகள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சுமார் 2,600 வரையாடுகள் இருப்பதாகத் தெரிய வந்தது. கடந்த 9 ஆண்டுகளில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அவை தொடர்ந்து அழிந்து வருவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மிக முக்கியமாக தமிழகத்தின் முக்கூர்த்தி தேசியப் பூங்காவில் 2018 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 568 வரையாடுகள் இருந்துள்ளன. இப்போது இது கணிசமாக உயர்ந்து 2019 இல் 612 ஆக இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மிக முக்கியமாக 2016 இல் இருந்து வரையாடுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதாக வனத்துறையினருக்குத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக வனத்துறையின் உயர் அதிகாரி கூறும்போது "தமிழகத்தைப் பொறுத்தவரை, முக்கூர்த்தி தேசியப் பூங்காவிலும், ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. செங்குத்தான பாறைகளில் வரையாடுகள் பயமின்றி ஏறிச் செல்லும். குரங்கினங்களுக்கு அடுத்தபடியாக, இந்த வரையாடுகளுக்கு மட்டுமே செங்குத்தான பாறைகளில் நடக்கக்கூடிய பாத அமைப்பு உள்ளது.
தமிழகத்தில் வரையாடுகள் வேட்டையாடப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது.

மேலும், வனத்துறை சார்பில் வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரையாடுகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்துவிட்டாலே அவை இயற்கையாக அதிகரித்துவிடும். அவ்வாறான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வரையாடுகள் இடையூறின்றி வாழ்கின்றன. இனி வரும் ஆண்டுகளில் வரையாடுகளின் எண்ணிக்கை உயரும்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com