சித்த மருத்துவத்தில் போலிகளைக் கண்டறிவது எப்படி?

 சித்த மருத்துவத்தில் போலிகளைக் கண்டறிவது எப்படி?
 சித்த மருத்துவத்தில் போலிகளைக் கண்டறிவது எப்படி?
Published on

8000 வருடங்களுக்கு முன்னரே வரலாற்றில் சித்த மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.அன்றிலிருந்து இன்று வரை பிற மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குச் சித்த மருத்துவம் விடையாக இருக்கிறது. பல சித்த மருத்துவர்கள் இன்றும் கடல் கடந்து பயணித்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்ட அவர்கள் சித்த மருத்துவத்தின் பாரம்பரியத்தை உணர்ந்து சித்த மருத்துவத்தையும், சித்த மருத்துவர்களையும் போற்றிப் பாதுகாக்கின்றனர்.


ஆனால் இந்தியாவில் சித்த மருத்துவம் மக்களின் கைக்கு அருகிலிருந்த போதிலும், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் பல மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்த அலோபதி மீது மக்களுக்கு இருக்கும் அளப்பரிய நம்பிக்கை, ஏன் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மீது வர மறுக்கிறது.

உலக நாடுகளில் இந்தியாவின் மாபெரும் அடையாளமாக மாறியிருக்க வேண்டிய சித்த மருத்துவம், போலி மருத்துவர்களின் பேராசையால் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஏன் இந்த நிலைமை? இது குறித்த உண்மையான விளக்கங்களைப் பெறச் சித்த மருத்துவர் நா. பரணிதரன் B.S.M.S அவர்களை புதிய தலைமுறைக்காகத் தொடர்பு கொண்டு பேசினோம்.

சித்த மருத்துவம் ... தன் உடலையும் மனதையும் பற்றிய முழு அறிவை பெற்ற சித்தர்களால் உருவாக்கப்பட்ட தொகுப்பே சித்த மருத்துவம். மத்திய அரசின் AYUSH என்ற அமைப்பின் கீழ் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் A - ஆயுர் வேதம், y- யோகா, U- யுனானி, S- சித்தா, H- ஹோமியோபதி.

சித்த மருத்துவத்தை தற்போது மூன்று வகையான மருத்துவத்தின் கீழ் மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். அவர்கள் கீழ்க் கண்ட பிரிவுகளில் வருகிறார்கள்.

1. பாரம்பரிய சித்த மருத்துவர்கள்.

2. பட்டப்படிப்பு முடித்த சித்த மருத்துவர்கள்.

3. வட்டார சித்த மருத்துவர்கள்.

பாரம்பரிய சித்த மருத்துவர்கள்:

பாரம்பரிய சித்த மருத்துவ முறை என்பது ஆரம்பக் காலத்தில் குரு சிஷ்ய முறையாக இருந்தது. அதாவது சித்த மருத்துவம் பயில நினைக்கும் மாணவர்கள் குருவுடன் வருடக் கணக்கில் தங்கி இருந்து, சித்த மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் சான்று அளித்த பின்னர்
அவர்கள் தன்னிச்சையாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த மரபுதான் காலப்போக்கில் மருவி தந்தையே மகனுக்குச் சித்த மருத்துவம் சொல்லிக்கொடுக்கும் முறையாக மாறியது. ஆனால் அவர்களும் தாங்கள் நன்றாக நன்கு தேர்ந்த ஒரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையை மட்டுமே சொல்லிக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதுவும் சில தலைமுறைகளைக் கடந்து அவர்கள் சொல்லிக் கொடுத்த விதங்களில் குழப்பங்கள் நிலவ ஆரம்பித்தன. அதைச் சீர் செய்து கொள்ள அவர்கள் புத்தக அறிவை அரை குறையாக அணுகியதன் விளைவே இன்று சமூகத்தில் போலி மருத்துவர்கள் முளைத்தற்கான முக்கிய காரணம்.

இதனைத் தடுக்கவே கண்ணு பிள்ளை என்பவர் காலத்தில் பாரம்பரிய சித்த மருத்துவம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு அது பட்டப்படிப்பு கல்வியாக மாற்றப்பட்டது. அத்துடன் முன்னதாக சித்த மருத்துவத்தை முறையாகச் செய்து வந்த மருத்துவர்களுக்குப் பதிவு எண்களும் கொடுக்கப்பட்டது.

பட்டப்படிப்பு முடித்த சித்த மருத்துவர்கள்.

இம்முறை மருத்துவர்கள் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சித்த மருத்துவம் பயின்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்.


வட்டார சித்த மருத்துவர்கள்.

வட்டார சித்த மருத்துவர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோய்க்குச் சிகிச்சை அளிப்பார்கள். (எ.கா நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் கீழாநெல்லி மூலிகை மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்பட்டு வருவது போல). ஆரம்பத்தில் ஒரு பகுதியில் ஒருவர் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த இம்மருத்துவம், அதன் தோற்ற எளிமையால் அவர்களது தலைமுறைக்கும், அருகில் உள்ள மக்களுக்கும் சென்றது.

இந்த மாற்றத்தில் சித்த மருத்துவம் குறித்த நுண்ணிய அறிவு எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் அவர்களால், அந்தச் சிகிச்சை முறையால் நோயாளியின் உடலில் வேறு வகையான பாதிப்பு ஏற்பட்டால் அதனைக் கையாள முடியாமல் போனது.

இப்படி ஒரு குறிப்பிட்ட நோய்க்கு நாட்டு வைத்தியம் பார்த்த அவர்கள், காலப்போக்கில் பணத்தாசையாலும், புகழ் ஆசையாலும் புத்தக அறிவை மட்டுமே கொண்டு பிற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இம்முறையில் இன்று தமிழகத்தில் ஏராளமான போலி சித்த மருத்துவர்கள் உருவாகி இருக்கின்றனர்.

இந்தப் போலிகளை ஒழித்துக்கட்ட மக்கள் சித்த மருத்துவர்கள் குறித்த விழிப்புணர்வைப் பெறுதலே ஒரே தீர்வு. அந்த விழிப்புணர்வின் மூலம் நீங்கள் போலி சித்த மருத்துவர்களை எளிதாக அடையாளம் காணலாம்.

சரி போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது குறித்துப் பார்க்கலாம்.

1. போலி சித்த மருத்துவர்களின் மருந்து சீட்டில் பதிவு எண் இருக்காது. ஒரு வேளை பதிவு எண் இருந்து, உங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டால்
சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவமனையின் இணையதளத்தில் பதிவிட்டால் போதும். அம்மருத்துவர் குறித்த அனைத்து விவரங்களும் உங்களின் கைகளுக்குக் கிடைத்து விடும்.

2. அவர்கள் மருந்து சீட்டில் குறிப்பிடும் மருந்துகளுக்கான குறிப்புகள் அவர்களுக்கு மட்டும் புரியும் படி பார்த்துக்கொள்வார்கள்.
( அதன் வடிவம் a,b,c என இருக்கும் எனக் கூறப்படுகிறது)

3. அவர்கள் கொடுக்கும் மருந்து பாட்டில்களில், அந்த மருந்து குறித்த எந்த விவரங்களும் இருக்காது. அப்படி ஏதேனும் விவரங்கள் இருந்தால் அதுவும்
( a,b,c என இருக்கும் என்று கூறப்படுகிறது). அது குறித்து நோயாளிகள் கேட்டால் அது அவர்கள் மருத்துவத்தின் ரகசியம் எனக்கூறுவார்கள்.

4. அதே போல் நோய் குறித்த அடிப்படை விளக்கத்தைக் கூட நோயாளிக்குச் சொல்ல மாட்டார்கள். ஆகவே மக்கள் சித்த மருத்துவர்களை அணுகும் போது நோய் குறித்த விளக்கங்கள், அதற்காக நீங்கள் சாப்பிட இருக்கும் மருந்து குறித்த விளக்கத்தையும் தவறாமல் கேட்டுப்பெற வேண்டும்.

5. இம்மாதிரியான மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தின் விலை சராசரியாக 3000லிருந்து ஆரம்பிக்கும். சிகிச்சை நீண்டு கொண்டிருக்க மருந்தின் விலையும் 7000, 14000 என நீண்டு கொண்டேச் செல்லும்.

6. அதே போல மருந்துகளை எவ்வளவு கால அளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கத்தைக் கொடுக்க மாட்டார்கள்.

7. இவர்கள் குறிவைக்கும் நோயாளிகள் யார் என்றால் ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை பிரச்னைகளைக் கொண்டவர்கள். காரணம் இந்தப் பிரச்னைகள் குறித்து மக்களிடம் போதிய அறிவு இல்லை. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் இந்தப் போலிகள் அவர்களின் பயத்தில் குளிர் காய்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com