சி.டி.எம் ஃபார்முலா to உணவுமுறை... மழை, குளிர் காலங்களில் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?

சி.டி.எம் ஃபார்முலா to உணவுமுறை... மழை, குளிர் காலங்களில் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?
சி.டி.எம் ஃபார்முலா to உணவுமுறை... மழை, குளிர் காலங்களில் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?
Published on

மழை - குளிர்காலம் வந்தாலே பலருக்கும் சருமப் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய்ப்பசை அதிகமுள்ள சருமம் கொண்டவர்களுக்கு சருமத்துளைகளில் எண்ணெய் தேங்கி முகப்பருவை உருவாக்கும். மழை, குளிர் காலங்களில் சருமத்தைப் பாதுகாப்பதற்கு, சருமப் பராமாரிப்பு நிபுணர்கள் சிலர் அளித்த முழுமையான வழிகாட்டுதல்கள் இதோ... 

முகப்பருவை சரிசெய்வது எப்படி?

மழைக்காலங்களில் தினமும் 3-4 முறை pH சமநிலைப்படுத்தப்பட்ட க்ளென்சர்களைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவேண்டும். பகல்நேரங்களில் கலாமைன் லோஷன்களை பயன்படுத்துவதுடன், வாரத்திற்கு ஒரு முறையாவது முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் முகப்பருவின் மீது கை வைப்பதோ, அதை உடைப்பதோ கூடாது. முகப்பரு அதிகம் வரக்கூடிய சருமங்களுக்கு சூரியக் கதிர்கள் உள்ளே செல்வதைத் தடுக்கக்கூடிய பொருட்களை தவறாமல் பயன்படுத்தவேண்டும். மிகவும் திக்கான க்ரீம்களையும், மாய்ஸரைசர்களையும் தவிர்க்கவேண்டும். அதிக எண்ணெய், காரமாக உணவுப்பொருட்களையும் தவிர்த்துவிட வேண்டும்.

தினமும் CTM என்று சொல்லக்கூடிய க்ளென்சர், டோனர் மற்றும் மாய்ஸரைசர் (Cleanser Toner Moisturiser) என்ற ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். மழை, குளிர்காலங்களில் சரியாக வியர்க்காதபோது வியர்வைத் துளிகள் சருமத் துளைகளில் தங்குவதுடன் அழுக்கையும் அதில் சேர்த்துவிடும். துளைகள் அழுக்குகளால் அடைக்கப்படுவதால் முகப்பரு எளிதில் உருவாகிவிடும். இவர்களுக்குத்தான் இந்த CTM ஃபார்முலா மிகவும் தேவைப்படுகிறது.

  • சோப் இல்லாத க்ளென்சரை ஒருநாளில் குறைந்தது 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால்தான் சருமம் சுத்தமாக இருக்கும். ஆனால் சருமத்துக்கு தேவையான சில கொழுப்பு ஆசிட்டுகளை கழுவிவிடக்கூடாது.
  • அதன்பிறகு, ஆல்கஹால் இல்லாத டோனரைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆல்கஹால் சருமத்தை எளிதில் வறட்சியடைய செய்துவிடும். க்ரீன் டீ, ரோஸ் வாட்டர் மற்றும் க்ளைகாலிக் ஆசிட் உள்ள டோனரைப் பயன்படுத்துவது சிறந்தது.
  • அதன்பிறகு, எண்ணெய்த்தன்மை அதிகம் இல்லாத மாய்ஸரைசரை பயன்படுத்தினால் நல்லது.

வெயில்காலத்தில்தான் வியர்க்குரு வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் குளிர்காலத்திலும் வியர்வை துளிகளில் அடைப்பு ஏற்படுவதால் வியர்க்குரு வரும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு ஐஸ்கட்டி மசாஜ் கொடுப்பது சிறந்தது. நகத்தால் சுரண்டும்போது இது வேறுவிதமான தொற்றுக்கு வழிவகுக்கும்.

வறண்ட சருமத்தை சமாளிப்பது எப்படி?

நிறையபேர் வறண்ட சருமம் பற்றி குளிர்காலத்தில் பேசுவதில்லை. சருமத்தை நல்ல ஃபேஸ் வாஷால் கழுவிவிட்டு, ஷீ பட்டர் (shea butter) மற்றும் வைட்டமின் ஈ அதிமுள்ள மாய்ஸரைசர்களையும், கிளிசரினையும் தடவவேண்டும்.

குறிப்பாக குளிர்காலத்தில் பலரும் குளிரைத் தடுக்க இறுக்கமானதும், கனமானதுமான ஆடைகளை அணிவார்கள். இது பூஞ்சை, பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, சிரமமாக இருந்தாலும் ஒருநாளைக்கு இரண்டுமுறை குளித்துவிட்டு, சுத்தமான தளர்வான காட்டன் - லைனன் ஆடைகளை அணியவேண்டும். குளிர்காலம்தானே என்று சன்ஸ்க்ரீன் லோஷன் தடவ மறக்கவேண்டாம். SPF 30 PA+++ உள்ள சன்ஸ்க்ரீனை 3-4 மணிநேர இடைவெளிகளில் தடவலாம். குறிப்பாக ஜெல் மாதிரியான லோஷன்கள் சிறந்தது. மேலும் வாரத்திற்கு ஒருமுறை க்ளே மாஸ்க் பயன்படுத்தலாம்.

குளிர்கால சரும நோய்கள்

குளிர், மழை காலங்களில் அதிமாக ஏற்படும் சரும நோய்களில் ஒன்று பூஞ்சான் தொற்று. மழை, குளிர்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மிக கொடூரமான சருமத் தொற்றுகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மழைபெய்யும் சமயங்களில் மழைத்தண்ணீருடன், வெளியே இருக்கும் கலப்பதால் மிகவும் மோசமாக இருக்கும்.

எனவே இந்த மாதிரி நேரங்களில், என்னென்ன மாதிரியான நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பது தெரிந்திருந்தால், பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கமுடியும்.

ஈரப்பதம் அதிகமுள்ள காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களில் ஒன்று ரிங்வார்ம் என்று சொல்லக்கூடிய படை. இது எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதிகளிலும், அதிகம் வியர்வை சேரக்கூடிய பகுதிகளிலும் எளிதில் தொற்றை உருவாக்கும். பூஞ்சானால் ஏற்படக்கூடிய இந்த தொற்று அதிமான எரிச்சலையும், சொறியையும் உண்டாக்கும். எனவே இந்த தொற்று ஏற்பட்ட பகுதிகளை தொடமால் இருப்பதுடன், சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம்.

மேலும், சருமம் மடியக்கூடிய இடங்களை சுத்தமான டவலால் அடிக்கடி துடைக்கவேண்டும். இந்த இடங்களில் டால்கம் பவுடர்களை பூசுவதுடன், தனி டவல் மற்றும் சீப்பை பயன்படுத்தவேண்டும். இறுக்கமான சிந்தடிக் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல் உள்ளாடைகளை அயர்ன் செய்து பயன்படுத்துவது சிறந்தது. ஷூக்கள், செருப்புகளை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தவேண்டும்.

இயற்கை வீட்டு மருந்துகள்

சாதாரண - வறண்ட சருமம் உள்ளவர்கள், பப்பாளிப் பழத்தை தடவினால் பளபளப்பாகும். எண்ணெய்ப்பசை மற்றும் பரு வரக்கூடிய சருமம் கொண்டவர்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்தவேண்டும். அனைத்துவகையான சருமம் கொண்டவர்களும் வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். மிகவும் எண்ணெய்ப்பசை கொண்டவர்கள் இறந்தசெல்களை அகற்ற கடலைமாவு பயன்படுத்தலாம்.

சிறந்த உணவுகள் எது?

  • சருமத்தில் தடவுவது மட்டும் சிறந்த தீர்வை தரப்போவதில்லை. என்னென்ன மாதிரியான உணவுகளை உட்கொள்கிறோம் என்பதைப் பொருத்துதான் சுத்தமான, பளபளப்பான சருமத்தை பெறமுடியும்.
  • அதிக நீர்ச்சத்து மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். இது சருமத்தை பளபளப்பாக்குவதோடு பொலிவையும் கொடுக்கும்.
  • தினசரி உணவில் காய்கறி சாலட்டை அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமத்தில் எண்ணெய் படிவது குறையும். எனவே எண்ணெய்த்தன்மை, காரம் அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும்.
  • குளிர்காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காது. இதனால் பலர் தண்ணீர் குடிக்கவே பலநேரங்களில் மறந்துவிடுவார்கள். சருமம் நீரேற்றத்துடன் இருக்க அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். முட்டை வெள்ளைக்கரு, பால் மற்றும் மோர், தயிர் ஆகியவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், அதிக காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும்.
  • சரும நலனை மேம்படுத்த ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். தேங்காய்த் தண்ணீரில் அதிக பொட்டாசியம் இருப்பதால் சருமத்துக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com