’தனியா விட்டுவிடாதீர்கள்..’ அவதிப்படும் முதியவர்கள்..கவனித்துக்கொள்ளும் முறைகள்

’தனியா விட்டுவிடாதீர்கள்..’ அவதிப்படும் முதியவர்கள்..கவனித்துக்கொள்ளும் முறைகள்
’தனியா விட்டுவிடாதீர்கள்..’ அவதிப்படும் முதியவர்கள்..கவனித்துக்கொள்ளும் முறைகள்
Published on

’’இந்த ஊரடங்குக் காலத்தில் அனைவருமே பெரும்பாலும் வீட்டில் இருப்போம். ஒரே வீட்டில் இருந்தாலும் முதியவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது முகம் சுளிப்பவர்கள்தான் அதிகம். வயது ஆக ஆக அவர்களிடம் காட்டும் அக்கறையும், பாசமும்தான் அவர்களை மனதளவில் இளமையாக வைக்கும். அதற்கு ‘Caretakers’ என்று சொல்லப்படும் அவர்களைப் பார்த்துக்கொள்கின்றவர்களின் மனநிலையும் நன்றாக இருக்கவேண்டும்.

எந்த நேரத்தில் எந்த மருந்து, உணவு கொடுக்கவேண்டும், எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அட்டவணைப்படுத்திக் கொடுத்துவிடுவார்கள். இதனால் பேஷண்ட் நன்றாக இருப்பார். ஆனால் அவரை கவனித்துக்கொள்ளும் நபரின் வேலை, உணவு, உறக்கம் என எல்லாம் பாதிக்கப்படும். சரியான புரிதல் இல்லாதபோது அவர்களின் மனநிலையும் பாதிக்கப்பட்டு, முதியவர்களிடம் கடினமாக நடந்துகொள்வார்கள். இதனால் இருவரின் உடல்நிலையும் பாதிப்பிற்குள்ளாகும்’’ என்கிறார், முதியோர் நல மருத்துவர், பத்மஸ்ரீ டாக்டர் வி. எஸ். நடராஜன்.

உதாரணத்திற்கு, பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும். அவர்களால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. எனவே அவர்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் கூட இருப்பவர்தான் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ’’Mentally dead, Physically alive’’ என்ற நிலையில்தான் இருப்பார்கள்.

70 வயதான முதியவரைப் பார்த்துக்கொள்பவர் 68 வயதில் இருக்கும் அவருடைய மனைவியாகக்கூட இருப்பார். அவருக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருக்கும். அவருடைய உடல்நிலையையும் கருத்தில்கொள்ள வேண்டும். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு, பேரக்குழந்தைகள் பிள்ளைகளிடம் அதைக் கோபமாக வெளிப்படுத்துவர். இதனால் கேர் டேக்கர்ஸ் முதியவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன? அதன் விளைவுகள் என்ன? அந்த நபரை எப்படி கையாள வேண்டும் என்பதை முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்கிறார்.

பொதுவாக முதுமை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கேர் டேக்கர்ஸ்க்கு வரும் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:
நோயின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

மெதுவாக செயல்படுவது, கையில் நடுக்கம், சதை இறுக்கம் போன்றவை. பொதுவாகவே இந்த அறிகுறிகள் வயதானவர்களிடம் தோன்றுவதால் சில சமயங்களில் முதுமையின் விளைவுக்கும், நோய்க்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை.

பார்க்கின்சன்ஸ் நோய் எந்த வயதில் அதிகம் வரும்?

பொதுவாக 60 வயது கடந்தவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது. ஏனோ சமீப காலத்தில் இளம்வயதினருக்கும் வருகிறது. இதற்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை.

இந்நோய் வரக் காரணம் என்ன?

மூளையில் உள்ள டோபாமைன் எனும் திரவம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் சுமார் 80% அளவிற்கு திரவம் குறைந்த பின்னர்தான் இந்நோயின் அறிகுறிகள் தோன்றும்.

இது பரம்பரை நோயா?

அனேகமாக 15-20% பேருக்கு பரம்பரையாக வர வாய்ப்புகள் அதிகம்.

உணவு பத்தியம் ஏதாவது உண்டா?

இப்படித்தான் சாப்பிடவேண்டும் என்ற வரையறை ஏதுமில்லை. சிலருக்கு இறைச்சி, புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது உடல் தசைகளின் இறுக்கம் சற்று அதிகப்படலாம். எனவே அசைவத்தைக் குறைத்து சைவ உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

மலச்சிக்கலுக்கும் இந்நோய்க்கும் தொடர்புண்டா?

சத்தான உணவுக் குறைவினாலும் போதிய உடற்பயிற்சி இல்லாததினாலும், பலவிதமான மருந்துகளினாலும் மலச்சிக்கல் அதிகம் வர வாய்ப்பு உண்டு. மலச்சிக்கலினால் இந்நோய்க்கு கொடுக்கும் லிவோடொபா மருந்தின் தன்மையும் குறையும். எனவே மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே வாச்னை அறியும் சக்தி குறையும் என்கிறார்களே. அதுபோல உதறுவாதத்திற்கும் உண்டா?

இது ஓரளவிற்கு உண்மை. உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே வாசனை அறியும் சக்தி குறையும்.

பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மறதிநோய் வர வாய்ப்பு உள்ளதா?

இரண்டிற்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் நீண்ட காலம் பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் மறதி வர வாய்ப்பு உள்ளது.

கை நடுக்கத்திற்கு சிறந்த சிகிச்சை எது?

மாத்திரையினால் ஓரளவிற்கு நடுக்கத்தைக் குறைக்கமுடியும். இதில் குணம் அடையாதவர்கள் Deep Brain Stimulation என்ற அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

இந்நோயை பூரணமாக குணமாக்க முடியுமா?

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் பூரணமாக குணமளிக்க முடியாது. அதைப் போலவே இந்நோயும். அதை விடுத்து நோயுடன் எப்படி நலமாய் வாழமுடியும் என்பதைப் பற்றித்தான் சிந்திக்கவேண்டும்.

மருந்தில்லாமல் வேறு சிகிச்சை உண்டா?

Deep Brain Stimulation என்ற சிகிச்சை 10 லட்சம் ஆகும். Stem Cell சிகிச்சை செய்வதற்கு ஒவ்வொரு முறையும் குறைந்தது 2 லட்சம் ஆகும்.

இந்நோய்க்கு உடற்பயிற்சியினால் ஏதாவது பலன் உண்டா?

மருந்தைவிட உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். தினமும் தவறாமல் முடிந்த அளவிற்கு நடைப்பயிற்சி அவசியம் செய்யவேண்டும். முடியாதவர்கள் இயன் முறை சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

நோயுற்றவர்கள் மனநிலை எந்த அளவு பாதிக்கப்படும்?

சிலருக்கு மனச்சோர்வு ஏற்படும். இதற்கு அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் செய்யவேண்டியது, முடிந்தவரை பாதிக்கப்பட்டவரை தனியாக இருக்க விடக்கூடாது. பூங்கா, கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அவர்கள் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும், படிப்பதற்கும் உற்சாகப்படுத்தி உதவ வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com