'சவாலான கேரக்டர்கள்தான் சாய்ஸ்' - மலையாள சினிமாவில் தடம் பதிக்கும் அன்னா பென்!

'சவாலான கேரக்டர்கள்தான் சாய்ஸ்' - மலையாள சினிமாவில் தடம் பதிக்கும் அன்னா பென்!
'சவாலான கேரக்டர்கள்தான் சாய்ஸ்' - மலையாள சினிமாவில் தடம் பதிக்கும் அன்னா பென்!
Published on

'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஹெலன்', 'கப்பேலா', 'சாராஸ்' என நடித்த நான்கு படங்களையும் ஹிட்டாக்கி மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் அன்னா பென். இருபத்தாறே வயதில் அன்னா பெற்றுள்ள இந்த இடம் மிக முக்கியமானது. பார்ப்பதற்கு நம்ம வீட்டு பெண் போல் இருக்கும் அன்னா, இந்த இடத்தை எப்படி அடைந்தார் என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அன்னா பென் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க இளம் நடிகைகளில் ஒருவர். மிகக் குறுகிய காலத்தில், அன்னா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ஒரு நடிகையாக மாறியிருக்கிறார். ‘பேபி’யாக (கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் கேரக்டர் பெயர்) மலையாள சினிமாவில் அறிமுகமாகிய அன்னா பென் இதுவரை நடித்தது நான்கு படங்கள்தான். இந்த நான்குமே வெற்றிப் படங்கள். மிகக் குறுகிய காலத்தில், அன்னா பென் மலையாள சினிமாவின் நம்பிக்கைக்குரிய கதாநாயகியாக வளர்ந்துள்ளார்.

சினிமா திரைக்கதை எழுத்தாளரின் மகளாக வளர்ந்தபோதிலும், சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை பிற்காலத்தில் ஒரு நடிகராக இருப்போம் என்ற எந்த நினைப்பும் இல்லாமல் இருந்தவர் அன்னா பென். தந்தை பென்னி நாயரம்பலம்மின் மூலமாக மலையாளத் திரையுலகின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தாலும், ஒருநாள் கூட நடிப்பு பற்றி அவர் யோசித்தது இல்லை. ஏன் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போதும், 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதும், மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லால் ஜோஸ் நடிக்க அழைப்பு விடுத்தபோதும் அதனை நிராகரித்தே வந்துள்ளார் அன்னா.

படிப்பில் கவனம் செலுத்தி வந்தவர் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு பெங்களூருவில் ஒரு வருடம் பணியாற்றி கொண்டிருந்த தருணம். ஒருமுறை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். அந்த விடுமுறைதான் அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. விடுமுறைக்கு வந்தவருக்கு, அவரின் தந்தை பென்னி மூலமாக 'கும்பளாங்கி நைட்ஸ்' படத்தின் ஆடிஷன் பற்றி கேள்விப்பட்டு அதற்கு புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார். ஆசையுடன் புகைப்படங்களை அனுப்பினாலும், ஆடிஷன் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லை. இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போதே, இதுபோன்று ஒரு படத்தின் ஆடிஷனுக்கு புகைப்படங்களை அனுப்பி, அதில் தேர்வாகாததால், இந்த முறை எந்த நம்பிக்கையும் இல்லாமல், புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் நினைத்ததுக்கு மாறாக, 'கும்பளாங்கி நைட்ஸ்' படக் குழு அவரை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறது. இதன்பின் சோதனை முயற்சியாக ஆடிஷனிலும் அன்னா கலந்துகொண்டுள்ளார். மூன்று, நான்கு முறை நடந்த ஆடிஷனில் இறுதியாக அன்னா தேர்ந்தெடுக்கப்பட, தான் படத்தில் நடிக்க இருக்கும் விஷயத்தில் முதலில் தாயிடமே பகிர்ந்துள்ளார்.

மீன்பிடித்தல், கயறு பின்னுதல் என்னும் இயற்கையோடு இயைந்திருக்கும் கேரளாவின் கும்பளாங்கி தீவில், மற்ற குடும்பங்களிடம் இருந்து தனித்து வாழும் நான்கு சகோதரர்களுக்கும், இந்த நான்கு சகோதரர்களில் ஒருவரை காதலிக்கும் பேபியாக அன்னா நடித்திருப்பார். முதல் படம்தான் என்றாலும் அவ்வளவு இயல்பாக பேபி கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதனால் படத்தின் வெற்றியை தாண்டி அன்னா பென் தனிப்பட்ட முறையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

அடுத்து 'ஹெலன்'. இந்தப் படத்தின் வாய்ப்பு அன்னாவுக்கு கிடைத்தன் பின்னணியில் முக்கிய நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் 'ஹெலன்' படத்தில் அன்னாவுக்கு அப்பாவாக நடித்த லால். லாலும், அன்னாவின் தந்தை பென்னியும் நல்ல நண்பர்கள். இதனால் அன்னாவின் சிறிய வயது முதலே அவரை நன்கு அறிந்த நபராக இருந்த லால், 'ஹெலன்' கதையை கேட்டவுடன், அதில் அவரை நடிக்க அணுகியிருக்கிறார்.

வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஹெலன், தவறுதலாக ஃப்ரீசர் ரூமில் மாட்டிக்கொள்வதும், அவர் காணாமல் போய்விட்டார் என்று நினைத்து ஒருநாள் இரவு முழுவதுமாக, அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதும்தான் கதை. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான படத்தை, மதுக்குட்டி சேவியர் இயக்கி இருந்தார். அன்னாவுக்கு இது இரண்டாவது படம். இரண்டாவது படத்திலேயே ஃப்ரீசர் ரூமில் மைனஸ் 10 டிகிரி டெம்பரேச்ரில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக, உண்மையாக அந்த மைனஸ் 10 டிகிரியில் படமாக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பில், கேமராவுக்குப் பின்னாடி இருந்து வேலை பார்த்த எல்லாரும் குளிருக்கு ஏற்ற டிரஸ் அணிந்திருக்க, அதுபோன்ற டிரஸ்ஸை அணிந்துகொள்ளாமல் அந்தக் குளிரில் நடித்து கொடுத்துள்ளார் அன்னா பென். படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இப்போது மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

அன்னாவின் மூன்றாவது படம் 'கப்பேலா'. ரோஷன் மேத்யூ, ஶ்ரீநாத் பாஸி என இளம் நட்சத்திரங்கள் உடன் அன்னா முக்கிய கதாபாத்திரமாக இணைய இந்தப் படத்தை முகமது முஸ்தஃபா என்பவர் இயக்கி இருந்தார். கொரோனா முதல் லாக்டவுன் அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு பெண் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் சந்திக்கும் இரண்டு ஆண்கள். நல்லவன், கெட்டவன் தெரியாத அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் அந்தப் பெண் சந்திக்கும் பிரச்னைதான் கதை. இந்தப் படத்திலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் அன்னா.

சமீபத்திய ரிலீசாக அன்னா பென் நடிப்பில் வெளிவந்தது 'சாராஸ்'. ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கும் சாரா கேரக்டரில் அன்னா பென் நடித்திருந்தார். பள்ளி நாள்களில் ஒரு சில காதல்களைக் கடந்து வந்த சாரா, 25-ம் வயதில் சந்திக்கும் நபரின் மேல் காதல் வயப்படுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற முடிவுடன் பள்ளி நாள்கள் முதலே வளரும் சாரா தன் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவதும், இந்த சூழ்நிலையை கடந்து சாரா தனது சினிமா கனவை நிறைவேற்றினாரா, இல்லையா என்பதே கதை.

கடந்த மூன்று படங்களிலும் தனிக் கவனம் ஈர்த்த அன்னா பென் இப்படத்தில் சாரா வின்சென்ட்டாக ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை பாத்திரமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதே படத்தில் இவரின் தந்தையாக வந்த வின்சென்ட்டே, உண்மையான தந்தை பென்னியே.

அன்னா பென் நடிப்பில் சிறந்து விளங்க அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளே காரணம். ''இது என் கரியரின் ஆரம்ப காலகட்டம். அதனால் புதிய முயற்சிகளை சோதனை செய்வது, சவாலான கேரக்டர்கள் ஏற்று நடிப்பது என்ற கொள்கையுடன் கதைகளை கேட்பேன். நான் செய்கிற ஒவ்வொரு கேரக்டர்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் அதற்காக நிறைய மெனக்கெடுகிறேன்" என்று பேட்டி ஒன்றில் தனது கதை தேர்வை பற்றி பேசியிருக்கிறார் அன்னா பென். இந்த தன்மையே மிக குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் நம்பிக்கைக்குரிய கதாநாயகியாக, ரசிகர்கள் விரும்பும் நாயகியாக அன்னா பென்னை மாற்றியிருக்கிறது. மேலும், அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். மலையாளத்தின் 'மோஸ்ட் வான்டட்' இயக்குநர் ஆஷிக் அபுவின் 'நாரதன்' போன்ற அரை டஜன் படங்கள் இப்போது அன்னா பென் கையிலிருக்கிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com