புலிகள் ஏன் மேன் ஈட்டராக மாறுகின்றன...? சுட்டுக் கொல்வதுதான் தீர்வா..?

புலிகள் ஏன் மேன் ஈட்டராக மாறுகின்றன...? சுட்டுக் கொல்வதுதான் தீர்வா..?
புலிகள் ஏன் மேன் ஈட்டராக மாறுகின்றன...? சுட்டுக் கொல்வதுதான் தீர்வா..?
Published on

ஒரு காலத்தில் இந்தியாவில்தான் அதிகளவிலான புலிகள் காடுகளில் வசித்து வந்தன. ஆனால், நம் முன்னோர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டை என்ற பெயரில் புலிகளை கொன்று தங்கள் அரண்மனைகளில் அலங்காரப் பொருள்களாக பதப்படுத்தி வைக்க தொடங்கினர். மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் புலிகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், மறைமுகமாக புலியின் தோலுக்காகவும் பற்களுக்காகவும் கள்ளத்தனமான வேட்டைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனையடுத்து புலிகள் வேட்டையை தடுக்க சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டது. பின்பு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டு, 2006 இல் நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி 2006 இல் நாடு முழுவதும் 1411 புலிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த அந்தந்த மாநில வனத்துறையும், தன்னார்வ அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. புலிகள் காப்பகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு புலிகள் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2010 கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்ந்தது. இதன் எண்ணிக்கை 2014 இல் 2226 எனவும், இறுதியாக 2019 இல் வெளியிடப்பட்ட கணக்கின்படி 2967 புலிகள் நாடு முழுவதும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. வன உயிரின ஆர்வலர்களிடம் புலிகளின் எண்ணிக்கை உயர்வு மகிழ்ச்சியை கொடுத்தாலும், நாட்டில் அவ்வப்போது புலிகளின் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

ஆம் புலிகளின் உயிருக்கு, வனத்துறையே சில மாநிலங்களில் காவு வாங்குகிறது. அதற்கு பெயர்தான் "என்கவுன்ட்டர்". ஆம் குற்றவாளிகளை போலீஸ் சில நேரங்களில் என்கவுன்ட்டர் செய்து கொல்லும். அதேபோலதான் "மேன் ஈட்டராக" மாறும் புலியை வனத்துறையினர் என்கவுன்ட்டர் செய்து கொல்வார்கள். தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை. அண்மையில் மகாராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்பட்ட ஆவ்னி என்ற பெண் புலி 13 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் புலியை அம்மாநில வனத்துறை சுட்டுக்கொன்றது.

எப்போது ஒரு புலி மேன் ஈட்டராக மாறுகிறது ?

பொதுவாக ஒரு புலி எப்போதும் மனித மாமிசத்தை விரும்பாது. புலிகள் ஒரு கூச்சசுபாவம் கொண்ட விலங்கினம் என்று உலகப் புகழ்ப்பெற்ற வேட்டைக்காரரும் காட்டுயிர் ஆர்வலருமான ஜிம் கார்பட் தனது புத்தகங்களில் கூறியுள்ளார். மனிதனின் வாடையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிடும். உதாரணத்துக்கு ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. அந்த மானை சில மணி நேரம் வைத்து அதன் மாமிசம் லேசான பின்புதான் உண்ணும். அப்படிப்பட்ட நிதானமான குணமுடையது புலி. ஒரு புலியின் அதிகப்பட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வயதான புலிகளே பொதுவாக மேன் ஈட்டராக மாறும் என்று சில விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சில புலிகள் காயத்தின் காரணமாகவும் மேன் ஈட்டராக மாறும். அதாவது, வயோதிகம் காயம் காரணமாக அதனால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாது. எனவே, அப்போது ஒரு மனிதனின் ரத்தத்தை ருசித்துவிட்டால், பின்பு அது மனிதனை மட்டுமே வேட்டையாடும் மேன் ஈட்டராக மாறிவிடும். ஒரு பெண் புலி மேன் ஈட்டராக மாறிவிட்டால் அதன் குட்டிகளும் எதிர்காலத்தில் அதாவது வயதான பின்பு மேன்ஈட்டராக மாறிவிடும் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேன் ஈட்டர்களை சுட்டுக்கொல்ல வேண்டுமா ?

ஊருக்குள் புகும் மேன் ஈட்டர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு 1997 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் சுற்றித் திரிந்த மேன் ஈட்டர் புலி மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பிறகு, இந்தப் புலி வன உயிரியல் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டது. பின்பு அந்தப் புலி இயற்கையாகவே மரணம் அடைந்தது.

இது குறித்து முன்னாள் வன உயிர் காப்பாளரும், சூழலியல் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன் கூறும்போது " காட்டில் சுற்றித் திரியும் புலிகளை கூண்டில் அடைப்பது மரணத்தை விட கொடுமையானது. மேலும், உயிரியல் பூங்காவில் மேன் ஈட்டர் புலிகளைப் பராமரிப்பது சிரமம். இட நெருக்கடி ஏற்படும். உலகின் எல்லா இடங்களிலும், மேன்ஈட்டர் புலிகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைச் சுட்டுக் கொல்லும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேன் ஈட்டர் புலிகளை சுட்டுத்தான் கொல்ல வேண்டும்; இது அறிவியல் சார்ந்த விஷயம். இதில் கருணைக்கு இடம் கிடையாது. ஒரு புலி வயதான பிறகோ, காயமடைந்த பின்னரோ தனது இறையை வேகமாக ஓடி வேட்டையாட முடியாமல் போகும். இதனால் மனிதனையும், கால்நடைகளையும் தாக்கி உணவாக்கி மேன் ஈட்டராக உருவாகிறது. இதை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து உயிரியல் காப்பகத்தில் வைத்து பராமரிப்பதால் எந்த உபயோகமும் இல்லை. அப்படி பராமரித்தால் அரசாங்கத்துக்கும் லட்சக்கணக்கில் செலவாகும். மேலும், அரசின் நோக்கம் காடுகளில் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதே. அவற்றைக் கூண்டில் அடைத்து என்ன செய்யப் போகிறோம்? மேன்ஈட்டர் புலி காட்டில் இருந்தால், சக புலிகளுக்கும் ஆபத்துகளை உருவாக்கக் கூடும். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், காடுகள் சுருங்கி வருவதுமே பிரச்னைக்கு காரணம். தென்னிந்தியாவில் மேன் ஈட்டர் புலிகள் அரிதே" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com