இனி வருங்காலத்தில் மொழிப் பயன்பாடுகள் எங்கெல்லாம் அருகுகின்றன, எங்கெல்லாம் தொடர்ந்து மிகுகின்றன என்று பார்க்கவேண்டும். எழுத்து சார்ந்த அறிவிப்புகள் பல இடங்களில் புதிதாகத் தோன்றுகின்றன. மேலும் பல இடங்களில் அருகிப் போகவும் வாய்ப்புகள் உள்ளன.
தனிப்பட்ட கருவி உரையாடல்கள் எழுத்துத் தொடர்களிலிருந்து விலகி அவரவர் குரல் பதிவுகளில் செல்லக்கூடும். அன்றேல் குரலை எழுத்தாக்கும் செயலிகள் இன்னும் பன்மடங்கு மேன்மை பெற்று வளரக்கூடும். இவ்விரண்டும் ஒருவர் தம் மொழியை எவ்வளவிற்குக் கூறவல்லவர் என்பதனைச் சார்ந்து இருக்கும்.
எழுதுவதனை அடிப்படையாகக்கொண்ட இயற்றல் தொழில்கள் எப்போதும்போல் கூடுதல் கூட்டத்தாரோடு தொடரும் என்றே நினைக்கிறேன். எழுதுவோரின் வளர்ச்சிக்கேற்ப அவற்றைப் படிப்போரின் திரளும் சற்றே உயரலாம். எப்படிப் பார்த்தாலும் மொழியின் தேவைப்பாடு தொடர்ந்து மிகுந்துகொண்டேதான் போகும்.
பத்துக் கோடியிலான மக்கள் தொகையினர் தமிழ் மொழியினைப் பல்வேறு தளங்களில் எடுத்தாளப் போகின்றனர். அவர்கட்குப் பேச்சு முதற்கொண்டு பெருங்கவிதைவரைக்குமான அனைத்தும் தமிழில் நிகழும். எண்ணிப் பாருங்கள், வரலாற்றில் இவ்வளவு பேரளவிலான மக்கள் தொகையினர் இம்மொழியினைப் பயன்படுத்தி ஆள்வது நம் காலத்தில்தான் நிகழவுள்ளது.
அதனால் தமிழுக்கு நேரும் எத்தகைய மேன்மைகளும் புதுமைகளும் அதன் பயன்பாட்டு வளத்தினைப் பன்மடங்கு பெருக்கி உதவும். இப்பெருந்தொகையினரால் இம்மொழிக்கு நாலாப்பக்கங்களிலிருந்தும் பல்வேறு கிளைநகர்வு முயற்சிகளும் நடக்கலாம். மொழியை வேறொன்றாக இழுத்துக்கொண்டு செல்லும் முயற்சி.
எழுத்தில் வேறு நடைமுறைகள் பின்பற்றப்படலாம். பேச்சில் புதுமைகள், வட்டார வளர்ச்சிகள் ஏற்படலாம். ஒருவேளை இவை அனைத்திற்கும் மாறாக அனைத்திலுமான பொதுச்சீர்மையும் அடையலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவரையிலான தமிழ்ப்பயன்பாட்டின் பேரளவைக் கணக்கில்கொண்டு பார்க்கையில் மொழியானது திரண்டு ஒன்றுபட்டு பொதுவளப்பாங்கு பெற்றிருப்பதையே உணர்கிறேன்.
வட்டார வழக்கின் பேச்சு முறைகள் மெல்ல ஒழுங்குக்குட்பட்டு பொதுப்பேச்சுமுறைக்குள் ஒருங்குபடுகிறது. பள்ளிக் காலத்தில் கோயம்புத்தூர் வழக்கினில் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த நான் தொழில்வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவுடன் வட்டார வழக்கின் இசையினைப் பேரளவு இழந்துவிட்டேன். பொதுவான பேச்சுத் தமிழ் முறைக்கு வந்துவிட்டேன். இத்தகைய மாறுபாட்டினை நகர்நாடிய பலரும் உணர்ந்திருப்பார்கள்.
வட்டார வழக்கினர் பொது வழக்கிற்கு நகர்வது நல்லதும் கெட்டதுமான விளைவேயாம். எழுத்துத் தமிழானது இயல்பான பழைய சொற்றொடர் அமைப்புகளிலிருந்து மேம்பட்டு இன்னும் புதிய கூறல் முறைகளை அமைத்துப் பார்க்கிறது. அவற்றில் செம்மை இல்லாவிடினும் புதிய முயற்சியாக ஏற்றுக்கொள்ளலாம். இருபது முப்பதாண்டுகட்கு முன்னர் ஆண்டுக்குச் சில நூறு புத்தகங்கள் வெளியாகியிருக்கலாம்.
ஆனால், தற்போது சில ஆயிரங்களில் புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. ஓர் எழுத்தாளர் ஓராண்டில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுகிறார். பரபரப்பாகச் செயல்படும் பதிப்பகங்கள் ஓராண்டிற்கு ஐம்பது முதல் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் போகிற போக்கில் வெளியிடுகின்றன. இருபதாண்டுகட்கு முன்பிருந்த இதழ்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று. புத்தகங்கள் எழிலாகத் தொங்கும் பேருந்து நிறுத்தப் பெட்டிக்கடைகள் தற்போது இல்லை.
நாளிதழ்கட்குக் கிடைப்பதுபோல் கிழமை, திங்கள் இதழ்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அவை இணைய வெளியீட்டுக்கு மாறிக்கொண்டுள்ளன. கிழமை இதழ்கள் சிலவற்றின் உயரம் அரைச்சாண் அளவிற்குச் சிறுத்துவிட்டன. மக்களும் கைப்பேசியும் கையுமாக வாழப் பழகிவிட்டதால் ‘எல்லாவற்றையும் கைப்பேசி வழியாகத் தா’ என்று கூறாமல் கூறிவிட்டனர். அதனால் இதழெழுத்து என்பது நாளிதழ்களில் அடங்கிவிட்டது. கிழமை இதழ்கள் தத்தம் பெரும்பழைமையை, தொடர்ச்சியை இழக்கலாகாது என்னும் நோக்கத்தோடு வெளிவருகின்றன.
இந்தக் குமுகாயத்தின் தவிர்க்க முடியாத உறுப்பாக விளங்கிய அவ்விதழ்கள் இனி என்னாகும் என்பதைக் காலம் முடிவு செய்யும். ஆனால், அவை மொழியைத் தொடர்ந்து பரப்பிப் பங்காற்றின என்பதற்காக என்றும் நன்றியுடையோம்.
இனி இணைய ஊடக எழுத்தும் இணையப் பயன்பாட்டு மொழியும்தான் தமிழுக்கான செயற்களப் பெருவெளிகள். அங்கே எழுதுவோர்தான் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வோர் ஆவார். இணைய ஊடகத்தில் எழுதுவோரில் பலர் இதழ்த்துறையிலிருந்து பண்பட்டு வந்தவர்கள். அவர்களில் யாருடைய மொழியிலும் குறைகூறுதற்கில்லை.
இன்றும் அவர்களுடைய இணையச் செயல்பாடு பொருட்படுத்தத் தக்கதாய் இருக்கிறது. அடுத்தடுத்து வருகின்ற இளைய தலைமுறையினர்க்கு மொழிப்பயிற்சியும் உரிய கல்வியும் கிடைக்குமாயின் அவர்களும் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவர். மொழியின் அடுத்த கட்டப் பாய்ச்சல் அப்போது நிகழும்.