ஒரு வீட்டை சிலர் புதிய பொருட்களால் அலங்கரிப்பாங்க. சிலர் பழைய பொருட்களை தேடித் தேடி வாங்கி அலங்கரிப்பாங்க. இந்த தொகுப்பில் நாம், ஆண்டிக் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு மதுரையில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் சிறப்பை பார்க்கலாம்.
“ஒவ்வொருத்தரும் வீடுகளை எந்த மாதிரி கட்டிட்டு இருக்காங்க என்ற தகவல்களை சேகரித்து, அதில் எங்கள் குடும்பத்தினருக்கு பிடித்தவாறு வீட்டை கட்டலாம் என்று முடிவு செய்தோம். வீட்டிற்குள் ஏசி வைக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். அதற்காகத்தான் ரேட் ட்ராப் (Rat Trap Bond) முறைப்படி சுவர் எழுப்பியிருக்கோம். இதன்மூலம் வீட்டிற்கு வெளியே இருக்கும் வெப்பம் வீட்டினுள் வரும்போது மாறுவதை அறிய முடிகிறது. அதேபோல கதவுகள் மற்றும் கண்ணாடி அதிகமான வெப்பத்தை உள்வாங்கும் என்பதால், ஜன்னல்களுக்கு அதிகமாக கண்ணாடியை பயன்படுத்தவில்லை. மாறாக மரத்தை பயன்படுத்தி இருக்கிறோம். இதனால், வீட்டினுள் வெப்பம் குறைவாக இருக்கிறது” வீட்டின் உரிமையாளர் விவேக் ராஜ்.
இந்த வீடு கட்டியுள்ள பகுதி களிமண் பூமி என்பதால் 5 அடி ஆழத்துக்கு பவுண்டேசன் (Foundation) போடப்பட்டுள்ளது. கற்கள் மற்றும் சிமெண்ட் பயன்படுத்தி பவுண்சேன் (Foundation) போடப்பட்டுள்ளது. அதுக்கு மேல் பிளின்த் பீம் (Plinth Beam). இந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரை கடந்து உள்ளே வர கேரளாவில் உள்ளது போல் படிப்பூரா (Padippura) அமைப்பில் நுழைவு வாயில் வைக்கப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள ஆர்ச் போல இருக்கும் இந்த அமைப்பு இந்த வீட்டின் நுழைவு வழி இங்கேதான் இருக்கிறது என்பதை கூறுவது போல் உள்ளது. காம்பவுண்ட் நுழைவு வாயிலில் செட்டிநாடு கட்டடக்கலை அமைப்பில் உள்ள தூண் கற்களை, படிக்கட்டுகளாக மாற்றி அமைத்திருந்தார்கள். அதேபோல் வீட்டினுள் நுழையும் இடத்தில் உள்ள படிக்கட்டுக்கு தேவகோட்டையில் இருந்து வாங்கி வந்த கற்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டினுள் நுழைந்தவுடன் அமைக்கப்பட்டுள்ள திண்ணையில் அமர்ந்தால், சுற்றி நான்குபுறமும் பார்க்கலாம். அப்படி வ்யூ அமைக்கப்பட்டுள்ளது. திண்ணை அமைப்பின் தரைத்தளத்துக்கு மறு பயன்பாடு செய்யப்பட்ட பழமையான டெரக்கோட்டா டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல திண்ணையின் இருக்கைக்கு புதிய டெரக்கோட்டா டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. திண்ணை ரூஃபிங் அமைப்பை தாங்கிப்பிடிக்க செட்டிநாடு தூண்களை பயன்படுத்தி உள்ளனர்.
வீட்டுக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்பது ஓப்பன் டைனிங் ஏரியாவுடன் கூடிய பெரிய ஹால். மற்ற வீடுகளில் இருக்கும் ஹால் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்கும். ஆனால், இந்த வீட்டில் இருக்கும் ஹால் எந்த அளவில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது. அதேபோல் பே விண்டோஸ் (Bay Windows) அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் காற்றை அனுபவிப்பதே சிறப்புதான்.
அடுத்ததாக இந்த வீட்டின் ஓப்பன் டைனிங் ஏரியா. இங்கேயும் இரண்டு பே விண்டோஸ் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த வீட்டில் L Shape சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. கிச்சன் சிலாப்-க்கு ஒயிட் கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிச்சன் பக்க சுவருக்கு வெர்டிஃபைடு டைல்ஸ் (Vitrified Tiles) பயன்படுத்தப்பட்டுள்ளது. சமையலறையின் காற்றோட்ட வசதிக்காக 3 ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் உள்ள சமையலறை மற்றும் பாத்ரூம் ஆகிய இரண்டு பகுதியில் உள்ள சுவர்கள் மட்டுமே பூசப்பட்டுள்ளது. மற்ற சுவர்கள் அனைத்தும் பூசப்படவில்லை.
இந்த வீட்டின் ஹால் எப்படி இருக்கிறதோ அதேபோல இந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள பெட்ரூமும் இருக்கிறது. இதுவும் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக மாடிக்கு போகும் படிக்கட்டு இரண்டு விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று தேக்கு மரத்தால் ஆன படிக்கட்டு, அதைத் தொடர்ந்து கிரானைட் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள படிக்கட்டு. இந்த இரண்டு படிகளிலும் ஏறி மேலே சென்றால் தட்டக்கல் (சின்ன செங்கல்) பயன்படுத்தி ஜாலி ஒர்க் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் முதல் மாடியில் ஒரு ஹால் இருக்கிறது. இந்த ஹாலும் பார்ப்பதற்கு வித்தியாசமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஹாலுக்கு ஸ்லோப் ரூப் போட்டுள்ளனர். அதனால் வீட்டின் வெளிப்புறமும் ஹாலின் உட்புறமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த வீட்டினுள் இருக்கும்போது, வெளியே உள்ள வெப்பத்திற்கும் வீட்டினுள் இருக்கும் வெப்பத்திற்கும் ரொம்பவே வித்தியாசம் தெரிகிறது. வீடு முழுவதுமே வெப்பம் குறைவாக இருப்பதை உணரமுடிகிறது. ரேட்ராப் பாண்ட் முறையில் சுவர் எழுப்பப்பட்டதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த முறையில் செங்கலை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கும்போது அதன் இடைவெளியில் காற்றோட்டம் நன்றாக இருக்கும் அதனால் வீட்டினுள் வெப்பம் குறைவாக காணப்படுகிறது.
இந்த வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை. அதேபோல சீலிங் அமைக்க தேக்கு மர பலகையும், ரூபிங் அமைக்க டெரக்கோட்டா டைல்ஸ் பயன்படுத்தி உள்ளனர். இந்த இரண்டு மெட்டீரியலும் இந்த வீட்டிற்கு தெர்மல் இன்சுலேசனாக பயன்படுகிறது. அதனால் இந்த வீட்டில் ஏசி பயன்படுத்தப்படவே இல்லை.
இந்த வீட்டின் முதல்தளத்தில் ஒரு பால்கனி இருக்கிறது. இங்கும் பே வின்டோ போல ஒரு செட்அப் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்து ஒரு வீடு கட்டும்போது, அந்த இயற்கையில் இருக்கும் சில விஷயங்களை நாம் தவிர்க்க முடியாது. பெயரளவில் இல்லாமல், இயற்கை சார்ந்த விஷயங்களை உண்மையிலேயே மதிப்பது என்பதை இந்த வீட்டில் பார்க்க முடிந்தது. இந்த வீட்டில் பிளின்த் ஃபீம் போடப்பட்டுள்ளது. ஆனால் லிண்டல் ஃபீம் போடப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டுபுறமும் செங்கல் வைத்து நடுவில் கம்பிவைத்து கான்கிரீட் கலவையால் நிரப்பப்படும் பிக் லிண்டல் ஃபீம் போட்டுள்ளனர். இதனால் கம்பி மற்றும் கான்கிரீட் செலவு குறைவாகும்.
இந்த வீட்டில் சீலிங் அமைக்க ஃபில்லர் ஸ்லாப் போடப்பட்டுள்ளது. அதேபோல் ஃபில்லர் ஸ்லாப் ஃபில்லிங் மெட்டீரியலாக டெரக்கோட்டா டைல்ஸ் போடப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் மொத்த சதுரடி 1800. செலவு, வெறும் 38 லட்சம் ரூபாய்.