சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில், நடிகர் ஜெயம் ரவியும் ஒரு சிறுமியும் ட்ல மொழியை பேசிக்கொண்டது இணையத்தில் வைரலாகியது. ஜெயம் ரவி அந்த சிறுமியிடம் பேசியபின் “நாங்க பேசுவது எங்களுக்கு மட்டும்தான் புரியும்” என்பார் சிரித்தபடி. இதோ அந்த வீடியோ...
90ஸ் கிட்ஸூக்கு அந்த மொழி புரிஞ்சிருக்கும். ஜெயம் படத்தில், சதாவின் தங்கை பேசுவாரே... அதேதாங்க! அது சரி, இது என்ன மொழி? இதை நம் பெரியவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தியுள்ளனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதற்கெல்லாம் சில சுவாரஸ்ய பதில்களை இங்கே பார்க்கப்போகிறோம்.
எதற்காக இந்த வழக்கம் வந்தது?
ஆங்கிலம் நம்மை நோக்கி வரும் முன்பே, ‘நாம் பேசுவதை அடுத்தவர்கள் குறிப்பாக குழந்தைகள் புரிந்துகொள்ள கூடாது’ என்று நம் கிராமங்களில் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் உருவாக்கப்பட்ட பழக்கம்தான் இது. இதை கணவன் மனைவிக்குள், உறவினர்களுக்குள் மட்டுமே பேசிக்கொள்வர். சில நேரம் குழந்தைகள் தங்கள் நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் பேசுவர். எப்படியாகினும் சங்கேத வார்த்தைகளையெல்லாம் கோர்த்து... ‘சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே புரியும்’ என்ற இடத்தில் மட்டுமே இதை பயன்படுத்துவர்..!
சீக்ரெட் எழுத்து, Code Words-ல்லாம் இல்லாத காலத்தில் நம் பாட்டி தாத்தாக்கள், ‘ட்ல’ வழக்கத்தை சீக்ரெட் கோடாக பயன்படுத்திவந்தனர்.
எப்படி பேசுவது இதை?
ஒரு வார்த்தையில் முதல் எழுத்தை பிரித்து நடுவில் ட்ல சேர்த்துக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான். உதாரணத்திற்கு சினிமா என்ற வார்த்தையில் சி என்ற எழுத்திற்கு பிறகு ட்ல சேர்த்து சிட்லனிமா என்று சொல்வார்கள். மேலும், வார்த்தைகளை திருப்பி போட்டு பேசும் வழக்கமும் இருந்தது. உதாரணத்துக்கு, ல்தகா சைஆ (காதல் ஆசை) என ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் சொல்வது போல...!
இன்னும் சொற்களுக்கு மத்தியிலும் முன்பும் க எழுத்தைப் போட்டு பேசுவதுவும் உள்ளது. அவரவருக்கு ஏற்ற வகையில் இதை பயன்படுத்துவர். இதெல்லாம் கேட்கையில் சுலபம்போல் தோன்றினாலும் வேட்லகமாக பேட்லசும் பொட்லழுது பட்லயிற்சி இட்லல்லாதவர்களுக்கு இட்லது புட்லரியாது.
ஜெயம் படத்தில் ஹீரோயினின் தங்கை ஹீரோவிற்கு ஒரு ரயிலில் ட்ல மொழியில் தான் சொல்ல நினைப்பதை எழுதி காண்பிப்பார். கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டுக்கு முன்புவரை இப்படித்தான் நம் ஊர்களில் பல வீடுகளிலும் இந்த சங்கேத மொழியை பேசி வந்தார்கள். சில காதல் ஜோடிகள் நிஜமாகவே கடிதம் கூட எழுதினர் (!).
இப்போ அப்படி ஏதும் இல்லையா...?
‘அப்டின்னா இப்போ இப்டில்லாம் வீடுகள்ல பேசுறதில்லையா’ என நினைக்கலாம். இப்பவும் குழந்தைகள் முன்னே சாக்லேட், ஐஸ்க்ரீம், ஜூஸ் மாதிரியான விஷயங்களை பெற்றோர் சொல்ல தயங்குவதுண்டு. எங்கே அதையெல்லாம் சொன்னால் குழந்தைகள் அவர்களுக்கும் வேண்டுமென சொல்லிவிடுவார்களோ என்று, அதையெல்லாம் I-C-E-C-R-E-A-M, C-H-O-C-O-L-A-T-E, J-U-I-C-E என தனித்தனி வார்த்தையாக பயன்படுத்துவதுண்டு. சமீபத்தில்கூட அப்படியான வீடியோக்கள் இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்டாகின.
இருந்தாலும் இவையெல்லாம் சில வார்த்தைகளுக்குத்தான். அதுவும் ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும் ஆங்கில வார்த்தைகளை எளிதில் கற்றுக்கொள்வதால், ஒருகட்டத்தில் அந்த டெக்னிக்கெல்லாம் பயனற்று போய்விடுகிறது. மட்டுமன்றி இது பெற்றோர் குழந்தைகள் இடையே மட்டும்தான் பயன்படுத்த முடிகிறது. ஆகவே பயனில்லை.
நம்ம ‘ட்ல’ வழக்கத்தை, எல்லா வார்த்தைக்கும் பயன்படுத்தலாம்... எல்லா சூழ்நிலையிலும் பயன்படுத்தலாம். அந்தவகையில், இந்த விஷயத்தில் 90-ஸ் கிட்ஸ் ‘பட்லழைசுட்ல கிட்லங்குங்க!’